தொடர் – 8
சண்முகநாதன் கஜேந்திரன்
முத்துமாரியம்மன் பாடல்:
|
என்ன வடிவெடுத்தா முத்துமாரியம்மன்
எண்ணமற்ற சிந்தையிலே. தொண்ணூறும் பத்தும் சென்ற முத்துமாரியம்மன் துவண்ட கிழவியைப் போல். நானூறும் பத்தும் சென்ற முத்துமாரியம்மன் நரைத்த கிழவியைப் போல். தள்ளாடித் தள்ளாடித் தான் முத்துமாரியம்மன் தடி பிடித்துத் தான் நடந்தா. சண்டாளன் பட்டணத்தை முத்துமாரியம்மன் தான் பார்க்க வேண்டுமென்று. இராசாவின் மாளிகைக்கோ முத்துமாரியம்மன் இராச கன்னி வந்து நின்றாள். |
முத்துமாரியம்மன் வசனம்:
|
ஆரப்பா வீட்டுக்காரர்! ஆரப்பா வீட்டுக்காரர்!
|
வைசூரராசன் வசனம்:
|
அடே மல்லர்காள், ஆசார வாசலில் ஏதோ சத்தம் கேட்கிறது அறிந்து வாருங்கள்.
|
மல்லர்கள் வசனம்:
|
சரி அப்படியே.... மகாராசா ஒரு குஷ்டரோகக் கிழவி வந்து நிற்கின்றாள்.
|
வைசூரராசன் வசனம்:
|
என்ன குஷ்டரோகக் கிழவியா? அவளை இவ்விடம் அழைத்து வாருங்கள்.
|
மல்லர்கள் வசனம்:
|
உத்தரவு.... கிழவி இதோ வா. மகாராசா இதோ,
|
வைசூரராசன் வசனம்:
|
அடியே சண்டாளி.
|
வைசூரராசன் பாடல்:
|
யார் குடிகெடுக்க வந்தாய் சண்டாளத் துரோகி
நீயும் ஆண்டி வேடம் பூண்டு வந்தாய் அப்பாலே போ. பாலர் குடி கெடுக்கச் சண்டாளத் துரோகி - நீயும் பாவி இங்கு வந்தாயோடி அப்பாலே போ.. போ.. அம்மையுடன் கொப்பளிப்பான் சின்ன முத்துகள் - நீயும் அணுகாத நோய்களெல்லாம் கொண்டு வந்தாய் செல். |
வைசூரராசன் வசனம்:
|
அடியே சண்டாளி காகம் பறவாது, கரிக்குருவி நாடாது, சிட்டுப் பறவாது, சிறு அன்னம் நாடாது அப்பேற்பட்ட நோயில்லா ஊருக்கு நோய்களைக் கொண்டு வந்திருக்கின்றாய். அடியே உன்னைச் சும்மா விடுவேன் என்று எண்ணாதே. அடே மல்லர்காள் இவளை அடுத்த கானகத்தில் கொண்டுபோய் வாளால் வெட்டி இரத்தம் கொண்டுவந்து காட்டுங்கள். செல்லுங்கள் சீக்கிரம்.
|
மல்லர்கள் வசனம்:
|
அப்படியே மகாராசா....... கிழவி நட.
|
மல்லர்கள் பாடல்:
|
நடவும் நடவும் என்றோ மல்லர் இருபேரும் - இப்போ
முன்னும் பின்னும் இழுக்கலுற்றோம் மல்லர் இருபேரும். பின்கட்டாய்க் கட்டியெல்லோ மல்லர் இருபேரும் - இப்போ பிடரியிலே அடிக்கலுற்றோம் மல்லர் இருபேரும். பக்கக் கட்டாய்க் கட்டியெல்லோ மல்லர் இருபேரும் - இப்போ பளுப்பளுவாய் இடிக்கலுற்றோம்மல்லர் இருபேரும். அந்த வானம் கடந்து மல்லர் இருபேரும் - ஒரு அப்பால் வனம் தான் கடந்தோம் மல்லர் இருபேரும். சிங்கம் உறங்கும் வனம் மல்லர் இருபேரும் - இப்போ சிறு குரங்கு தூங்கும் வனம் மல்லர் இருபேரும். கொலைக்களத்தைத் தேடியெல்லோ மல்லர் இருபேரும் கிழவியைக் கொண்டு வந்து சேர்த்தோமாம் மல்லர் இருபேரும். |