தொடர் – 17
சண்முகநாதன் கஜேந்திரன்
முத்துமாரியம்மன் பாடல்:
|
ஆரமுதே தம்பி ஆராரோ ஆரிவரோ என் துரையே - நீரும்
ஆரமுதே கண் வளராய் தம்பி சீராரும் என் துரையே என் துரையே - நீரும் செல்வச் சீகாமணியோ? தம்பி பரமசிவன் வரமதனாய் என் துரையே - நீரும் பாலகனாய் வந்தாயோடா தம்பி இந்திரனோ வானவரோ என் துரையே - நீரும் எவர்தானோ நானறியேன். சந்திரனோ சூரியனோ தம்பியரே - நீரும் சாதியிலே பிராமணனோ. |
முத்துமாரியம்மன் வசனம்:
|
நல்லது, பிள்ளையைத் தொட்டிலிலே இட்டுத் தாலாட்ட வேண்டும். மல்லர்களை அழைத்து, எனது மைத்துனியாகிய கறுப்பாசியிடம் அனுப்பி, தொட்டில் செய்துவருமாறு பணிக்க வேண்டும்.
”அடே மல்லர்களே....” |
மல்லர்கள் வசனம்:
|
தாயே! அம்மா அழைத்தீர்களா?
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
ஆமாம். நீங்கள், எனது மைத்துனியாகிய கறுப்பாசியிடம் சென்று எனக்கு ஆண் குழந்தை கிடைத்த விடயத்தைக் கூறி அவரின் கைப்பட அழகிய சிற்பத் தொட்டில் ஒன்றினை உடனடியாகச் செய்வித்து வாருங்கள்.
|
மல்லர்கள் வசனம்:
|
அப்படியே செய்கிறோம் அம்மா.
|
முத்துமாரியம்மன் பாடல்:
|
கறுப்பாசி வீடு தேடி மல்லர் இரு பேரும் - இப்போ
கால் நடையாய்ப் போகினமாம் மல்லர் இருபேரும். |
|
திரை - மாளிகை ----- கறுப்பாசி வரவு
|
மல்லர்கள் வசனம்:
|
அம்மா! நமஸ்கரிக்கிறோம்.
|
கறுப்பாசி வசனம்:
|
அடே மல்லர்களே எழுந்திருங்கள்.
|
மல்லர்கள் வசனம்:
|
அம்மா தங்கள் மைத்துனியாகிய மாரியம்மன் இருக்கின்றாரல்லவா?
|
கறுப்பாசி வசனம்:
|
ஆமாம், இருக்கின்றார்.
|
மல்லர்கள் வசனம்:
|
அந்த முத்துமாரி அம்மனுக்கு அழகிய ஆண் குழந்தை கிடைத்துள்ளது. அக் குழந்தையைத் தாலாட்டுவதற்கு, தங்கள் கைகளால் அழகிய சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய தொட்டில் செய்து வருமாறு அனுப்பியுள்ளார் தாயே.
|
கறுப்பாசி வசனம்:
|
அப்படியா சங்கதி. மிக்க மகிழ்ச்சி. இங்கேயே நில்லுங்கள், இதோ தொட்டில் செய்து தருகின்றேன்..
|
கறுப்பாசி பாடல்:
|
வைர இலுப்பை வெட்டி கறுப்பாசி நானும் - நல்ல
வடிவுருவாய்த் தொட்டில் செய்தேன் கருப்பாசி நானும் இரணை இலுப்பை வெட்டி கறுப்பாசி நானும் - பாலன் இருந்தாடத் தொட்டில் செய்தேன் கறுப்பாசி நானும் கடைச்சற் கால்தான் நிறுத்தி கறுப்பாசி நானும் - நல்ல புடைப்பான சிற்பம் செய்தேன் தொட்டிலுக்கு நானும் அன்ன்மொடு மகரங்களை கறுப்பாசி நானும் - இப்போ அழகாகச் செதுக்கி விட்டேன் தொட்டிலிலே நானும் தொட்டிலிற்குப் பொன் பூசி கறுப்பாசி நானும் - தொடு கயிற்றினிற்கு முத்திழைத்தேன்கறுப்பாசி நானும் |
கறுப்பாசி வசனம்:
|
தொட்டில் செய்து விட்டேன். இனி, இவர் ஜாதகத்தைப் பார்ப்போம். பள்ளிப்படிப்பு முடிந்து, தோழமையைத் தேடும் தருணம் கிழக்குத் திசையிலே தொட்டியத்தை ஆழப்போகும் தொட்டியத்து ராஜனே இவரின் நண்பனாக வருவான். இவருக்குத் திருமணம் எங்கே என்று பார்த்தால், தெந்திசையிலே ஆயிரம் சோதரர்க்கு அரியதொரு தங்கையுடனேயே காந்தர்வமணம் இடம்பெறும். இவை யாவற்றையும் இத் தொட்டிலிலே எழுதிவிடுவோம்.
|
கறுப்பாசி பாடல்:
|
பாலகனின் ஜாதகத்தை தொட்டிலிலே தானும் - மதி
நுட்பத்துடன் பார்த்தெழுதிகறுப்பாசி நானும் தொட்டியத்து ராஜனையும் கறுப்பாசி நானும் - நல்ல தோழமையாய்க் கண்டெழுதி கறுப்பாசி தானும் ஆரியப்பூ மாலை பெண்ணை கறுப்பாசி நானும் - இவர் காரிகையைக் கண்டெழுதி கறுப்பாசி தானும் சம்பங்கித் தேவடியாளை கறுப்பாசி தானும் - அவள் தாயுடனே கண்டெழுதி கறுப்பாசி நானும் சாராயப் பூதி பெண்ணை கறுப்பாசி தானும் - நிறை போதையுடன் கண்டெழுதி கறுப்பாசி நானும் நெல்லி மகள் பூமாதை கறுப்பாசி நானும் - நல்ல துல்லியமாய்க் கண்டெழுதி தொட்டிலிலே தானும் சற்றேழு கன்னிகளை கறுப்பாசி நானும் - ஒரு சதிருடனே கண்டெழுதி தொட்டிலிலே தானும் கழுவெழுதி மழுவெழுதிகறுப்பாசி நானும் - இந்த ஜாதகத்தை தானெழுதி கறுப்பாசி நானும் |
கறுப்பாசி வசனம்:
|
அடே மல்லர்காள்! இவ்விடம் வாருங்கள். அதோ சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய ஜாதகம் பொறிக்கப்பட்ட அலங்காரத் தொட்டில், கவனமாக எடுத்துச் செல்லுங்கள்.
|
கறுப்பாசி பாடல்:
|
மல்லரிடம் தொட்டில் தன்னை கறுப்பசி தானும் - மன
மகிழ்வுடனே கொடுத்து விட்டேன் கறுப்பாசி நானும். |
|
தொடரும்.....
|