(இக் கட்டுரை பொ. இரகுபதி என்பவரால் 48 வருடங்களுக்கு முன்பு 1974ம் ஆண்டு மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலை (தற்போதைய கலைமகள் மகா வித்தியாலயம்) பாரதி மலருக்காக எழுதப்பட்டது.)
மயிலிட்டிச் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தியை நோக்கிச் செல்கின்ற வீதியில் சிறிது தூரம் சென்றால் இருபுறமும் அடர்ந்துள்ள பற்றைகளுக்கும், பனங்கூடலுக்கும் மத்தியில் ‘அமெரிக்கன் மிஷன்’ பாடசாலையொன்று இருக்கின்றது. ஆனால் பாடசாலையைக் காண்பதற்கு முன்பே கண்ணில் புலப்படுவது பாடசாலையை ஒட்டியுள்ள தேவாலயமொன்றின் சிதைந்த இடிபாடுகள். இதனாற் போலும் அமெரிக்கன் மிஷன் பாடசாலை என்றால் பலருக்குத் தெரிவதில்லை. பேய்க்கோயில் பள்ளிக்கூடம் என்றால்தான் அடையாளம் காட்டுவார்கள் அவ்வூர் மக்கள். பேய்க்கோயில் என்று அழைக்கப்படுவது உண்மையில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட புரட்டஸ்தாந்து மதத் தேவாலயம். இத் தேவாலயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகள் பல.