வரலாற்றுப் பின்னணியில் மயிலிட்டி ....
(இக் கட்டுரை பொ. இரகுபதி என்பவரால் 48 வருடங்களுக்கு முன்பு 1974ம் ஆண்டு மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலை (தற்போதைய கலைமகள் மகா வித்தியாலயம்) பாரதி மலருக்காக எழுதப்பட்டது.)
மயிலிட்டிச் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தியை நோக்கிச் செல்கின்ற வீதியில் சிறிது தூரம் சென்றால் இருபுறமும் அடர்ந்துள்ள பற்றைகளுக்கும், பனங்கூடலுக்கும் மத்தியில் ‘அமெரிக்கன் மிஷன்’ பாடசாலையொன்று இருக்கின்றது. ஆனால் பாடசாலையைக் காண்பதற்கு முன்பே கண்ணில் புலப்படுவது பாடசாலையை ஒட்டியுள்ள தேவாலயமொன்றின் சிதைந்த இடிபாடுகள். இதனாற் போலும் அமெரிக்கன் மிஷன் பாடசாலை என்றால் பலருக்குத் தெரிவதில்லை. பேய்க்கோயில் பள்ளிக்கூடம் என்றால்தான் அடையாளம் காட்டுவார்கள் அவ்வூர் மக்கள். பேய்க்கோயில் என்று அழைக்கப்படுவது உண்மையில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட புரட்டஸ்தாந்து மதத் தேவாலயம். இத் தேவாலயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகள் பல.
(இக் கட்டுரை பொ. இரகுபதி என்பவரால் 48 வருடங்களுக்கு முன்பு 1974ம் ஆண்டு மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலை (தற்போதைய கலைமகள் மகா வித்தியாலயம்) பாரதி மலருக்காக எழுதப்பட்டது.)
மயிலிட்டிச் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தியை நோக்கிச் செல்கின்ற வீதியில் சிறிது தூரம் சென்றால் இருபுறமும் அடர்ந்துள்ள பற்றைகளுக்கும், பனங்கூடலுக்கும் மத்தியில் ‘அமெரிக்கன் மிஷன்’ பாடசாலையொன்று இருக்கின்றது. ஆனால் பாடசாலையைக் காண்பதற்கு முன்பே கண்ணில் புலப்படுவது பாடசாலையை ஒட்டியுள்ள தேவாலயமொன்றின் சிதைந்த இடிபாடுகள். இதனாற் போலும் அமெரிக்கன் மிஷன் பாடசாலை என்றால் பலருக்குத் தெரிவதில்லை. பேய்க்கோயில் பள்ளிக்கூடம் என்றால்தான் அடையாளம் காட்டுவார்கள் அவ்வூர் மக்கள். பேய்க்கோயில் என்று அழைக்கப்படுவது உண்மையில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட புரட்டஸ்தாந்து மதத் தேவாலயம். இத் தேவாலயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகள் பல.
வீதியிலிருந்து இறங்கிச் சிறிது தூரம் உள்நோக்கிச் சென்றால் தேவாலய முன்றிலுக்கு வந்து சேரலாம். முற்றத்தில் முருகைக் கற்கள் சிதறிக் கிடக்கின்றன. மேற்கில் இருந்து அறிமுகப் படுத்தப்பட்ட மலைவேம்பு மரமொன்று (மகோ கனி) தேவாலயத்தின் மேற்குப் புறத்திலே காணப்படுகின்றது. இங்குள்ள சிதைவுகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று தேவாலயத்தின் சிதைவுகள். மற்றையது தேவாலயத்தைச் சார்ந்த இருமாடிக் கட்டிடம் ஒன்றின் சிதைவுகள். ஆனால் இரு கட்டிடங்களும் ஒன்றோடொன்று தொடர்பாக இருக்கின்றன. மிகப் பெரிய வளைவான வாயிலொன்று இரு கட்டிடங்களையும் இணைத்திருந்திருக்கிறது.
தேவாலயத்தின் முகப்பு நெடிதாக உயர்ந்து சென்று உச்சியில் நான்கு தூண்களாக சிறிய கூண்டுடன் முடிகின்றது. இத்தகைய முகப்பு அமைப்புள்ள தேவாலயம் யாழ்ப்பாணத்தில் எங்கும் இப்பொழுது இல்லை என்று துணிந்து கூறலாம். ஆனால் தேவாலயத்தின் அடிப்பாகங்கள் பலமான முருகைக் கற்களாற் கட்டப்பட்டிருக்கையில், முகப்பு மட்டும் காட்டுக் கற்களாலும், கடற்கரை கற்களாலும் கட்டப்பட்டுச் செம்மையற்ற அவசர வேலைப்பாடாகக் காட்சியளிக்கின்றது. முகப்பின் உச்சியில் காற்றின் திசையைக் காட்டுவதற்காக இரும்புத் தகட்டாலான மீன் வடிவம் பொருத்தப்பட்டிருந்தது. அது சமீபத்தில் கீழே விழுந்துவிட்டது என்று அறிந்தேன்.
தேவாலயத்தின் முகப்பு நெடிதாக உயர்ந்து சென்று உச்சியில் நான்கு தூண்களாக சிறிய கூண்டுடன் முடிகின்றது. இத்தகைய முகப்பு அமைப்புள்ள தேவாலயம் யாழ்ப்பாணத்தில் எங்கும் இப்பொழுது இல்லை என்று துணிந்து கூறலாம். ஆனால் தேவாலயத்தின் அடிப்பாகங்கள் பலமான முருகைக் கற்களாற் கட்டப்பட்டிருக்கையில், முகப்பு மட்டும் காட்டுக் கற்களாலும், கடற்கரை கற்களாலும் கட்டப்பட்டுச் செம்மையற்ற அவசர வேலைப்பாடாகக் காட்சியளிக்கின்றது. முகப்பின் உச்சியில் காற்றின் திசையைக் காட்டுவதற்காக இரும்புத் தகட்டாலான மீன் வடிவம் பொருத்தப்பட்டிருந்தது. அது சமீபத்தில் கீழே விழுந்துவிட்டது என்று அறிந்தேன்.
இப்பொழுது காணப்படுகின்ற நுழைவாயில் ஆரம்பத்திலேயே அமைக்கப்பட்டிருந்ததா என்பது ஆராய்வுக்குரியது. வடக்கு நோக்கிக் காணப்படும் இன்றைய முகப்பு 1672இல் போல்டேயஸ் என்பவரால் வெளியிடப்பட்ட நூலில் உள்ள படத்தில் இல்லை. அதில் இத் தேவாலயத்தின் வாயில் மேற்கு நோக்கியே காணப்படுகின்றது. மேலும் மேற்குப் புறமாக வாயில் ஒன்று இருந்தமைக்கான அறிகுறிகளையும் இப்பொழுது காணக்கூடியதாக இருக்கின்றது. தேவாலயம் கிழக்கு மேற்காக நீண்டிருப்பதால் வடக்குப்புற வாயிலிலும் பார்க்க மேற்குப்புற வாயிலே பொருத்தமானதாக இருக்கின்றது. ஆனால் வடபுற வாயிலுக்கேற்ப வடக்குத் தெற்காகத் தேவாலயம் விரிவுபடுத்தப் பட்டிருந்தமைக்கான சான்றுகளுமுண்டு.
தேவாலயத்தைச் சார்ந்த இல்லம் (Church House) ஒல்லாந்தப் பாடசாலையாக இருந்திருக்கலாம். 750 மாணவர்களுடன் இப் பாடசாலை இயங்கியதாக போல்டேயஸ் கூறுகின்றார். இது இருமாடிக் கட்டிடம். கீழ் மாடியிற் பெரும்பகுதி, காலத்தின் கோரப்பிடியில் அகப்பட்டு மண்மேட்டினால் மூடப்பட்டுவிட்டது. கீழ்த் தளத்தில் வளைவான மூன்று வாயில்கள் இருந்திருக்கின்றன. இது போல்டேயஸின் படத்தாலும் உறுதிப்படுத்தப் படுகின்றது. இம் மூன்று வாயில்களும் பாதிக்குமேல் மண்ணுக்குள் ஆழ்ந்துவிட்டன. எஞ்சிய துவாரங்களையும் பிற்காலத்தில் யாரோ கற்களைப் போட்டு மூடி அடைத்து விட்டார்கள். மேல் தளத்திற்குப் போவதற்கான படிக்கட்டு வெளிப்புறமாகச் சிதைந்த நிலையிற் காணப்படுகின்றது. இப் படிக்கட்டுக்களும் போல்டேயஸின் படத்திற் காட்டப்பட்டுள்ளன. மேல் தளத்தில் ஒரேயொரு வாசல் மட்டுமே இப்பொழுது காணப்படுகின்றது. ஏனையவை இடிந்துபோயிருக்கலாம். சுவர்கள் மிகப் பலமாகவும், அகலமானவையாகவும் உள்ளன. சுவர்களின் உட்புறத்தில் ‘பிறை மாடங்கள்’ உண்டு. வீட்டின் பின்புறத்தில் முருகைக் கற்களாற் கட்டப்பட்ட பழமையான கிணறும் உள்ளது. தேவாலயத்தின் தெற்குப் புறத்திலும், தேவாலயத்தின் இல்லத்திலும் நீண்ட விறாந்தைகள் இருந்திருக்கின்றன. விறாந்தைக் கட்டிட அமைப்புமுறை, அச் சொற்பிரயோகம் என்பன ஒல்லாந்தரால் அறிமுகப் படுத்தப்பட்டவையே. மொத்தத்தில் ஒல்லாந்தக் கட்டிடக்கலைக்கு இத் தேவாலயம் நல்ல சான்று.
போர்த்துக்கீசர் வருகைக்கு முன்பே இப்பகுதி சிறப்புடன் விளங்கியிருக்கிறது. யாழ்ப்பாணத்தரசர் காலக் கட்டிடங்கள் இங்கு இருந்திருக்கின்றன. இப்பொழுதும் தேவாலயத்திற்கு எதிராக உள்ள வீதியின் மறுபுறத்தில் தொண்டைமான் குளம் என்று அழைக்கப்படும் குளமொன்று மிகப் பழமையான முருகைக்கல் விளிம்புக் கட்டுடன் காணப்படுகின்றது. குளம் தூர்ந்துகொண்டே வருகிறது. ஒரு பக்கக் கட்டு முற்றாகச் சிதைந்துவிட்டது. குளம் எண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று கூறலாம். (தொண்டைமான் என்ற பெயரே யாழ்ப்பாண அரசர் காலத்திற்கு முன் செல்கின்றது. சோழ அரசர்கள் இலங்கையை ஆண்டபொழுது கி.பி. 10ஆம், 11ஆம் நூற்றாண்டுகளில் கருணாகரத் தொண்டைமான் என்பவர் கீரிமலையில் வந்திறங்கி உப்பு ஏற்றுமதிக்காகத் தொண்டைமான் ஆற்றை வெட்டுவித்தார் என்பது யாழ்ப்பாண வைபவ மாலை கூறும் செய்தி. உரும்பராயில் பழம்பெருமை வாய்ந்த கருணாகரப் பிள்ளையார் கோவில் இருப்பதும் குறிப்பிட்த்தக்கது.)
குளக்கரையில் கண்ணகி கோவிலொன்று பழைய காலந்தொட்டே இருந்ததாக ஊரவர்கள் கூறினார்கள். சிலசமயம் இதுவும் தொண்டைமானால் கட்டப்பட்டிருக்கலாம். இங்கிருந்த கண்ணகி சிலை, சிலம்பு என்பன பின்னர் கடற்கரையிற் புதிதாகக் கட்டப்பட்ட கண்ணகி கோவிலுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகக் கூறினார்கள். இப்பொழுதும் பழைய கோவிலின் நினைவாகக் குளக்கரையில் சிலை இல்லாத சிறு ஆலயம் ஒன்று இருக்கின்றது. தென்புலத்தார் வழிபாட்டில் கண்ணகி வழிபாடு மிகப் பழமையானதென்பதும் கடல் வணிகர்களாற் கண்ணகி குலதெய்வமாக வழிபட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கன. இக் கண்ணகி ஆலயமும், தொண்டைமான் குளமும் இப் பகுதிக்குப் பழைய பெருமையைக் கொடுக்கின்றன. மேலும் இங்கு வந்த போத்துக்கீசர் இந்துக் கோவில்களை இடித்து அதற்கு அருகில் தமது தேவாலயங்களைக் கட்டினார்களென்பது வரலாறு கூறும் உண்மையாதலின் இந்த இடத்தில் தேவாலயம் கட்டப்பட்டிருப்பதும் பொருத்தமானதே.
இந்த இடத்தில் தேவாலயம் ஒன்று முதன்முதல் யாரால் எக்காலத்திற் கட்டப்பட்டது என்பது சிக்கலான கேள்வி. ஆரம்பத்தில் கத்தோலிக்கத் தேவாலயமாகப் போர்த்துக்கீசராற் கட்டப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் திருத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஆனால், ஊரவர்களின் கர்ணபரம்பரைக் கதைகளைத் தவிர வேறு உறுதியான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. போர்த்துக்கீசர் கால யாழ்ப்பாணம் ஆரம்பத்தில் பிரான்சிஸ்கன் குருமாரினதும் பின்னர் இயேசுசபைக் குருமாரினதும் மதமாற்றத்திற்கு இலக்காகியது. இயேசுசபைக் குருமார்களே கூடுதலாக யாழ்ப்பாணமெங்கும் கத்தோலிக்கத் தேவாலயங்களைக் கட்டினார்கள். கடல் தொழிலாளர் வாழ்கின்ற பகுதியில் அவர்கள் கூடுதலாக அக்கறை காட்டினார்கள்.
யாழ்ப்பாணத்தை போர்த்துக்கீசர் முற்றாகக் கைப்பற்றமுன் நூனஸ் என்ற இயேசுசபைக் குரு யாழ்ப்பாணத்தில் மதமாற்றம் பற்றி எழுதிய கடித்த்தின் ஒரு பகுதி :
« Having spoken of the fishery, I must not omit to say something Jaffnapatao. The Viceroy Don Constantine went there and captured the country; four thousand and more were made Christians, but peace was afterwards made whithout the least regard to the converts. These Christians are still in Jaffnapatao………
This seems a good reson to complete the conquest of that country……. And we shaal be able to place there all the Christians of fishery………”
யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கீசர் முற்றாகக் கைப்பற்ற முன்பே கரையோரப் பகுதிகளில் மதமாற்றத்தைத் தொடங்கிவிட்டார்கள் என்பதை இக் கடிதப் பகுதி கூறுகின்றது. எனவே மயிலிட்டிப் பகுதியில் போர்த்துக்கீசர் அக்கறை செலுத்தியிருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மேலும் தற்போதுள்ள தேவாலயத்தில் நான்கு ஒடுக்கமான வளைவு யன்னல்கள் இருப்பதும் போர்த்துக்கீசக் கட்டிடக்கலைச் சாயல் என்று கருதப்படுகின்றது.
ஆனால் போர்த்துக்கீசத் தேவாலயம் இருந்ததற்கான நேரடிச் சான்றுகள் எதுவும் இப்பொழுது கிடைக்கவில்லை. தெல்லிப்பழை, மல்லாகம் முதலிய இடங்களிலுள்ள தேவாலயங்கள் போர்த்துக்கீசரால் கட்டப்பட்டு ஒல்லாந்தரால் திருத்தப்பட்டதாக போல்டேயஸ் கூருகின்றார். ஆனால் இவற்றை அடுத்து அவர் குறிப்பிடும் மயிலிட்டித் தேவாலயத்தைப் பற்றி இத்தகைய குறிப்புகள் எதுவுமில்லை. இதே நேரத்தில் மயிலிட்டித் தேவாலயத்தின் படம் போல்டேயஸால் வரையப்பட்டுள்ளது. எனவே இத் தேவாலயம் 1665க்கு முன் பூர்த்தியாகி இருக்கவேண்டும். 1658இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் 1665க்கு இடைவெளியில் இவ்வளவு பெரிய தேவாலயத்தைக் கட்டியிருப்பார்களென்பதும் ஐயத்திற்குரியதே. எனவே போர்த்துக்கீசர் கட்டிய தேவாலயத்தையே ஒல்லாந்தர் திருத்தினார்கள் என்று கொள்ளவும் இடமுண்டு என்பர் ஒருசாரார்.
இத் தேவாலயத்தைப் பற்றிய தெளிவான நேரடியான குறிப்பு போல்டேயஸாலேயே கூறப்படுகிறது. பிலிப்ஸ் போல்டேயஸ் (Phillipus Baldaeus) என்பவர் ஒல்லாந்த மதகுரு. 1658இல் ஒல்லாந்தப் படைகள் ரைசிளப்வான்கோயன்ஸின் தலைமையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற வந்தபொழுது அவர்களுடன் இவரும் வந்தார். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய உடனேயே யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் மதமாற்றத்திற்குப் பொறுப்பாக போல்டேயஸ் நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாணத்திலுள்ள போர்த்துக்கீச ஆலயங்களும், பாடசாலைகளும் இவரால் பொறுப்பேற்கப் பட்டுத் திருத்தப்பட்ட டச்சுமத ஆலயங்களாகவும், ஒல்லாந்தப் பாடசாலைகளாகவும் மாற்றப்பட்டன. அப்போதிருந்த டச்சுத் தேசாதிபதியாகிய யோன் மட்சூய்கரின் முழு ஆதரவும் இவருக்குக் கிடைத்தது. 1658 முதல் 1665 வரை எட்டு ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் சேவை செய்தபொழுது குடாநாட்டின் பல பகுதிகளையும் பார்வையிட்டு ஆங்காங்கு தேவாலயங்களைப் புதுக்கியும், புதிதாகவும் அமைத்தார். 1665இல் ஒல்லாந்து தேசம் திரும்பிய அவர் தமது நினைவுகளை 1672இல் நூல் வடிவில் வெளியிட்டார். இந் நூலில் பெரும்பகுதி யாழ்ப்பாணத்தைப் பற்றியே குறிப்பிடுகின்றது. யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் இருந்த தேவாலயங்களின் படங்கள் (மயிலிட்டி உட்பட) இதில் வரையப் பட்டுள்ளன. மயிலிட்டித் தேவாலயம் இவரின் மேற்பார்வையிலேயே திருத்தப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது உறுதி. மயிலிட்டித் தேவாலயத்தையும் அதில் நடைபெற்றுவந்த ஒல்லாந்தப் பாடசாலையையும் பற்றி அவர் மேல்வருமாறு கூறுகின்றார்:
"The church of Mayletti lies full one and quarter hours march from the principal church Telepole. Here there is a very respectable school Comprising 750 children far advanced in knowledge with a clever school master. Who single handed does much more than the two who preside over the school of Teleople. Here there is Congregation of 1500 to 1600 persons very attentive and far exceeding the others. The church is built of good coral stones and is wide and roomy. The house attached to it, is very lofty with a flat roof extending over the choir of the church, affording a fine prospect of sea and land. Might well be designated Bell Videre or Boa Vista: the church is not above a half or quarter hours distance from the seashore. We have here plenty of fish, soles, plaice, crabs ect. The place abounds also in hare and partridges”.
போல்டேயஸ் காலத்தில் மயிலிட்டி ஒல்லாந்தப் பாடசாலை அறிவாற்றலுள்ள 750 மாணவர்களுடனும், திறமையான ஆசிரியருடனும் இயங்கியது என்பது மேலே கூறப் பட்டுள்ளது.
ஒல்லாந்தர் காலத்திலேயே மேலும் பல திருத்தங்கள் இத் தேவாலயத்தில் மேற்கொள்ளப் பட்டிருக்கலாம். இச் சூழல் ஒல்லாந்தர் காலத்தில் கடல் வர்த்தகத்திலும் சிறப்புற்று இருந்திருக்கின்றது. தேவாலய வளவில் கண்டெடுக்கப்பட்ட திருவனந்தபுர நாணயமும், வீரமாணிக்க தேவன்துறை, பெரியநாட்டுத் தேவன்துறை என்ற துறைகளின் பெயர்களும் பிற்காலத்தில் தென்னிந்தியக் கரைகளோடு நடைபெற்று வந்த வர்த்தகத்திற்கு நல்ல சான்றுகள்.
இத் தேவாலயம் பிற்காலத்திற் கைவிடப்பட்டு இன்று பாழடைந்து இருக்கக் காரணம் என்ன? ஒல்லாந்தரால் இங்கு புகுத்தப்பட்ட புனரமைக்கப்பட்ட டச்சுமதம் (Re-formed Dutche Religion) காலகதியில் செல்வாக்கு இழக்கத் தொடங்கிவிட்டது. ஒல்லாந்தர் கல்வினுடைய கோட்பாடுகளைப் பின்பற்றியவர். கல்வினுடைய மதம் கிழக்கு நாடுகளுக்கு ஏற்றதாக இருக்கவில்லை. கல்வினுடைய கொள்கைகளைச் சுதேச மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் கத்தோலிக்க மதமோ பௌத்த, இந்து மதங்களைப் போன்று பொது மக்களால் நடைமுறையில் அநுசரிக்கக்கூடிய மதமாக இருந்தது. கத்தோலிக்கக் குருமாருக்கு இருந்த உழைப்பும், உறுதியும், மதப் பற்றும் டச்சுக் குருமாருக்கு இருக்கவில்லை. டச்சுக் குருமார் சம்பளத்திற்காக உழைத்தனர். டச்சு மதத்திற்கு மாறியவர்களும் அதற்கு விசுவாசமாக இருக்கவில்லை. இதைவிட இலங்கையிலிருந்த டச்சுத் தேவாலயத்திற்கும் டச்சு அரசாங்கத்திற்கும் இடையில் பிணக்குகள் நெடுங்காலமாக இருந்துவந்தன. தேவாலயங்களும் பாடசாலைகளும் டச்சு அரசாங்கத்தின் அங்கமாக இருத்தல் வேண்டுமென்று டச்சுக் கொம்பனி கருதியபோது குருமார்கள் அவை தனித்தியங்கவேண்டும் என்றனர். இவ்வாறான பல காரணங்களால் ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றியதும் டச்சு மதமும் டச்சுத் தேவாலயங்களும் மறையத் தொடங்கிவிட்டன. ஓரிரு தேவாலயங்களைத் தவிர ஏனையவை அங்கிலிக்கன், வெஸ்லியன், மெதடிஸ்ட், அமெரிக்கன் மிஷன் தேவாலயங்களாக மாறிவிட்டன. சில கைவிடப்பட்டுவிட்டன. எனது ஊகத்தின்படி மயிலிட்டித் தேவாலயம் 1800 அளவில் கைவிடப்பட்டிருக்கலாம். (1796 அளவில் ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றினர்.) ஏனோ இதனைப் புனரமைக்க அக்காலத்தில் எந்த மிஷனும் முயற்சியெடுக்கவில்லை.
1816இல் தெல்லிப்பழையில் குடியேறிய அமெரிக்கன் மிஷன் பிற்காலத்தில் மயிலிட்டித் தேவாலயத்தைப் பொறுப்பேற்று அங்கு ஒரு கொட்டிற் பாடசாலையை அமைத்தது. ஆனால் அவர்களும் தேவாலயத்தைத் திருத்தவில்லை. அமெரிக்கன் மிஷன் மயிலிட்டிக்கு வந்த பொழுது தேவாலயம் திருத்தமுடியாத அளவு பாழடைந்திருக்கலாம்.
இதற்குப் பேய்க்கோவில் என்ற பெயர் வழங்குவதற்குரிய காரணம் சிந்திக்கற்பாலது. நெடுங்காலமாகப் பாழடைந்திருந்த்தால் இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். அல்லது பேக் என்ற பெயர் உடையவர் இக் கோவிலோடு தொடர்புடையவராக இருந்திருக்கலாம் என்று கூறுவர். ...
தூய்மையான டச்சுக் கட்டிடக் கலையை வெளிப்படுத்தி நிற்கும் மயிலிட்டித் தேவாலயம் அகழ்வு ஆராய்ச்சி செய்யவேண்டியது மண் மேடிட்டுள்ள பகுதிகளை அகழ்வதன் மூலம் புதிய சான்றுகள் வெளியாகலாம்.
(இத் தேவாலயத்தைப் பார்வையிட்டு வேண்டிய கருத்துரைகள் கூறி உதவிய யாழ். தொல்பொருள் நிலைய அதிபர் திரு. ம. பொ. செல்வரத்தினம் அவர்களுக்கு எனது நன்றி.)
(இணையத்திற்காக எழுத்து வடிவம் - குணபாலசிங்கம் அருண்குமார்)