சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி)
முத்துமாரியம்மன் வசனம் :
அக்காள் சொன்ன முறைப்படி பிறப்பு ஆயிரமும் இறப்பு ஆயிரத்தொன்றும் சரிவர நடாத்திவைக்க வேண்டுமெனில், நான் அந்த வைகைக் கரையோரம் சென்று தவமிருக்க வேண்டும். இதோ வைகைக்கரை செல்கிறேன்.
முத்துமாரியம்மன் பாடல் :
வைகைக்கரை தேடியெல்லோ முத்துமாரியம்மன்
தாயார் வடிவழகி போறாவாம் மாரி தேவியம்மன்
வைகைக்கரை வந்துவிட்டேன், கங்கையிலே நீராட வேண்டும்,
- முத்துமாரியம்மன் நீராடுதல்
மூன்று குளம் தான் முழுகி - முத்துமாரியம்மன்
முக்கண்ணனை தோத்தரித்தாள்.
நான்கு குளம் தான் முழுகி – முத்துமாரியம்மன்
நாயகனை தோத்தரித்தாள்.
ஐந்து குளம் தான் முழுகி – முத்துமாரியம்மன்
அரணாரை தோத்தரித்தாள்.
அரகரா என்று சொல்லி – முத்துமாரியம்மன்
அணிந்து கொண்டாள் உருத்திராட்சம்.
சிவ சிவ என்றுசொல்லி – முத்துமாரியம்மன்
திருநீற்றால் காப்புமிட்டேன்.
ஆற்று மணலெடுத்தோ – முத்துமாரியம்மன்
அரணாரை உண்டு பண்ணி.
சேற்று மணலெடுத்தோ – முத்துமாரியம்மன்
சிவனாரை உண்டு பண்ணி.
முத்துமாரியம்மன் வசனம் :
நீராடி விட்டேன் இனி அத்தாரை நினைத்து தவமிருக்க வாண்டும்.
முத்துமாரியம்மன் பாடல் :
இருந்தாள் அருந்தபசோ – முத்துமாரியம்மன்
ஏழிலங்கை சோதிமின்ன.
வடக்கே சரிந்த சடை – முத்துமாரியம்மன்
வடகடலோ வேர் பரவ.
தெற்கே விழுந்த சடை – முத்துமாரியம்மன்
தென்கடலைத் தொட்டிடுமாம்.
கிழக்கே சரிந்த சடை – முத்துமாரியம்மன்
கீழ்கடலோ வேர்பரவ.
மேற்கே விழுந்த சடை – முத்துமாரியம்மன்
மேல்கடலைத் தொட்டிடுமாம்.
அவா தவத்தால் பெரியவளாம் – முத்துமாரியம்மன்
சாத்திரத்தில் வல்லவளாம்.
அம்மன் இனத்தால் பெரியவளாம் – முத்துமாரியம்மன்
ஈஸ்வரனார் வம்மிசமாம்.
உண்டென்பார் வாசலிலே – முத்துமாரியம்மன்
ஒளிவிளக்காய் நின்றெரிவாள்.
இல்லையென்றார் வாசலிலே – முத்துமாரியம்மன்
இடுவேன் காண் சாபமொன்று.
சிவனாரைத் தான் நினைத்து – முத்துமாரியம்மன்
சிவதபசோ செய்யலுற்றாள்.
அரணாரை தான் நினைத்தோ – முத்துமாரியம்மன்
அருந்தபசோ தானிருந்தாள்.
நாகம் குடை பிடிக்க – முத்துமாரியம்மன்
நல்ல நாகம் தாலாட்டென்றாள்.
இருந்தாள் அருந்தபசோ – முத்துமாரியம்மன்
ஏழிலங்கை சோதிமின்ன.
- சிவன் வரவு
காவி உடுத்தெல்லவோ ஆதிசிவனாரும் – ஓரு
காரணமாய் வேசங் கொண்டார் மாய சிவனாரும்.
நானும் புலித்தோல் உடுத்தெல்லவோ – ஆதி சிவனாரும்
நல்ல பூரணமாய் வேசங்கொண்டேன் மாய சிவனாரும்.
இலங்கும் இலங்கும் என்றோ – ஆதிசிவன் நானும்
எட்டி அடி வைத்தும் வாறேன் மாயசிவன் நானும்.
துலங்கும் துலங்கும் என்றோ – ஆதிசிவன் நானும்
தூக்கி அடி வைத்தும் வாறேன் மாயசிவன் நானும்.
வேலாயுதம் தானெடுத்தோ – ஆதிசிவன் நானும்
விசிக்கிக் கொண்டு வாறேனெல்லோ மாயசிவன் நானும்.
சூலாயுதம் தானெடுத்தோ – ஆதிசிவன் நானும்
சுழட்டிக் கொண்டு வாறேனெல்லோ மாயசிவன் நானும்.
தொடரும்……..