
தொடர் – 7
சண்முகநாதன் கஜேந்திரன்
முத்துமாரியம்மன் பாடல்:
|
இந்திரனார் வாசலிலே முத்துமாரியம்மன் - ஒரு
சிறிய அன்னம் காவு கொண்டாள் மாரிதேவியம்மன். பரமசிவன் வாசலிலே முத்துமாரியம்மன் - ஒரு ஒரு பாற்பசுவும் காவு கொண்டாள் மாரிதேவியம்மன். யம தர்மன் வாசலிலே முத்துமாரியம்மன் - ஒரு வெள்ளை அன்னம் காவு கொண்டாள் மாரிதேவியம்மன். நாலு தெரு நாலு சந்தி முத்துமாரியம்மன் - ஒரு நரபலியும் காவு கொண்டாள் மாரிதேவியம்மன். அத்தாரை தேடியெல்லோ முத்துமாரியம்மன் அது சுறுக்காய் போகலுற்றாள் மாரிதேவியம்மன். சிவனாரை தேடியெல்லோ முத்துமாரியம்மன் சீக்கிரமாய் போகலுற்றாள் மாரிதேவியம்மன். அத்தார் மேல் போட்ட முத்தை - முத்துமாரியம்மன் அன்புடனே தானெடுத்தாள் மாரிதேவியம்மன். சிவனார் மேல் போட்ட முத்தை - முத்துமாரியம்மன் சீக்கிரமே தானெடுத்தாள் மாரிதேவியம்மன். முத்தெடுத்த கையுடனே முத்துமாரியம்மன் விட்டெறிந்தாள் பட்டணத்தை மாரிதேவியம்மன். பயணம் பயணம் என்றோ முத்துமாரியம்மன் - அவா வைசூரன் பட்டணம் போகலுற்றாள் மாரிதேவியம்மன். |
வைசூரராசன் பாடல்:
|
தங்கப்பல்லக்கில் ஏறியல்லோ வைசூரராசன் - அவர்
தானோடி வாறாராம் வைசூரராசன். முத்துப்பல்லக்கில் ஏறியல்லோ வைசூரராசன் - இப்போ மொலு மொலென்ன வாறாராம் வைசூரராசன். மல்லர்கள் முன் நிற்க வைசூரராசன் - இப்போ மன்னனும் நான் ஓடிவாறேன் வைசூரராசன். ஆனை படை சூடி எல்லோ வைசூரராசன் - இப்போ அரசனும் நான் ஓடிவாறேன் வைசூரராசன். செங்கோல் ஒன்று கைப்பிடித்து வைசூரராசன் - இப்போ சீக்கிரமாய் வந்து நின்றேன் வைசூரராசன். சிம்மாசனம் தேடியெல்லோ வைசூரராசன் - இப்போ சீக்கிரமாய் வந்தமர்ந்தேன் வைசூரராசன். |
மல்லர்கள் வசனம்:
|
மகாராசா நமஸ்கரிக்கின்றோம்.
|
வைசூரராசன் வசனம்:
|
சர்வ தயாபர சிவபிரான் திருவருளால் அரிதாகிய மானிடப் பிறப்பில் விக்கினமின்றி அவதரித்து, பிதா மாதாக்கள் பெயர் விளங்க, இச் சிம்மாசனத்தில் இருந்து செங்கோல் செலுத்தி வருகின்றேன். குடிமக்களின் சேமலாபங்களை விசாரிக்க வேண்டும்..... அமைச்சரே!
|
மந்திரி வசனம்:
|
அரசே!
|
வைசூரராசன் வசனம்:
|
நமது நாட்டின் விசாரணைகளை விசாரிக்க ஆவல் கொண்டுள்ளேன். பதி அளிக்க சித்தமாய் இருக்கின்றீர்களா?
|
மந்திரி வசனம்:
|
எவ்விதமான கேள்விகளைக் கேட்டாலும் தகுந்த பதில் அளிக்கச் சித்தமாய் இருக்கிறேன் அரசே!
|
வைசூரராசன் வசனம்:
|
அடே மல்லர்காள் நான் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்கச் சித்தமாக இருக்கிறீர்களா?
|
மல்லர்கள் வசனம்:
|
ஆம் மகாராசா!
|
வைசூரராசன் வசனம்:
|
அடே மல்லர்களே! தேவாலயம், பிரமாலயம், விஷ்ணு ஆலயம் இவ்வாலயங்களில் ஆறுகாலப் பூசை நெய்வேத்தியம் குறைவின்றி நடந்து வருகின்றதா?
|
மல்லர்கள் வசனம்:
|
குறைவின்றி நடந்து வருகின்றது மகாராசா.
|
வைசூரராசன் வசனம்:
|
சபாஷ் மெச்சினேன் மல்லர்காள், அன்ன சத்திரங்களில் என்றும் வரும் ஏழைகளுக்கு குறைவின்றி அன்னமளித்து வருகின்றார்களா?
|
மல்லர்கள் வசனம்:
|
குறைவின்றி அன்னமளித்து வருகின்றார்கள்.
|
வைசூரராசன் வசனம்:
|
மிகவும் சந்தோசம். அடே மல்லர்காள்! ஆசாரவாசலில் கவனமாகக் காவல் செய்யுங்கள்.
|
மல்லர்கள் வசனம்:
|
உத்தரவு மகாராசா.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
இந்த முத்துக்களையெல்லாம் அளந்துகட்ட வேண்டும்
|
முத்துமாரியம்மன் பாடல்:
|
முக்காலி மேலிருந்தோ முத்துமாரியம்மன்
மூன்றுபடி முத்தளந்தா. நாற்காலி மேலிருந்தோ முத்துமாரியம்மன் நாலுபடி முத்தளந்தா. முத்தளந்த கொத்தையெல்லாம் - அவா விட்டெறிந்தா பட்டணமே. முத்தளந்த கையுடனே முத்துமாரியம்மன் முன்களத்தைப் பார்க்கலுற்றாள். |
முத்துமாரியம்மன் வசனம்:
|
முன்களத்தைப் பார்க்கும்போது மூன்று முத்து எஞ்சியிருக்கிறது. அதில் ஒரு முத்தை எடுத்து ஆகாயத்தில் எறிந்து விடுவோம். ஆகாயத்தில் எறிந்த முத்து நட்சத்திரங்களாக இருக்கின்றது. மற்ற முத்தை எடுத்துக் கடலிலே எறிந்து விடுவோம். கடலிலே எறிந்த முத்து முருகைக் கற்களாக மாறி இருக்கிறது. மற்ற முத்தை எடுத்து பூமியிலே எறிந்து விடுவோம். பூமியில் எறிந்த முத்து அறுகில் கிழங்குகளாகவும், கற்பாறையில் போறைகளாகவும் இருக்கின்றது. சரி நல்லது வைசூரராசன் என்பவன் தேவருக்கும் முனிவருக்கும் அஞ்சாது இராச்சியம் செய்து வருகின்றான். அவனை நான் ஒருமுறை பார்ப்பதாக இருந்தால் இவ் வடிவத்தோடு செல்லக்க் கூடாது. நான் ஒரு குஷ்டரோகக் கிழவி வடிவெடுத்துத்தான் செல்லவேண்டும்.
|