சாலை எல்லாம் பனை மரங்கள் வானுயர்ந்து எழுந்து நிற்கும் எழுச்சிமிக்க கிராமத்திலே துணிச்சலுடன் மரமேறி குளிர்ச்சிமிக்க கள் இறக்கி மகிழ்ச்சி கொண்ட காலம் அது..
ஆதவன் சங்கமிக்கும் பொழுதுகளில் ஆடிப்பாடி கொண்டாட காத்திருக்கும் மனசுகளின் ஊக்க மருந்து தேவைக்காய் பல அடி உயரம் பக்குவமாய் ஏறி சொட்டிச் சொட்டி நிறைந்திருக்கும் பானைகளை இறக்கி தந்தாய்...
கட்டு மரமேறி கடல் அலைமீது போட்டியிட்டு துடுப்பினை அசைத்து கரை சேரும் நெஞ்சங்களும் காடு வெட்டி களனி செய்து உச்சி வெய்யிலில் வற்றிப்போன உதடெல்லாம் தாகம் தீர்க்கும் உன்னைத்தேடி ..
வற்றிப்போகாத காலநீரோடையில் சிக்கிய மரங்கள் மட்டும் சீரழிந்து நிற்கிறது வெடி விழுந்து எரிந்த பனை தலையிழந்து நிற்கிறதே அழியாத பல வடுக்களின் விம்பமாய் உன் தலை எழுத்தை என்ன சொல்ல?