தொடர் – 15
சண்முகநாதன் கஜேந்திரன்
முத்துமாரியம்மன் பாடல்:
|
அத்தார் சுற்றுகிறார் ஆசை அத்தார் சுழலுகிறார் – ஆடும்
பம்பரம்போல் சுழன்றுதான் விழுந்தார். அத்தார் தத்துகிறார் ஆசை அத்தார் தவழுகிறார் – அப்படி தவண்டுமெல்லோ தரையில்தான் விழுந்தார். அத்த மதம் அத்தார்க்குப் பித்தம் பித்தம் – இப்போ அதிவெறியோ ஆசை அத்தார் கொள்ளுகிறார். |
சிவன் பாடல்:
|
அத்த மதம் மச்சாளே பித்தம் பித்தம் – எந்தனுக்கு
அதி வெறியோ ஆசை மச்சாள் கொள்ளுதடி. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
கஞ்சா தின்றதால் பொல்லாத வெறியது போல் - அத்தார்
கள் வெறியோ கடுமையாய்க் கொள்ளுகிறார். |
சிவன் பாடல்:
|
கஞ்சா தின்றதால் பொல்லாத வெறியது போல் – எனக்கு
கள் வெறியோ கன்னி மச்சாள் கொள்ளுதடி. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
அவின் தின்றால் பொல்லாத வெறியது போல் – அத்தார்
அதிவெறியோ மித்தம் மித்தம் கொள்ளுகிறார். |
சிவன் பாடல்:
|
அவின் தின்றால் பொல்லாத வெறியது போல் –எந்தனுக்கு
அதி வெறியோ ஆசை மச்சாள் கொள்ளுதடி. எடி எண்ணி வந்த மச்சாளே காரியத்தை – எந்தன் ஏந்திழையே ஆசை மச்சாள் சொல்லேனடி. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
எண்ணி வந்த அத்தாரே காரியத்தை – உங்கள்
ஏந்திழையாள் ஆசை மச்சாள் சொல்லுறன் கேள். |
சிவன் பாடல்:
|
கருதி வந்த மச்சாளே காரியத்தை – எந்தன்
காரிகையே கன்னி மச்சாள் சொல்லேனடி. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
கருதி வந்த அத்தாரே காரியத்தை – உங்கள்
கன்னி மச்சாள் கவனமாய்ச் சொல்லுறன் கேள். |
சிவன் பாடல்:
|
நினைத்து வந்த மச்சாளே காரியத்தை – எந்தன்
நீள்விழியாள் மச்சாளே சொல்லனெடி. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
நினைத்து வந்த அத்தாரே காரியத்தை – உங்கள்
நீள்விழியாள் நினைத்தோ சொல்லுறன் கேள். |
சிவன் பாடல்:
|
என்ன வரம் பெண்ணே நீ கேட்க வந்தாய் – எந்தன்
ஏந்திழையே கன்னி மச்சாள் சொல்லேனடி. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
சொல்லவுமோ அத்தாரே வெட்கம் வெட்கம்- எந்தனுக்கு
தோணுது மாரி நான் என்ன செய்வேன். |
சிவன் பாடல்:
|
வெட்கம் வந்தால் மச்சாளே காரியமில்லை – எந்தன்
வேல் விழியே கன்னி மச்சாள் கூறேனடி. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
கொஞ்சிக் கொஞ்சி அத்தாரே விளையாட – ஒரு
கொஞ்சும் கிளி தங்களிடம் கேட்க வந்தேன். |
சிவன் பாடல்:
|
கொஞ்சிக் கொஞ்சி நீயும் விளையாட – நானும்
கொஞ்சும் கிளியாக நானும் வாறேனடி. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
கட்டிக் கட்டி அத்தார் நான் முத்தமிட- எனக்கொரு
கைக் குழந்தை தங்களிடம் கேட்க வந்தேன். |
சிவன் பாடல்:
|
கட்டிக் கட்டி மச்சாள் நீ முத்தமிட – நானுமொரு
கைக்குழந்தையாக வாறேனடி. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
படுத்திருந்தோ அத்தாரே பார்த்திருக்க – பச்சிளம்
பாலகனைத் தங்களிடம் கேட்க வந்தேன். |
சிவன் பாடல்:
|
படுத்திருந்தோ மச்சாள் நீ பார்த்திருக்க – பச்சிளம்
பாலகனாய் பக்கத்தில் வாறேனடி. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
அணைத்தணைத்தோ அத்தாரே அருகிருக்க- ஒரு
ஆண்குழந்தை தங்களிடம் கேட்க வந்தேன். |
சிவன் பாடல்:
|
அணைத்தணைத்தோ மச்சாள் நீ அருகிருக்க- நானும்
ஆண் குழந்தையாக வாறேனடி. |
முத்துமாரியம்மன் வசனம்:
|
அத்தாரே! இதுவரை நேரமும் நகைப்பிற்கல்லவா பொழுதைக் கழித்துவிட்டோம். இனித்தான் முக்கிய விடயத்தைத் தங்களிடம் கூறப் போகின்றேன்.
|
சிவன் வசனம்:
|
பெண்ணே! வந்த விடயத்தைக் கூறுவாயாக.
|
முத்துமாரியம்மன் பாடல்:
|
பிள்ளை வரம் அத்தார் வேணுமென்று – இந்தப்
பொற்கொடியாள் மாரி ஓடி வந்தேன். மைந்தன் வரம் அத்தார் வேணுமென்று – இந்தப் மாது கன்னி மாரி ஓடி வந்தேன். |
சிவன் பாடல்:
|
பிள்ளை வரம் பெண்ணே வேணுமென்றால் – நீயும்
பெருந்தபசு மாரி செய்யேனடி. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
பெருந்தபசு மாரி நானிருந்தால் – எனக்குப்
பிள்ளை வரம் அத்தார் தாறதெப்போ? |
சிவன் பாடல்:
|
மைந்தன் வரம் பெண்ணே வேணுமென்றால் – நீயும்
மகதபசோ மாரி செய்யேனடி. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
மகதபசு மாரி நானிருந்தால் – எனக்கு
மைந்தன் வரம் அத்தார் தாறதெப்போ? |
|
தொடரும்.....
|