எங்கள் பொன் விளைந்த பூமியில் மண் விழுந்த நாள்.
எப்படி மறப்பது அந்நாளை?
மயிலிட்டி மண்ணே!
இரும்புக்கூண்டில் இருந்த இராஜபறவை நீ!
எவனும் வாலாட்ட முடியாத வல்லரசு.
கடல்வழி பார்க்க காங்கேசன் துறைமுகமும்,
வான்வழி பார்க்க பலாலி விமானநிலையமும்,
தரைவழி பார்க்க சீமெந்து சாலையும் நிமிர்ந்து நின்றது.
கட்டுமரமேறி ஒருவனும்.
கலைத்தாய் மடியில் இன்னொருவனும்,
கற்பகதருவின் உச்சியிலே மற்றவனும்,
கலப்பை முனையிலே மற்றொருவனும்,
சிந்திய வியர்வையில்
பொங்கிய பெருவெள்ளம் நீ.
காட்டாற்று வெள்ளமே கண்பட்டு போனதோ?
உனை இழந்தோம், உறவிழந்தோம்,
சொத்திழந்தோம்,சுகமிழந்தோம்,
ஏதிலிகளானோம்,திசைமாறிப்போனோம்,
அகதியென பெயரெடுத்து உலகெங்கும் அலைகின்றோம்.
இன்று கனடாவில் வாழும் உன்னவர்கள்
ஒன்று கூடுகிறார்கள்,
அடுத்த கூடலாவது உன்னடியில் ஆகட்டும்.
நன்றி....
நமது உறவு
சண் கஜா
(மயிலைக் கவி)