நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

1980ம் ஆண்டு மயிலை முருகன் ஆலய சித்திரத் தேர் வெள்ளோட்ட சிறப்பு மலர்

14/1/2018

1 Comment

 
Picture
1980ம் ஆண்டு மயிலிட்டி முனையன் வளவு முருகையன் ஆலயத்தின் சித்திரத்தேர் வெள்ளோட்டத் தினத்தன்று வெளியிடப்பட்ட சிறப்பு மலர். மயிலிட்டி மக்கள் பெருமைகொள்ளும் பலவற்றில் இச் சித்திரத்தேரும் முதன்மை பெறுகின்றது. "கனகசபை சிற்பாலயம்" எங்கள் மயிலிட்டியின்  சிற்பக்கலைஞர்களின் கூடாரம். பிரதம ஸ்தபதி திரு. சி.நவரத்தினம் அவர்களின் தலைமையிலான குழு முழுவீச்சுடன் மேற்கொண்டு எங்களாலும் முடியும் என்று நிறை செய்து சாதித்துக் காட்டினார்கள்.இந்தியகச் சிற்பக் கலைஞர்கள் உதவி ஏதுமின்றி உருவாக்கி மயிலிட்டிக்குப் பெருமை சேர்த்தார்கள் என்று சொல்வதைவிட இச்சிறப்பான சிற்பிகளைத் தன்னகத்தே கொண்டதால் மயிலிட்டி தலை நிமிர்த்தி பெருமை கொண்டது என்றுதான் சொல்லவேண்டும்.

தற்போது 38 வருடங்கள் கடந்துவிட்டது. ஊரழிந்தது, தேரழிந்தது ஆனால் அன்று வெளியிட்ட சிறப்புமலர் மட்டும் நகலாக கிடைக்கப்பெற்றேன். எமது கலைமகள் மகா வித்தியாலய பழைய மாணவர் திரு. வே.அம்பிகைபாகன் அவர்கள் மூலம் நகலாக திரு. சண்முகநாதன் கஜேந்திரன் அவர்கள் கிடைக்கப்பெற்று எனக்கு சேரச்செய்தார். அவற்றினை எமதூரின் பொக்கிஷமாகக் கருதி எல்லோரும் பார்த்துப் படிக்கக் கூடியமாதிரி நமது மயிலிட்டி இணையத்தில் ஒரு ஆவணமாகப் பதிவு செய்துள்ளேன். இம் மலரில் மறைந்த சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் வழங்கிய ஆசியுரை, மறைந்த எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ.அமிர்தலிங்கம் அவர்களின் வாழ்த்துரை என பலரின் சிறப்பு வாழ்த்துக்கள் உள்கொண்டிருக்கின்றது. புத்தகத்தின் நகலில் சில தெளிவாக இல்லை. இருப்பினும் நிறைய முயற்சி செய்து மீள எழுதியுள்ளேன். சிற்ப வல்லுனர்களுக்கான, அறிஞர் பெரியோர்களுக்கான சொற்கள் என பலவற்றை இதன்மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாகவும் அனுபவம் கிடைத்தது. 

நன்றி: சிறப்புமலரை பாதுகாத்து எம்மிடம் சேர்த்த திரு. வே.அம்பிகைபாகன், கலாபூஷணம் திரு செல்லப்பா சண்முகநாதன் அவர்களுக்கும், அவரின் மைந்தர்கள் கஜன், ஜெயா மற்றும் உறவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இணைய இயக்குனர் அருண்குமார் குணபாலசிங்கம்.

Picture


மயிலிட்டி முனையன் வளவு
அருள்மிகு
​
முருகையன் தேவஸ்தானம்.

23/07/1980
​
சித்திரத் தேர் சிறப்பு மலர்
​



மயிலிட்டி முனையன் வளவு
அருள்மிகு முருகையன்

​

Picture
Picture
Picture

Picture


வடமயிலை சிற்பாசாரியார்
​
அமரர். மு. கனகசபை அவர்கள்
​


Picture
Picture


பிரதம ஸ்தபதியார்

திரு.சி. நவரத்தினம்
​


Picture
Picture


உதவி ஸ்தபதியார்

செ. சண்முகநாதன்
​


Picture
Picture


க. இராஜலிங்கம்
​


Picture
Picture


செ. சிவரத்தினசிங்கம்
​


Picture
Picture


செ. தியாகராசா
​


Picture


​முருகையன் ஆலய முன்புறத்தோற்றம்
​


தேரை உருவாக்கிய சிற்பிகள்.

ஆ. நடராசா

சி. நவரத்தினம் (ஸ்தபதியார்)

செ. தியாகராசா

செ. சண்முகநாதன் (உப ஸ்ததியார்)

இ. கதிரவேலு

க. இராஜலிங்கம்

செ.சிவரத்தினசிங்கம்

வ. சிங்கராசா

வே. நடராசா

க. தங்கவேலு

சி. முத்துக்குமாரு 

க. பாலசுந்தரம்
​
வ. வேலாயுதம் 
​



தேர்த் திருப்பணி வேலைகள் நடைபெறும் காட்சிகள்
​

Picture
Picture
Picture

Picture


​தேரில் அமைக்கப்பட்ட சிற்பங்கள்.



அடித்தள வேலைக்காட்சி.
 
பந்தல் வேலைக்காட்சி.
​

Picture
Picture

Picture


முருகையன் சித்திரத் தேர் அமைத்த சிற்பிகள்.
கனகசபை சிற்பாலயம் வடமயிலை.
​


கெளரவ ஸ்தபதியார்:
திரு. சின்னத்துரை நவரத்தினம்

உதவி ஸ்தபதியார்:
​திரு. செல்லப்பா சண்முகநாதன்

துணைச் சிற்பிகள்:

திரு. க. இராஜலிங்கம்

திரு. செ. சிவரத்தினசிங்கம்

திரு. செ. தியாகராசா

திரு. வே. நடராசா

திரு. க. பாலசுந்தரம்

திரு. வ. வேலாயுதம் (வர்ணவேலை) 

திரு. சி. முத்துக்குமாரு (கடைச்சல் வேலை) 

திரு. வ. செல்லையா

திரு. இ. கதிரவேலு

திரு. வ. சிங்கராசா

திரு. ஆ. நடராசா

திரு. ப. மாணிக்கவாசகர் (இரும்பு வேலைகள்)
​


Picture


வடமாநில சித்திர வித்தியாதரிசி

நுண்கலைச் செல்வர்

கலாகேசரி ஆ. தம்பித்துரை அவர்களின்
​
வாழ்த்துரை



​வடமயிலை முனையன் வளவு முருகப் பெருமான் பிரமோற்சவத்தின் போது எழுந்தருளிப் பவனி வருவதற்குரிய சித்திரத் தேரினைப் புதிதாக உருவாக்கி 23. 07. 1980 அன்று வெள்ளோட்டம் நிகழ்த்த இருப்பது சைவாபிமானிகள் யாவர்க்கும் மிக்க மகிழ்ச்சியைத் தரும் செய்தியாகும். இச்சித்திரத் தேரை ஸ்தபதி சி. நவரத்தினம் அவர்களும் அவர்தம் குழுவினரும் தமது கன்னிப் படைப்பாகப் படைத்துள்ளனர். ஈரேழு பதினான்கு
உலகினையும் உள்ளடக்கியதாகிய தாற்பரியத்தைக் குறிப்பிடுவது தேரின் தத்துவம்.
இத்தகைய பரந்துபட்ட பாரிய கருத்தினை உடைய சித்திரத்  தேர்களை உருவாக்குகின்றவர்களை ஆசி கூறுபவர்களுக்கும் அத்தகைய ஆசிகளைப் பெறுபவர்களுக்கும் பிரத்தியேகமாக சில தகுதிகள் வேண்டற்பாலது. இங்கு இவை உண்டு என்பது எமது சிற்றறிவிற்கேற்ற கருத்தாகும். 


எனவே திரு. சி. நவரத்தினம் அவர்களின் கலைப்பணி பல்கிப் பெருகிப் பல்லாண்டு வாழ்க
என முருகப் பெருமானை வேண்டி வாழ்த்துகின்றேன்.

ஆ. தம்பித்துரை
​


Picture

காங்கேசன்துறை மகா வித்தியாலய முன்னைநாள் அதிபரும் தற்போது வீமன்காமம் மகா வித்தியாலய அதிபராகப் பணிபுரிபவருமான 

திருமதி. புவனேஸ்வரி சச்சிதானந்தம் அவர்களின்
வாழ்த்துரை.


​மயிலிட்டி முனையன் வளவு அருள்மிகு முருகையன் தன் பேரருளால் சித்திரத் தேர்த் திருப்பணி நிறைவு கண்டு இறை ஆசியில் தேரோடும் புனிதத் திரு நாளிலே வெளிவரும் சிறப்பு மலருக்கு வாழ்த்துரை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன். 

ஊர்கள் தோறும் கோயில்கள் கண்ட எம் முந்தையர் கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டானென்றார். குடிதனை நெருங்கிப் பெருக்கமாய் அமைய வேண்டும் ஊர் என்றார்கள். பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற மக்கட் சமுதாயம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து உய்தி பெற நம் முன்னோர் அளித்த அரியவற்றுள் அரியது விழாக்காணும் வழக்கமாகும் கோயிலுடன் தொடர்புறுத்தும் திரு விழாக்கள் மக்களை நல்லாற்றுப்படுத்தி இம்மையில் சீரும் சிறப்பும் சோறும் கூறையும் தந்து, அம்மையில் நிலைபேறான பெருவாழ்வைத் தர வல்வனன்றோ?  இவற்றுளும் தேர் விழாப் போலச் சிறந்த பயன் தருவதோர் விழா பிறிதில்லை.

கலியுக வரதனான கருணைக் கந்தன் அருள்மிகு மயிலையில் முருகையன், அன்பர்கள் உள்ளங்கள் தோறும் எழுந்தருளி வினை தீர்த்து உலகுய்யும் வண்ணம் தேர் அமர்ந்து அருள் சுரந்து தெரு வீதி வரும் காட்சியைக் காணாத கண்ணென்ன கண்ணே. தேரார் வீதியில் அமரர் குழாம் வந்து திசைதோறும் நிறைந்து மலர் தூவி மகிழ பாரார் புகழ்ந்து போற்றும் திரு மிகு சித்திரத் தேரை தொழிற் திறனும் கைவண்ணமும் நடம் புரிய அமைத்த கலைதெரி சிற்பிகள் நம் நாட்டவர் மயிலிட்டி ஊரவர் இவர்களிற் சிலர் நம் மாணவர் என எண்ணும்போது உள்ளம் மலர்ந்து மேனி சிலிர்க்கிறது. அவர்கள் தெய்வத் திருத் தொண்டும் கலைத்திறனும் வளர்க. 

(கந்தன் கழலடி சரணம்)

திருமதி. பு. சச்சிதானந்தம்
​


Picture


​சித்திரத் தேரை உருவாக்கிய ஸ்தபதியார்
திரு. சி. நவரத்தினம் அவர்களின்
ஆசியுரை


​கோவில் அமைப்பு முறைக்கும் தேர் அமைப்பு முறைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. தேர் அமைப்பு முறைக்கேற்ப கோயில் கட்டடக் கலையை மத்திய காலக் கலைஞர்கள் வளர்த்து வந்துள்ளனர்.

சிற்ப நூல்கள் கோயில்களை மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கின்றன. அவை: நாகரம், திராவிடம், வேஸரம் அல்லது வாராடம் ஆகும், தேரின் அமைப்பு முறைகளிலும் இவை வழக்கிலிருந்து வருகின்றன. அதாவது சதுரவடிவான தேரை நாகரம் என்றும், எண்கோண வடிவான தேரை திராவிடம் என்றும் கூறுகின்றன. 

மயிலிட்டி முனையன் வளவு அருள்மிகு முருகையனுக்கு ஒரு தேர் அமைத்துத் தருமாறு பரிபாலன சபையினர் எம்மைப் பணித்தார்கள். அவர்கள் பணிப்பின் பேரில் வேலையை ஏற்று இது ஒரு திராவிட மரபுத்தேராக மூன்று வரிசை சிற்ப விக்கிரகங்கள் /////// யாளி வரிமானங்கள்,  குதிரை வரிமானங்கள் நான் மறைகளைக் குறிப்பிடும் நான்கு குதிரைகள் பிரம்மன் ஆகிய சிற்ப அம்சங்களுடன் கலை நுணுக்கங்கள் நிறைந்த வேலைப் பாட்டுடனும் இச் சித்திரத் தேர் பூரண பொலிவுடன் நிறைவெய்திட முருகையன் திருவருள் பாலித்துள்ளார். வெள்ளோட்டம் இனிது நிறைவேறி முருகையன் தேரில் பவனி வர எமது சிற்பாலயத்தின் சார்பில் ஆசி கூறி ஐயன் அருள்பெற்று உய்வோமாக.

சி. நவரத்தினம்
​


Picture

காங்கேசன்துறை பட்டினசபை விசேட ஆணையாளார்

திரு. க. சண்முகநாதன்

​அவர்களின்
வாழ்த்துரை


நீலத்திரைக் கடலோரத்திலே அருள் ஒளி பரப்பும் மயிலிட்டி முருகையன் திருக்கோயிலுக்கு அழகும், அமைப்பும் மிக்க சித்திரத்தேர் பல இலட்ச ரூபா செலவில் உருவாகி, அதன் வெள்ளோட்ட விழா 23/07/80 ம் திகதி நடைபெற்த் திருவருள் கூடியுள்ளது குறித்துக் களி பேருவகை அடைகின்றோம். இச் சித்திரத்தேரை உருவாக்கிய சிற்பக் கலைஞர் திரு. சி. நவரத்தினமும், அவரது உதவியாளர் திரு. செ. சண்முகநாதனும்ஏனைய கலைஞர்களும் மயிலிட்டியைச் சேர்ந்தவர்கள் என்னும்போது எமது மகிழ்ச்சி இரட்டிப்பாகின்றது.

இது போன்ற பாரிய சிற்ப வேலைகளைச் செய்வதற்கு முழுக்க முழுக்கத் தமிழகச் சிற்பிகளை நம்பியிருந்த நிலையைத் தலைகீழாக மாற்றித் தமிழகத்தில் உள்ள கலைஞர்களுக்கு நாம் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதைத் தம் கன்னிப் படைப்பின்மூலம் கண் கூடாகச் செய்து காண்பித்த சிற்பக்கலை மாமணிகளைப் பெற்றெடுத்ததால் ஈழமணித் திருநாடும், யாழ்ப்பாணப் புனித மண்ணும் பெருமையடைகின்றன. இத்தேரிலே ஆறுபடைவீடுகள் வரலாற்றுப் பிண்ணணியோடு செதுக்கப் பட்டுள்ளன. இறைவன் திருக்கோலங்களும், பாயும் நான்கு குதிரைகளும், யாளி வரிமானங்கள் போன்றவையும் மாமல்லபுரச் சிற்பங்களை நமது நினைவுக்குக் கொண்டுவருகின்றன.

இத்தகைய அழகும், உயிர்த்துடிப்பும் மிக்க சிற்பங்களோடு ஒரு உன்னதத் தேரைச் சமைத்த சிற்பிகளையும் அவர்களுக்குப் பல்லாற்றானும் ஆக்கமும் ஊக்கமும் நல்கிய மயிலிட்டி வாழ் பெருங்குடி மக்களையும் வாழ்த்துகின்றோம்.

க. சண்முகநாதன்
விசேட ஆணையாளர்,
காங்கேசன்துறை பட்டினாட்சி மன்றம்   
​  


Picture


​காங்கேசன்துறைத் தொகுதி உறுப்பினர்
 எதிர்க்கட்சித் தலைவர்

திரு. அ. அமிர்தலிங்கம்

அவர்களின் 
வாழ்த்துரை
​


முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் தமிழ்த் தெய்வம் முருகையன் சிறப்புற ஆலயங் கொண்டிருக்கும் மயிலிட்டி முனையன் வளவு முருகையன் தேவஸ்தானத்தினர் மூன்றரை இலட்சம் ரூபா செலவில் முழுவதும் உள்ளூர் சிற்பாசாரியர்களால் உருவாக்கப்பட்ட சித்திரத் தேர் வெள்ளோட்டம் தொடர்பாக வெளியிடும் மலருக்கு எனது நல்லாசிகள். மலரும் விழாவும் சிறப்புற அமைய கடற்கரையில் கோயில் கொண்டிருக்கும் முருகப் பெருமான் அருளை வேண்டுகின்றேன்.

அ. அமிர்தலிங்கம் பா. உ.
​


Picture
Picture


​மாவை ஆதீனகர்த்தா மஹாராஜஸ்ரீ

சு.து. ஷண்முகநாதக் குருக்கள்

அவர்கள் வழங்கிய ஆசியுரை


​     புண்ணியச் செயலில்  ஈடுபடுபவர்கள் புண்ணியவான்களாவர். பசு புண்ணியம் பதி புண்ணியம் என இருவகைப்படும். மேலான புண்ணியங்களில் பதி புண்ணியமே மிக மிகச் சிறந்தது. பதி புண்ணியம் எனும் போது அது தெய்வங்களுக்குச் செய்யும் உத்தம யாகமாகவும் மாறுகிறது. அறப் பணியாக உருவாகும் பதி புண்ணியங்களுள் இறைவனுக்கு திருத்தேர் செய்வதும் அடங்கும். இத்தேரின நிறுவும் சிற்பிகள் பூசுரம் வரிசையில் இடம் பெறுகிறார்கள். அதனால்  அவர்களுக்கும் "ஆச்சார்யர்" பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

தேர்கள் செய்வதாயின் அதற்கு தனியான கலைப் பயிற்சி, புத்திக் கூர்மை, சாமர்த்தியம், அஷ்டாவதானம், ஒழுக்கம் என்பன நிறைய வேண்டும். இப்படியான நற் குணங்களைக் கொண்ட சிற்பிகள் உருவாக்கும் தேரினை தேரோட்டம் விடப்படும் போது ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம், விடாமுயற்சி, பேரானந்தம் என்பனவும் மக்களிடையே தோன்றுகின்றன. இதனால் நாடு சுபீட்சமடையும். ஆகவே தேர்ச் சிற்பிகளின் மகத்துவம் எத்தகையதென்பதை உணரமுடியும். "மகாரதம்"  பிரபஞ்சத்தின் சின்னமாகிறது. இறைவன் அதன் நாயகனாக இருந்து உலகை நடாப்பிக்கின்றான் என்பதுதான் தத்துவம். தேரின் பீடங்கள் மந்திர, தந்திர, சாத்திர அடிப்படையில் பல்வேறு கோணங்களில் அமைகின்றன. ஊர்ந்து செல்லும் சக்கரத்தில் இருந்து உச்சியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கலசம் வரை கவனமாகப் பார்த்து சிந்திப்பின் அது ஒரு திருக்கோவில் போன்று வடிவினைத் தரும். ஆகவே தெய்வம் தேரேறி வரும்போது திருக் கோவிலே உலாவருகிற காட்சியைத் தருகிறது.

தேரிலே முதற்படியாக பூவுலக வாழ்க்கையும் அடுத்தபடியாக தேவலோக வாழ்க்கையும் தொடர்ந்து சுவர்க்கலோக வாழ்க்கைச் சிறப்புகளும் என்றபடியும் சிற்பநூல்களின்படி பார்விதானம், உபபீடம் அதிஷ்டானம், பேரூர்மட்டம் நாராசனம் தேவாசனம், சிம்மாசனம் என்றும் நிறுவப்படுகிறது. பற்பல வடிவங்களைக் கொண்ட தேர்கள் பல பெயர்களினால் அழைக்கப்பட்டாலும் பிரம்ம தேவரைச் சாரதியாகக் கொண்ட தேருக்கே திருத்தேர் என்றும் மனோரதம் கூறப்படுகின்றது.

மயிலிட்டி முனையன் வளவு அருள்மிகு முருகையனுக்கும் ஓர் தேர் செய்வதை யான் அடிக்கடி பார்த்ததுண்டு. அழகான தேர் மிக ரம்மியமான வேலைப்பாடு. முகோத்தரங்கள் சில புதுமாதிரி சேர்க்கப்பட்டிருக்கிறது. இதுவும் ஓர் தனியழகு. துணிந்து நின்று வெகு சாமர்த்தியமாய் இத் தேரை உருவாக்கிய ஆச்சாரிகள் நவரத்தினமும் அவருடன் துணைநின்ற சண்முகநாதனும் போற்றுதற்குரியவர்கள். ஈழ நாட்டுக் கலைஞர் குழாம் தலை நிமிர்ந்து நிற்கக் கூடியதாக இந் நாட்டிற்கே பெருமை தேடித் தந்த கலைஞர் நவரத்தினம் குழுவினரை இந் நாட்டு மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே அவதானிக்க வேண்டும்.

நவரத்தினமும் அவ்ர் துணைக்கரமாம் சண்முகநாதனும் அவர்களது சிற்பாலயக் கலைஞர்களும் நீடூழி நிலை பெற்று அவர் தம் கலைச்சேவை பாரத நாட்டிற்கு உதவும் வகையில் திருத் தொண்டாக அமைய மாவை முருகப் பெருமான் நல்லருள் புரியவேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.

சு.து. சண்முகநாதக் குருக்கள்
​


Picture


துர்க்கா துரந்தரி
சிவத்தமிழ்ச் செல்வி
​
தங்கம்மா அப்பாக்குட்டி

அவர்கள் வழங்கிய
ஆசியுரை
​


சித்திரத் தேரில் திருமுருகன் அருட்பவனி

மயிலிட்டி கடற்கரையில் அலைமோதி அழகு தரும் திருக்கோயிலாக விளங்குவது முருகையன் ஆலயம்.ஆண்டுதோறும் இவ்வாலய மகோற்சவம் மகோன்னதமான முறையில் நடைபெற்று வருவதை நாமறிவோம்.மகோற்சவங்களில் முதன்மையானது இரதோற்சவமாகையால் அழகிய சித்திரத் தேரில் அப்பன் முருகையனை எழுந்தருளிவிக்க விழைந்தனர் இவ்வூர் மக்கள்.இம் முயற்சி வெற்றிகரமாக நிறைவேற முன்னின்று பணிபுரிந்த சிற்பச் செல்வர் திரு. சி. நவரத்தினம் அவர்களும் குழுவினரும் எமது பெரும் பாராட்டுக்குரியவர்கள். அழகொழுகும் பெருமானுக்குப் புதிய சித்திரத் தேர் அமைக்கும் புண்ணியம் இவர்களுக்குக் கிடைத்ததே பெரும் பேறு. இரதோற்சவம் என்பது சங்காரத் தொழிலை உணர்த்தி நிற்பது தேரின் தோற்றம் அக்கினி கொழுந்து விட்டெரியும் அமைப்புக்குச் சமமானது.”சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்” என்றார் உண்மை விளக்க ஆசிரியர்.

சிங்கங்களை யொத்த தரும விருத்திகளையும், யாளிகளைப் போன்ற அனுபவங்களையும், கொடிகளைப் போன்ற தத்துவக் குழாய்களையும், மணிகளைப் போன்ற வாக்கொலிகளையும், குஞ்சங்களைப் போன்ற மனச்சலனங்களையும் சங்கரித்து ஞான ஒளிமயமாக ஓங்கிநின்று இறைவன் திருவடி நிழலை அடைதலையே தேரின் அமைப்புக் காட்டுகிறது. கலசம் என்பது திருவருளையும், உச்சிக்குடை திருவடி நிழலையும் குறிக்கிறது.

இவ்வாறுஒரு திருத்தேரின் தோற்றமே ஒரு திருக்கோயில் அமைப்பை விளக்குவதுமன்றி ஆன்மா மும்மலங்களில் நின்று விடுபட்டு வீறுபேறடையும் மாட்சிமையையும் உணர்த்துவதாகும்.

எனவே இப்புண்ணியச் செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் இதனை உருவாக்கிய சிற்பக் கலைஞர்களுக்கும் முருகையன் திருவருள்னிரம்பக் கிட்டும் என்று போற்றி அமர்கிறேன்.

செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
​


Picture
Picture


சிற்பக்கலையும், சித்திரத்தேரும்

வடமயிலை சிற்பக்கலைஞன்

செ.சண்முகநாதன்

இந்து சமய உண்மைகளை பொதுமக்களும், சிறுவர்களும் எளிதில் உணர்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் எடுத்துரக்கும் நூல்களே இதிகாச புராணங்களாகும். இதிகாசங்களாகிய இராமாயணாமும், பாரதமும் இந்து தர்மத்தை நீதி வழுவாத முறையில்ப் பரிபாலித்து வந்து அரசர்களது வரலாறுகளை அழகும் கற்பனையும் நிறைந்த கதைகள் மூலம் எடுத்துரைப்பனவாகும். புராணங்கள் இறைவன் மக்களுக்கு வேண்டியவற்றை அருளும் பொருட்டுக் காலம் தோறும் நிகழ்த்தியுள்ள திருவிளையாடல்களை எடுத்துக் கூறுவனவாகும். இதிகாச புராணங்களிற் கூறப்பட்ட வரலாறுகளை மக்கள் இனிது பார்த்து இரசிக்கும் பொருட்டுக் கலைஞர்கள் அவற்றை கற்சித்திரங்களாகவும், சுவர் ஓவியங்களாகவும் தேர், மஞ்சம் முதலியவற்றில் மரச் சித்திரங்களாகவும் மிகப் பண்டைக்காலந் தொடக்கம் அமைத்து வருவது இந்திய நாட்டுக் கல்வி முறைகளிலொன்றாகும். எழுத வாசிக்கத் தெரியாத மக்கள் இச் சித்திரங்களின் மூலம் சமய சம்பந்தமான விசயங்களையும் அவை குறிக்கும் தத்துவங்களையும் எளிதாக அறிந்து கொள்ளுகின்றனர்.

தமிழ் நாட்டிலுள்ள தேர்களும், கோபுரங்களும் மக்களுக்கு வேண்டிய சமய அறிவைப் புகட்டும் ஒரு கல்வி நிலையமாக விளங்கி வருகின்றன. இன்னும் இந்து மக்களிடையே சமயத் தொடர்புடைய கதைகளும் வரலாறுகளும் அழியாது நிலவி வருவதற்கு இவை செய்யும் பேருதவி சொல்லுந்தரமன்று. எது உயர்ந்தனவோ, எதை மக்கள் கட்டாயமாக அறியவேண்டுமோ அவற்றையே பண்டைத் தமிழ்மக்கள் சிர்பக் கலைகள் மூலம் பரப்பினர்.

ஈழத்திருநாட்டில் சிற்பக்கலை வளர்ந்த வரலாற்றை நோக்கும்போது இந்தியாவில் முக்கியமாக தென்நாட்டில் இருந்த சிற்பிகளே இலங்கையின் கலைவளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்தார்கள். பாரத நாட்டின் கலை கடல்கடந்து இலங்கை, சீயம், கம்போடியா போன்ற தேசங்களிற் பரவியுள்ளது. இலங்கையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிற்பக்கலை வளர ஆரம்பித்தது. இலங்கையின் வடபாகத்தை தமிழரசர் ஆண்ட காலத்திலே பலவித கலைஞர்கள் கோவிலை முக்கிய இடமாகக்கொண்டு பல விதக் கலைகளையும் வளர்த்தார்கள். கலையிற் சிறந்த சிற்பக்கலை வளர்க்க மரச்சிற்பிகள் தமது ஆற்றலும் வேலப்பாடும் விளங்க எழிலொழுகும் எண்ணற்ற சிற்பங்கள் படைத்துப் புகழ் பெற்றனர்.

தேரைப்பற்றி னோக்குமிடத்து தேர்கள் பலவகைப்பட்டனவாகிலும் உருவ அமைப்பில் அதிகளவு வேற்றுமையில்லை. கோயில் அமைப்பு முறைக்கும் தேருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கோயில்கள் மூன்று பிரதான பாகங்களாகப் பிரிக்கப்படுகின்றன. நாகரம், திராவிடம், வேஸரம் அல்லது வாராடம் என்பதாகும். தேர் அமைப்பு முறைகளிலும் இது வழக்கிலிருந்து வருகின்றது. அதாவது சதுரவடிவமான தேரை நாகரம் என்றும், எண்கோண வடிவமான தேரை திராவிடம் என்றும், வட்டவடிவமான தேரை வேஸரம் என்றும் சிற்பநூல்கள் கூறுகின்றன. தேரின் அமைப்பு தாமரை மொட்டுப்போன்று அழகாக இருக்கவேண்டும் என்பது விதி. தேரின் அடிப்பாகத்திலே பூலோக வாழ்க்கை, ஆகாய வாழ்க்கை, சுவர்க்க வாழ்க்கை ஆகியவற்றைச் சித்தரிக்கும் சிறந்த பல உருவங்களைக் காணலாம். அரசன் கொலுவிற்றிருத்தல், நடனமாதர், காமத்துப்பாலைச் சித்தரிக்கும் பொம்மைகள் ஆகியன பூலோக வாழ்க்கையையும், கின்னரர் போன்ற உருவங்கள் வான வான வாழ்க்கையையும், சிவன், விநாயகர், முருகன் முதலிய சிற்பங்கள் சுவர்க்க வாழ்க்கையையும் சித்தரிக்கின்றன.

நுண்கலைக்கு இருப்பிடம் போன்ற தேரை அமைக்கும்போது அது எந்தத் தெய்வத்திற்காகச் செய்யப்படுகின்றதோ அது அந்தத் தெய்வத்தின் அம்சம் பொருந்த அமைக்க வேண்டும். இத்தகைய தேரின் இலக்கணத்தில் இருந்து கடவுள் பரிவாரங்களுடன் தமது கோயிலாகிய தேரிலிருந்துகொண்டே ஒவ்வொரு காலத்திற்கும் தேடி வந்து நம்மைஆட்கொள்ளுகின்றார் என்பதே இதன் கருத்தாகும். 

மேற்கூறப்பட்ட அமைப்பு முறைகளுக்கேற்ப அமைக்கப்பட்ட தேரின் உறுப்புக்களைப் பற்றி நோக்கும்போது முதலாவதாக பூதப்பர்:- அச்சின் மேலுள்ள பகுதிகளை பூதங்கள் தாக்குவது போன்ற அமைப்பு. கன்னிலப்பார்:- முதல் வரிசை விக்கிரகங்களின் அமைப்புக்கு ஆதாரமாக அமைந்திருப்பது. கபோதகப்பார்:- விக்கிரகங்களின் மேல் அமைப்பாக இருப்பது. கன்னிலப்பாருக்கும் கபோதகப்பாருக்கும் இடையில் முதல் வரிசை விக்கிரகங்கள் உண்டு. அச்சப்பார்:- இரதத்தின் பட்டங்களை அமைப்பதற்காக இருப்பது. அச்சப்பூத்தலைப்பார்:- பட்டங்களை அமைப்பதற்கு மேலாக ஆதாரமாயுள்ளபார். பூத்தலைப்பார்:- மகரக்காய்கள் பூட்டிய பூத்தலைகளை உடையது. இரண்டாவது நிலம்:- முதலாவது நில விக்கிரகங்களுக்கு மேல் இரண்டாவது நில விக்கிரகங்கள் உண்டு. மூன்றாவது நிலம்:- இரண்டாவது நில விக்கிரகங்களுக்கு மேலேயுள்ளது. விஸ்தாரப்பார்:- இரத்தின விஸ்தீரணத்தைக் குறிக்கின்றது. இந்தப் பகுதிக்கு  மான வாசனம் என்றும் பெயர். தேவாசனம்:- தேவர்கள் இறைவனை நின்று தரிசிக்கும் இடம் என்ற முறையில் அமைக்கப்பட்டது. சிம்மாசனம்:- இறைவன் வீற்றிருக்கும் ஆசனம். கம்பங்கள்:- சித்திர வேலைப் பாடடைந்த குத்துக்கால்கள். பண்டிகை:- முதற்பண்டிகை, இரண்டாம் பண்டிகை, மூன்றாம் பண்டிகை. கர்ணக்குடம்:- மணிமுடி:- என்பனவாகும். 

ஈழநாட்டிலே இந்தியச் சிற்பிகளினாலும், இலங்கைச் சிற்பிகளினாலும் அமைக்கப்பட்ட பல தேர்கள் காணப்படுகின்றன. கனகசபை சிற்பக்குழுவினர் மயிலை முனையன்வளவு முருகையன் திருவருளால் ஐயனுக்கு ஒரு தேர் அமைக்கும் பணியை ஏற்று எமது கன்னிப்படைப்பாக இதை செவ்வனே நிறைவேற்றி வெள்ளோட்டத்திற்குத் தயாராக நிற்கும் இவ்வேளையில் முருகையன் பாதங்கள் பணிந்து ஐயன் அருளை வேண்டுவோமாக.
​


Picture
Picture


நன்றி நவிலல்
​


​மயிலிட்டி முனையன் வளவிற் கோவில் கொண்ட அருள்மிகு முருகையனுக்கு சித்திரத்தேர் அமைக்க வேண்டுமென்ற அவா முருக பக்தர்களுக்கு 1976ம் வருஷ நடுப்பகுதியில் அரும்பியது இன்றும் எமது ஞாபகத்தில் இருக்கிறது. இந்த அவா மொட்டாகி மலராகிய போதே சித்திரத்தேரை அமைக்கும் பணியை மயிலிட்டி வடக்கில் பரவலாகக் காலம் காலமாக சிற்பக் கலைஞர்கள் பொறுப்பிலேயே விடுவதென்றும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஏற்பாட்டின்படி எமது உள்ளூர் சிற்பிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு தலைமையின் கீழ்  பெருமானுக்குச் சித்திரத் தேர் அமைப்பதென்று ஆரம்பத்தில் முடிவெடுக்கப்பட்டாலும் அது காலப் போக்கில் கைகூடவில்லை. பெருமானின் திருவுள்ளமோ என்னவோ வடமயிலை கனகசபை சிற்பாலயத் தலைமை ஸ்தபதியார் திரு. க.நவரத்தினம் அவர்களின் தோள்களே ஆரம்பத்திலிருந்து இறுதிவரைக்கும் இந்தப் பெரும் பணியைச் தாங்கியிருக்கின்றன என்பது நாம் மறக்கமுடியாத உண்மை. முருகப் பெருமானுக்கு வாய்த்த வீரவாகு தேவரைப் போன்று தலைமை ஸ்தபதியார் நவரத்தினம் அவர்களுக்கு சிரேஷ்ட உதவியாளராக கலமை புரிந்த உதவி ஸ்தபதியார் திரு. செ.சண்முகநாதன் அவர்களின் பொறுப்பான கலமையுணர்ச்சி இந்தச் சித்திரத் தேர் உருவாக்கத்தில் தவிர்க்கமுடியாத் ஒரு அத்தியாயம், அடுத்தபடியாக க. இராஜலிங்கம்,  செ.சிவரத்தினசிங்கம், செ. தியாகராஜா ஆகிய இளைஞர்களின் பணியும் இத்தேரில் மறக்க முடியாததொன்றாகும்.

மயிலை முருகையனுக்கு இன்று சித்திரத்தேர் அமைக்கப்பட்டுள்ளதென்றால் அது முற்றுமுழுதாக இந்தச் சிற்பாலயக் கலைஞர்களின் கண் துயிலா முயற்சியே! இது உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை! ஆரம்பத்திலிருந்து இறுதிவரைக்கும் ஊதியம் கருதாது பின் இரவு ஒரு மணிக்கும் மேலாக இக்குழு பணியாற்றி வந்த புனிதம் நம் வாழ்நாள் பூராகவும் நெஞ்சில் நன்றியுணர்வோடு போற்றப்படவேண்டியது. காலத்தால் அழியாத இவர்களின் அற்புதச் சிருஷ்டிக்கு எம்மால் ஞாலத்தைக் கொடுக்க முடிந்தாலும் ஈடாகாது. இந்த இடத்தில் நாம் அவர்களுக்கு நமது இதய பூர்வமான நன்றியறிதலை சமர்ப்பிப்பதிலும் பார்க்க முருகப் பெருமானின் பூரண திருவருள் குறைவறக் கிடைக்கவேண்டுமெனப் பிரார்த்திப்பதே சாலப் பொருந்தும். வாழ்க அவர்கள் கலைத் தொண்டு! வளர்க அவர்களின் சிற்பாலயம்.

இந்தச் சித்திரத் தேர் உருவாக்கத்தில் அடுத்தபடியாக நன்றியுணர்வோடு போற்றப்பட வேண்டியவர்கள் இந்த இறைப் பணிக்கு பொருளாலும் உடலாலும் உள்ளத்தாலும் உதவி புரிந்த வள்ளல் பெருமக்கள், தேவையுணர்ந்து அள்ளி அள்ளித் தந்த செல்வந்தர்கள், வாதை கருதாது தமது உடலால் உழைத்த இளம் முருகனடியார்கள் இன்னும் தமது உள்ளத்தால் பெருமான் எப்போ? எப்போ? சித்திரத்தேரில் பவனி வரப் போகிறான் என்று ஆசித்து வந்த நல்ல மனங்கொண்டோர் அனைவருக்கும் நன்றியுணர்வோடு கூடிய எமது அன்பைத் தெரிவிக்கின்றோம்.

இம் மலருக்குரிய ஆசிச் செய்திகள், கட்டுரைகள், விளம்பரங்கள் தந்துதவிய பெரியார்களுக்கும், புகைப்படங்கள் எடுத்துதவிய காங்கேசன் துறை லிங்கம் ஸ்ரூடியோ ஸ்தாபனத்தாருக்கும், அச்சுக்கட்டைகள் செய்துதவிய யாழ்ப்பாணன் ஞானம்ஸ் ஸ்ரூடியோ ஸ்தாபனத்தாருக்கும், குறித்த நேரத்தில் மலரை அச்சிட்டுதவிய யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தாருக்கும், பலவளிகளில் உதவி புரிந்த யாவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

பொ. சற்குணநாதன்

(ஆலய பரிபாலன சபை செயலாளர்)

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
1 Comment
vegini
20/4/2018 07:18:13 am

God bless u all.

Reply



Leave a Reply.

    Picture

    குணபாலசிங்கம் அருண்குமார் 
    மயிலிட்டி

     

    பதிவுகள்

    January 2022
    September 2019
    February 2019
    January 2019
    November 2018
    February 2018
    January 2018
    July 2017
    April 2017
    November 2012
    September 2012
    August 2012

    அனைத்துப் பதிவுகள்

    All
    - அமரர் சி.அப்புத்த்ரை
    - நான் பிறந்த மண்ணே
    - "நினைவுகள் 1" மண் சோறு
    - "நினைவுகள் 2" மடம்
    - ”நினைவுகள் 3” வீடும் நானும்
    - மீண்டும் வாழ வழி செய்வோம்

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com