கருவில் சுமந்தவளே!
என்னை உலகிற்கு பிரசவித்தவளே... பாசத்தினை எல்லோரிடமும் பகிர்ந்திடுபவளே... மனதால் எல்லோரையும் அரவணைப்பவளே... என் கருவிழியோரம் உந்தன் நிழல் அம்மா... விண்ணை அரசாண்டிடும் நிலா ஒளியில் கூட உன் முகத்தினை பார்த்திட தினந்தோறும்தவமிருப்பேன் என்னைக் கருவில் சுமந்தவளே! உன்னைவிட்டு நெடுதூரம் வந்ததால் இதயம் வலிக்குதம்மா... விழியோரம் கண்ணீர்த் துளிகளம்மா... என் வாழ்வில் உன் தென்றல் காற்றே இல்லையம்மா... உன் நிழலினை பூசித்திட ஏங்குபவன் அம்மா... தென்றல் காற்றாக என்னைத் தொட்டுத் தாலாட்டதினந்தோறும் வரமாட்டாயோ? என்னைக் கருவில் சுமந்தவளே! மெளனமாக இருந்தாலும் மனம் உன்னையே தேடுதம்மா... விழி மூடுகையிலும் உன் நினைவுகளே என்னைத் தாலாட்டுதம்மா... கண் தூங்குகையிலும் தலையணையும் நனையுதம்மா உன் நினைவாலே... மறு பிறவியிலும் உனக்கே குழந்தையாகப் பிறந்திட வேண்டும் என்னைக் கருவில் சுமந்தவளே...! -ச. சாந்தன் |
என் தாய்!
பார்த்துப் பார்த்து வளர்த்தவள் பாலுடன் பண்பை ஊட்டியவள் பாசத்தையும் சேர்த்தே கொடுத்தவள் பரந்த உலகம் புரிவித்தவள் பலதும் காட்டி நடந்தவள் பன்முகத் திறன் சேர்த்தவள் பறக்கும் கனவு உருவாக்கியவள் பலவிரவு நனவாக்க விழித்திருந்தவள் பாதம் நோக எனக்காய் நடந்தவள் பார்வையில் எனை மட்டுமே கண்டவள் பலன் பாரா அவள் முகம் காண பரிதவிக்கிறேன் சிறு கோழிக்குஞ்சாய் பாரின் ஓர் மூலையில் இன்று நான் கொண்டு சேர்க்குமா விதி பள்ளிச் சிறுமியாய் மடிசாய்வேனோ? பயமின்றிக் கண்மூடி தூங்கி மகிழ்வேனா? -அல்விற் |