சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி)
சிவன் வசனம்:
நல்லது அந்த ஆங்காரமாரி என்னை நினைத்து
அகோர தவம் செய்கின்றாள். அவளது தவத்தை
எப்படியாவது கலைக்க வேண்டும். அப்படிக்
கலைப்பதாய் இருந்தால் எனது வெற்றி எனப்படும்
வேலாயுதத்தையும், சக்தி எனப்படும் சூலாயுதத்தையும்
விட்டெறிய வேண்டும் இதோ......
சிவன் பாடல்:
|
நானும் வேலாயுதம் தானெடுத்தோ ஆதிசிவன் நானும் - இப்போ
விசிக்கி விட்டேன் தபசழிக்க மாயசிவன் நானும். நானும் சூலாயுதம் தானெடுத்தோ ஆதிசிவன் நானும் - இப்போ சுழட்டி விட்டேன் தபசழிக்க மாயசிவன் நானும். மண்ணதிர விண்ணதிர வேலாயுதம் தானும் - அது மலையதிரப் போய் வருமாம் சூலாயுதம் தானும். |
சிவன் வசனம்:
|
என்ன ஆச்சரியம்! எனது வெற்றி எனப்படும் வேலாயுதமும்,
சக்தி எனப்படும் சூலாயுதமும் இன்னமும் திரும்பி வரக்காணோம். இது என்னவோ மாரியின் சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். நான் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டும். அப்படிச் செல்வதாய் இருந்தால் நான் இந்த வடிவத்தோடு செல்லக்கூடாது. ஓர் வயோதிப வடிவம் எடுத்துத்தான் செல்ல வேண்டும். இதோ அப்படியே செல்கிறேன். |
சிவன் பாடல்:
|
நானும் என்ன வடிவெடுத்தேன் ஆதிசிவன் - நானும்
எண்ணமற்ற சிந்தையிலே. நானும் தொண்ணூறும் பத்தும் சென்ற ஆதிசிவன் - நானும் துவண்ட கிழவனைப் போல். நானும் நானூறும் பத்தும் சென்ற ஆதிசிவன் - நானும் நரைத்த கிழவனைப் போல். தள்ளாடித் தள்ளாடித்தான் ஆதிசிவன் - இப்போ தடிபிடித்தோ தான் நடந்தார். மாரி தவத்தடிக்கோ ஆதிசிவன் - நானும் மளமளென்று வந்து நின்றேன். |
முத்துமாரி வசனம்:
|
எனது தவத்தடியில் யாராலும் வரமுடியாது.
ஞானத்தால் பார்க்கின்றபோது, வயோதிப வடிவில் அத்தார் தான் வந்திருக்கிறார் போல் தெரிகிறது. தவத்தை விட்டிறங்கி அத்தாரை வரவேற்று, அவருக்குப் பாதபூசை செய்து நமஸ்கரித்து, வேண்டிய வரங்களைப் பெறவேண்டும். அத்தாரே வாருங்கள் இவ் ஆசனத்தில் அமருங்கள். |
சிவன் வசனம்:
|
அப்படியே ஆகட்டும் மாரி.
|
முத்துமாரி வசனம்:
|
அத்தாரிற்கு பூசை செய்வதற்கு வேண்டிய புஷ்பங்களை
எடுப்பதற்கு நந்தவனம் செல்லவேண்டும் இதோ செல்கிறேன். |
முத்துமாரி பாடல்:
|
பூங்காவைத் தேடியெல்லோ முத்துமாரியம்மன் - தாயார்
போதரவாய் போகலரற்றாள் மாரிதேவியம்மன். |
முத்துமாரி வசனம்:
|
பூங்காவிற்கு வந்துவிட்டேன். இனி புஷ்பங்கள் எடுக்கவேண்டும்.
|
முத்துமாரி பாடல்:
|
தோட்டம் திறந்தெல்லவோ முத்துமாரியம்மன்
தொன்னை தைத்துப் பூவெடுத்தாள். கையாலே பூவெடுத்தால் முத்துமாரியம்மன் காம்பழுகிப் போகுமென்று மதியாலே பூவெடுத்தால் முத்துமாரியம்மன் மலர்வாடிப் போகுமென்று வெள்ளியினால் ஒரு கொக்கை கட்டி முத்துமாரியம்மன் விதம் விதமாய் போவெடுத்தாள். தங்கத்தினால் நல்ல கொக்கை கட்டி முத்துமாரியம்மன் தகுந்த மலர் தானெடுத்தாள். அத்தலரி நல்ல கொத்தலரி முத்துமாரியம்மன் அடுக்கலரிப் பூவெடுத்தாள். சீதூளாய் செவ்வரத்தி முத்துமாரியம்மன் செண்பகப்பூ தானெடுத்தாள். |
முத்துமாரி வசனம்:
|
புஷ்பங்கள் எடுத்துவிட்டேன். இனித் தீர்த்தம்
எடுக்க வேண்டும். |
முத்துமாரி பாடல்:
|
ஓடுகிற கங்கையிலே முத்துமாரியம்மன்
ஒரு செம்பு நீரெடுத்தாள். பாய்ந்து வந்த கெங்கையிலே முத்துமாரியம்மன் பக்குவமாய் நீர் எடுத்தாள். |
முத்துமாரி வசனம்:
|
புஷ்பமும், தீர்த்தமும் எடுத்துவிட்டேன் - இனி
அத்தாரிடம் செல்ல வேண்டும். |
முத்துமாரி பாடல்:
|
நானும் அத்தாரத் தேடியெல்லோ முத்துமாரியம்மன் - இப்போ
அன்புடனே போகலுற்றாள் மாரிதேவி அம்மன். சிவனாரத் தேடியெல்லோ முத்துமாரியம்மன் - தாயார் சீக்கிரமாய் போறாவாம் மாரிதேவி அம்மன். |
முத்துமாரி வசனம்:
|
சரி இனி அத்தாருக்குப் பன்னீரால் கால் கழுவி,
பட்டினால் ஈரம் துவட்டி, கொண்டுவந்த பூக்களைச் சொரிந்து வேண்டிய வரங்களைப் பெறவேண்டும். |
|
தொடரும்……..
|