இஞ்சை எல்லாமே வெளிச்சுப் போச்சு. ஒருத்தரையும் காணேல்லை. மனிசர் மட்டுமில்லை.இந்தக் கடலுக்கை துள்ளி விளையாடிய மீன் குஞ்சுகளையும் தான் சொல்லுறன்.முன்னையெல்லாம் பிடிச்ச மீன்களையெல்லம் தேவைக்குப் போக மீதியைக் காய வைத்து கருவாடாக்கி பாதுகாத்தம். ஆசுவாசமாக மீனைப் பிடிக்க கம்பிக் கூடடித்து வலைகளால் சுற்றி வளைச்சு களங்கண்டி என்ற பேரோடை கடலுக்கை இறக்கி மீனைப் பிடிச்சு இந்த எண் சாண் உடம்பை வளர்த்தம். இப்ப இங்கை முழுக்கடலுக்கும் கம்பி வேலி போட்டு தடுப்புக் காவல். இந்த விந்தை உலகத்திலை எந்த மூலையிலும் நடக்காத ஒன்று. இப்படி முனகுவவது சிமியோன் அப்பா தான்.
சின்னனாய் ஒரு (flash back) மாலை நேரம். சூரியன் ஓய்வெடுக்க போயிருப்பார். இருள் கவ்வி அங்காங்கே நட்சத்திர ஒளிகீற்று மின்னிக் கொண்டிருக்கும். கையிலை கட்டுச் சாதம் தோளிலை வலை இவரோடை இன்னும் நான்கு கூட்டாளிமார். மேரி ஆச்சி கையசைக்க மடி நிறையக் கனவுகளோடை கடலுக்கை காலை நனைச்சபடி சிமியோன் அப்பா கட்டு மரத்திலை ஏறுவார். உள்ளுக்குள் பயக் குமுறல் அதையும் காட்டிக் கொள்ளாமல் மேரி ஆச்சி கை அசைக்க கட்டு மரம் நகரத் தொடங்கும். பல சமயங்களில் மேரி ஆச்சியின் இரவுகள் அந்தக் கடற்கரையோரம் போடப் பட்டிருக்கும் வாடிக் கொட்டிலிலையே கழிஞ்சிருக்கும். அதிகாலை சிமியோன் அப்பாவின் சிரிப்பொலி கேட்கும் வரையிலும் ஆச்சியின் கனவுகளும் நினைவுகளும் கடல் அலையோடு போட்டி போட்டபடி மனதை உலைக்கும்.
கட்டு மரம் கரயேற சிரிச்ச படி சிமியோன் அப்பா கரை இறங்கி கொதிச்ச படி ஆவி பறக்கும் தேத்தண்ணீரை ஆச்சி குடுக்க. ஊதிக் குடிச்ச படி மேரி கோவில் மீனை பிறம்பாய் பிடியும் மற்றதை ஏலத்துக்கு தூக்கிக் குடும் என்ற படி கொட்டில் கடையில் எரிந்து கொண்டு தொங்கும் கயிற்றில் சுறுட்டைப் பற்ற வைச்சுக் கொண்டு காலைப் பத்திரிகையை வாங்கி வாசிச்சு அவலங்களை அறிஞ்சு கொள்வார், மூத்தமகள் பற்றிமா வயது பதினெட்டு வெள்ளை சட்டையிலை தேவ மாதாவைப் பார்த்தது போல ஒரு தெய்வீகக் களை.இளவாலைக் கன்னியாஸ்த்திரியார் பள்ளிக் கூடத்திலை தான் உயர் தரம் படிக்கின்றாள். படிப்பிலை படு சுட்டி. அயல் அட்டைப் பிள்ளைகளுக்கும் இவளால் பேருதவி.படி படி என எல்லாருக்கும் ஊக்கம் குடுப்பாள். இது ஒன்று தான் எங்களை தலை நிமிர வைக்கும் எண்டதில் தீர்க்க மான நம்பிக்கை.
அம்மாவைப் போல அப்பாவுக்கு உதவியாய் வலையையும் பின்னி பறியையும் பொத்தி குண்டுச் சட்டிக்கை குதிரை ஓட்ட எத்தனிப்பு இல்லை. மேரி ஆச்சியின் கனவு தன்ரை தமயன் யாகப்பின் மூத்தவனுக்கு கட்டிக் குடுத்திட வேணும். சிமியோன் அப்பாவைப் போல நேர்த்தியான கடற்தொழிலாளி என்பது அவாவின் பெரும் கணக்கு. அது மட்டுமில்லை குமர்ப் பிள்ளைகளை இந்தக் காட்டுமிராண்டிக் கூலிப் படைகளுக்காலை காவாந்து பண்ணிக் கரை சேர்க்கிறதும் லேசுப் பட்ட காரியமில்லை எண்டது எல்லாத் தாய் மாரின் ஏக்கமும் தான்….
பற்றிமாவைப் பொறுத்த வரையிலை தான் ஒரு ரீச்சராய் வர வேணும் என்பது தான் ஆரம்பக் கனவு. படிப்பு சோறு மட்டும் போடாது கனபேற்றை அறிவுப் பசியையும் தீர்க்கும் என்கிறதிலை சிமியோன் அப்பாவுக்கும் மாற்றுக் கருத்தில்லைத் தான். இலேசான பிடிப்பும் இதில் அவருக்கும் இருக்கு. ஆனாலும் அடி மனதில் ஓர் பேரிடிப்பு. கண்காண தூரமான அரபு நாட்டுக்குபிள்ளைகளை அனுப்புற பெற்றவையின்ரை பயத்தை விட யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்துக்கு எப்பிடி அனுப்பப் போறன் என்ற கேள்வியில் நியாமும் இல்லாமல் இல்லை..இவளை அங்கை அனுப்பிப் போட்டு மடியிலை நெருப்பைக் கட்டிக் கொண்டெல்லவோ இருக்க வேணும் எண்ட பெரும் பயம்.. பற்றிமாவோடை தன்ரை மனக் கிலேசத்தையும் சொல்லிப் பார்த்திருக்கின்றார்.
என்ன சொல்லி இருப்பார்?எப்பிடிச் சொல்லி இருப்பார்? அவருக்கு இந்தக் கடலை விட்டால் உலகமேது?. எதுக்கெடுத்தாலும் உவமான உவமேயத்துக்கு இந்தக் கடல் தான் முன்னுக்கு வந்திடும். பிள்ளை வடிவாய்க் கேள் மோனை. நாங்கள் கடலுக்கை போட்டு வைச்சிருக்கின்ற களம் கண்டி போலைத் தான் நடு ரவுனுக்கை கம்பஸ். அது இப்ப இலங்கை இராணுவத்துக்கு களங்கண்டி கண்டியோ! எப்பப்ப மீன் தேவைக்கு நாங்கள் அதுக்கை இறங்கிறது போலை இராணுவமும் அடிக்கடி ஆள் தேவைப் படும்போது கம்பசுக்குள்ளை இறங்கிப் பிடிகிறான்.
சுருங்கச் சொன்னால் கடலிலை போட்ட களம் கண்டி இப்ப தரையிலை கம்பசைச் சுற்றி போட்டிருக்குது. ஒட்டி ஓரா விளை பிடிச்ச கணக்காய் விளைஞ்சதுகளைப் பார்த்து பயங்கர வாதம் என்ற தூண்டிலைப் போட்டு வளைச்சுப் பிடிப்பெல்லே நடக்குது. இந்த நிலையிலை உன்னை அங்கை எப்பிடி விட்டிட்டு நாங்கள் இருப்பம் சொல்லு. பேசாமல் கொம்மான்ரை ஆசைப்படி யாகப்பு மாமான்ரை மகன் யேக்கப்பனைக் கட்டிப் போட்டு அவனுக்கு ஒத்தாசையாய் இரு மகள். பத்தோடை பதினொன்றாய் எங்கடை தலை விதி எண்டு நொந்து போட்டு விடுவம் என தள தளத்த குரலில் கடற்கரையில் இருந்து கொட்டிய வார்த்தைகள் உலகுக்கு கேக்குதோ இல்லையோ! புலத்திலை வாழுற எங்களுக்கும் கேக்காமலா போய் விடும்…………..
கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி