நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
Photo
வணக்கம் அனைவருக்கும்! 

சுனாமி பேரவலத்தின் நினைவையொட்டி 

மயிலிட்டி.fr இற்காக உறவுகளின் படைப்புக்கள்!

அல்விற் வின்சென்ட்

"தனித்திருப்பாய்"

அள்ளி அள்ளிக் கொடுத்தாய்

அண்டியோரை வாழ வைத்தாய்  

அரவணைத்துக் காத்தாய்

துள்ளி விளையாட இடமளித்தாய்

உன் மடியில்

மூச்சடைத்து மூழ்கி

மேலெழுந்து மகிழ

செல்லச் சிணுங்கலுடன்

தள்ளி விட்டுக் கலகலத்தாய்

மல்லாக்காய் மிதந்திருந்து

நிர்மலமாய் .....

நிலாப் போகும் வழியை

இரசிக்க விட்டாய்

கால் நனைத்து தரையிருக்க

சிற்றலையாய் நுரையுடன் 

குமரியின் நளினத்தோடு

ஓடிவந்து தொட்டு விட்டு

கண்சிமிட்டித் திரும்புவாய்

தேர்களெல்லாம்- உன்

மேனியில் பவனி வர

வழி விட்டாய்

உலாவர உல்லாசமாய்

சிரித்திருந்தாய்

நல்லதையும் சுமந்தாய்

கெட்டதையும் தாங்கினாய்

தாயன்பு மட்டுமுனக்குண்டு

என்றெண்ணியிருக்க

பொங்கியதேன் நீ!

மடி கனக்க சுமந்து தாலாட்டிய நீ 

வாரி விழுங்கி கொண்டதேன்

குமரிச் சிணுங்கல்  மறந்து

பேயாய் ஆடியதேன் 

அன்னையாய் கட்டியனைத்தவள்- பல

அன்னையரை சுருட்டிக் கொண்டதேன்

தந்தையரைக் காவு கொண்டதேன்

கண் முன்னே குடும்பமாய்

வெறி கொண்டு அமுக்கியதேன் 

உறவுகளைப் பிரித்து

மகிழ்ந்ததேன் 

அகதியாய் அலையும் உன்

குழந்தைகள் நிலை கண்டும்

நீயுமா சேர்ந்து கொண்டாய்

எமை அழிக்க

என்ன செய்தோமுனக்கு 

பார்  இன்றுன்  நிலையை......

உனைப் பார்த்து ......

இரசிக்க முடியவில்லை

கால் நனைக்க

நெஞ்சு தயங்குகிறது

அருகில் வர பயமாயிருக்கிறது

நீ சேர்த்துக் கொண்டவர் உறவுகள்

நிறை வலியுடன்

பிணமாய் வலம் வருகின்றனர்

உன் கரை மணல் வாரி

திட்டி  ஆறுகின்றனர்

இனியொரு தரம் குமுறாதே 

தாங்க முடியாது

நொந்தது போதும்

அன்னையான உனக்கிது அடுக்காது

அமைதியாய் இருந்து கொள்

வாழ விடு எம்மையும்! 

இல்லையேல்  தனித்திருப்பாய்!


-அல்விற் வின்சன்

பதிவு: 21/12/2012


மயிலை ச. சாந்தன்

"சுனாமி"

காலனவனின் கொடூரமா

கயவனவனின் கொண்டாட்டமா

கலியுகத்தின் திண்டாட்டமா 

கைகூப்பும் ஆண்டவனின் கண்ணாமூச்சியாட்டமா 

அலை அலையென பொங்கியெழுந்த கொடூரனவன்

இரக்கமில்லா இறைவனனுப்பிய சுனாமியவன் 

புன்னகை பூத்த மழலைகளை அள்ளியணைத்த காலனவன் 

தாய் தந்தை சகோதரர்களை சுருட்டியெடுத்த கொடூரனவன் 

காலமும் கண்ணீர் வடிக்கவைத்த அசுரனவன்

மரண தண்டனை கொடுப்பதற்கு 

மாண்டவர்கள் என்ன குற்றவாளிகளா ?

கொடூரம் செய்த கொடுங்கோல் ஆட்சி செய்தவர்களா ?

காமப்பசிக்கு மாண்டவர்களையும்

புசித்த புத்தி பேதலித்தவர்களா ?

பேரன்பு கொண்ட போதிமர உறவுகளை

பேரிரைச்சலோடு காவு கொண்ட சுனாமியே !

அடிநெஞ்சில் னெருடவேயில்லையா உனக்கு

உன் கொடூரப் பசிக்கு எமது உறவுகளையா காவுகொண்டாய் !

பொங்கியெழுந்த கடல்நீரில்

மூழ்கியது எங்கள் உறவு

எங்கள் கண்ணில் பொங்கியெழுந்த கண்ணீரில்

மூழ்கியது சுனாமி கொடூரனவன்

வேண்டவே வேண்டாம் இன்னொரு "சுனாமி" அகவை !


மயிலை ச. சாந்தன்

பதிவு: 23/12/12


மயிலைக்கவி

"கோரத் தாண்டவத்தில் கொலையுண்டவருக்கு 
ஆண்டெட்டில் அஞ்சலிகள் ....."   மயிலைக்கவி 


உச்சி வானில் நின்று நச்சு குண்டு போட்டான்,

வஞ்சித்து விட்டாய் என்று நீதி கேட்டோம் ஐநாவில்.

கடல் நடுவில் வைத்து கழுத்தறுத்தான் குமுதினியில்,

வெகுண்டெழுந்து நின்றோம் வீரர்களாய்.

தாயே !

சிங்களவன் கொண்டிருந்தால்

சீற்றம் கொண்டு அடித்திருப்போம்,

பெற்றவள் செய்த குற்றத்தை போயெங்கு முறையிடுவோம்?

வளர்த்தவள் வஞ்சித்தால் வழக்காட மன்று உண்டா?

அள்ளி அள்ளி தந்தவளே! அள்ளிக்கொண்டு

ஏன் சென்றாய்?

அலையோசை கேட்க, அதிகாலை

வந்தவர்கள் செய்த பாவமென்ன?

மதிய வெயிலுக்கு முன் உன் மடி தவழ

வந்தவர்கள் சிதறுண்ட மாயமென்ன?

கட்டுமரமேறியவன் கரை திரும்பவில்லை,

கரை வலை வீசியவன் உயிருடன் இல்லை,

திருப்பலி கொடுக்க திருச்சபை வந்தவன்,

கடல்ப் பலியானான் கரிய நீரிலே.

பாலனின் பிறப்பை கொண்டாடும் வேளையில்,

பாடையில் ஏற்றிய பாவியே! 

வாழ்வளித்த நீயே! எம் வாழ்வழித்தாயே! 

உயிரைக் கொன்று பிழைக்கிறோம் என்றா,

எங்கள் உயிர்களை தின்றாய்?

வெள்ளை மணலையும், நீலக் கடலையும்,

பாவாக்கிய பாவலன், பனை வடலிக்குள் பிணமாக.

ஏலேலோ....ஏலேலோ....என்று உன்னை பாடியவள் 

இலையானுக்கு இரையானாள்.

பெத்தவள் போச்சியில் கொடுத்த பாலையே! 

குடிக்க மறுத்த பாலகனுக்கு,

உப்பு நீரை ஊட்டி ஊதி வெடிக்க வைத்தாயே!

பட்டம் விட்ட பள்ளிச் சிறுவன் 

செத்துக் கிடந்தான் முள்வேலியில்.

எல்லாம் முடிஞ்சு ஆண்டெட்டும் ஆகி விட்டது.

நினைவுகள் மட்டும் கண்ணீர் துளிகளாக,

உறவுகளே! உங்கள் சாவும் சரித்திரமாகிவிட்டது.

கடலம்மா!

மீண்டும் உன்னடியே சரணமம்மா,

இனி சஞ்சலங்கள் வேண்டாமடி,

தண்டனைகள் போதும்....

எங்கள் சந்ததிகள் வாழ 

அள்ளித் தந்திடுவாய் செல்வம்.

-மயிலைக்கவி 


நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com