"ஏக்கம்"
பாடசாலைப் பொழுதினை முடித்துக்கொண்டு திரும்புகையில் எல்லோர் மனதிலும் கலகலப்புத் தெரியும். ஆனாலும் அந்தக் கலகலப்பு வீட்டுவாசலுடன் தொலைந்துவிடும். வெள்ளை உடுப்பு மண்ணிறமாக மாறியிருப்பதை கண்டவுடன் அம்மா கத்தத் தொடங்குவா. ஆனாலும் அது இரண்டு நிமிடமே நீடிக்கும். பாசத்துடன் தரும் தேநீரும் புண்ணாக்கும் கப்பல் வாழைப்பழமும் எனக்குப் புத்துணர்ச்சி தரும். மாலையில் அப்பா அம்மாவிற்குத் தெரியாமல் கடற்கரைக்குச் செல்கையில் மருதடி விநாயகரை கும்பிட்டுவிட்டு ராணியக்கா கடைக்கருகில் உள்ள ஒழுங்கையால் சென்று கடற்கரையை அடைய கருவாட்டு சிற்பம் கட்டுபவர்களும் அதனை லொறியில் ஏற்றுபவர்களும் அங்குமிங்குமாகத் திரிவார்கள். அதனைத் தாண்டிச் சென்று சடுகுடுவும் கள்ளன் பொலிசும் விளையாடும் இளைஞர்களுடன் சேர்ந்து விளையாடுவேன். நாங்கள் விளையாடிக் கொண்டு இருக்கும்போதே ஆதவன் அஸ்தமிக்கத் தொடங்குவான். காகங்கள் கரைந்து கொண்டு இருப்பிடம் தேடிச்செல்ல சோத்துப்பெட்டியுடன் அலைகளுடன் போட்டியிட்டு மீன்பிடிக்கச் செல்லுவார்கள் பெரியோர்கள். அவர்களை வீட்டுவாசல்களிலும் கடற்கரையோரத்திலும் நின்று சங்ககால மங்கையர்கள் போல பெண்கள் வழியனுப்பி வைப்பார்கள். விளையாடிவிட்டு வீடு திரும்புகையில் உன்னை திருத்தவே முடியாது என்று அம்மா மீண்டும் கத்தத் தொடங்குவார். நான் அதனை ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டவன் போல் கை, கால், முகம் கழுவி இறைவனை வணங்கி படித்துக் கொண்டு இருக்கையில் அம்மா இரவு சாப்பாடு செய்யும் வாசனை என்னை பலமாக புரட்டி எடுக்கும். அம்மா வாங்க சாப்பிட என்று கூப்பிடும் பாசமான குரல் கேட்டவுடன் முதலாவதாக எனது கோப்பையுடன் நிற்பேன். அங்கும் எனக்கு ஒரு சிறப்பு என்னவென்றால் கடைப்பெடியன் என்று எல்லோரும் பாசத்துடன் விட்டுக் கொடுப்பார்கள். சாப்பிட்டவுடன் அம்மா தலையினைக் கோதி நித்திரையாக்க நானும் ஏதும் கனலையின்றி நித்திரை செய்வேன். இவ்வாறு வளர்ந்த எனக்கு அல்லது எங்களுக்கு 15.06.1990 அன்று மாலை நான்கு மணியளவில் பெரியதோர் இடிவிழுந்தது. உயிரினை பாதுகாப்பதற்காக அன்றே உடுத்திய உடையுடன் மாற்றுடையின்றி எங்கு போவதென்று தெரியாமல் மக்களோடு மக்களாக மருதனாமடத்தை வந்தடைந்தோம். அன்றே எம்முடன் பழகிய தெரிந்த முகங்கள் பலர் கோரச் சாவினை அடைந்தார்கள் என்று அறிந்ததும் மனம் வெந்தது. அன்றிலிருந்து எனக்கு ஒவ்வொன்றும் ஏக்கமாக இருந்தது. மருதனாமடத்தில் இருந்த எனக்கு எனது படிப்பினைத் தொடர்வேனா எனது ஊர் மக்களுடன்சேர்ந்து நமது ஊரில் மயிலிட்டியில் வாழ்வேனா என்ற ஏக்கமே பெரிய கேள்வியாக இருந்தது. அங்கிருந்து நானும் எனது குடும்ம்பத்தினரும் பல மைல் தொலைவில் உள்ள மாமுனை என்ற கிராமத்திற்குச் சென்று குடியேறினோம். அவ்வூர் மக்களின் அரவணைப்பும் எனது குடும்பத்தாரின் பாசமும் எனது ஏக்கத்திற்கு ஒரு மருந்தாக அமைந்தது. அங்கு உள்ள பாடசாலை ஒன்றில் "இடம்பெயர்ந்த" மாணவன் என்ற குறியீட்டுப் பெயருடனே கல்வியினைப் பயின்று கல்வி பொது சாதாரண பரீட்சையில் சித்தியெய்தினேன். தொடர்ந்து அவ்வூரில் படிக்க முடியாததால் அங்கிருந்து இடம்பெயர்ந்து வடமாராட்சி சென்று அங்கு எனது உயர்கல்வியினைப் பயின்று அதிலும் சித்தியெய்தினேன். பட்டாம்பூச்சிபோல் சிறகடித்துப் பறந்து சந்தோசத்துடன் இருக்கும்போது, எனது வாழ்க்கையையே புரட்டிப் போட்ட சம்பவத்தினால் எனது உயிரினைக் காப்பாற்றுவதற்காக கொழும்பு சென்றேன். அங்கிருந்து வெளிநாடு செல்வதற்காக பல முயற்சிகள் செய்து ஏமாற்றங்களும், பல சிறை வாழ்க்கையினையும் சந்தித்து 1999ம் ஆண்டள்வில் நாகரீகத்திற்குப் பெயர்போன நாடான பிரான்சுக்கு வந்தடைந்தேன். இவ்வாறு ஏமாற்றத்தையே வாழ்க்கையாகக் கொண்ட நான் குடும்பத்தாரின் அரவணைப்பாலும் பாசத்தாலும் ஓர் வாழ்க்கையினை வாழ்ந்துகொண்டு இருக்கின்றேன். இருந்தும் என்றுதான் எனது ஊருக்குச் சென்று எனது மண்ணை அரவணைத்து ஊர் மக்களுடன் சேர்ந்து வாழ்வேனோ? என்ற ஏக்கத்துடனேயே எனது பொழுதுகள் கழிகின்றது!!!!!! ச.சாந்தன் |
|