தொடர் – 19
சண்முகநாதன் கஜேந்திரன்
முத்துமாரியம்மன் பாடல்:
|
கோதுபடா சின்ன வாய்திறந்து மகனே வாய்திறந்து - உந்தன்
கோகுலத்தை தாய்க்குச் சொல்லேனடா ராசா சொல்லேனடா? |
காத்தவராயன் பாடல்:
|
கோதுபடா சின்ன வாய்திறந்து அம்மா வாய்திறந்து - எந்தன்
கோகுலத்தை தாய்க்குச் சொல்லுறன் கேள் அம்மா சொல்லுறன் கேள். |
முத்துமாரியம்மன் பாடல்:
|
முத்தான சின்ன வாய்திறந்து மகனே வாய்திறந்து - உந்தன்
வித்தாரம் தாய்க்குச் சொல்லேனடா மகனே சொல்லேனடா? |
காத்தவராயன் பாடல்:
|
முத்தான சின்ன வாய்திறந்து அம்மா வாய்திறந்து - எந்தன்
வித்தாரம் தாய்க்குச் சொல்லுறன் கேள் அம்மா சொல்லுறன் கேள். |
முத்துமாரியம்மன் பாடல்:
|
மாணிக்கம் போல் சின்ன வாய்திறந்து ராசா வாய்திறந்து - உந்தன்
மதன மொழி தாய்க்குச் சொல்லேனடா துரையே சொல்லேனடா? |
காத்தவராயன் பாடல்:
|
மாணிக்கம் போல் சின்ன வாய்திறந்து அம்மா வாய்திறந்து - எந்தன்
மதன மொழி தாய்க்குச் சொல்லுறன் கேள். |
முத்துமாரியம்மன் பாடல்:
|
செம்பவள சின்ன வாய்திறந்து ம்கனே வாய்திறந்து - உந்தன்
செந்தமிழில் மொழிகள் சொல்லேனடா மகனே சொல்லேனடா? |
காத்தவராயன் பாடல்:
|
செம்பவள சின்ன வாய்திறந்து அம்மா வாய்திறந்து - எந்தன்
செந்தமிழை தாய்க்குச் சொல்லுறன் கேள் அம்மா சொல்லுறன் கேள். |
காத்தவராயன் வசனம்:
|
அம்மா! எந்தன் அன்னையாகிய தாங்கள், எப்படியான சந்தோசத்தை இப்பொழுது உணர்கிறீர்கள் என்று மகனார் விபரிக்கலாமா தாயே?
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
தெரிவியடா மகனே!
|
காத்தவராயன் பாடல்:
|
ஈணா மலடியென்று அம்மாவே - உன்னை
இருளி என்று ஏசாமலே காயா மலடியென்று அம்மாவே - உன்னைக் கன்னி என்றும் ஏசாமலே மான் வயிற்றில் நான் சனித்து அம்மாவே - உனக்கு மகனாக வந்தேனம்மா பிள்ளையென்றோ நீ எடுக்க அம்மாவே - உனக்குப் பிரிய மகன் ஆக வந்தேன் மைந்தன் என்றோ நீ அணைக்க அம்மாவே - உனக்கு மகனாகி மகிழ்வு தந்தேன். |
முத்துமாரியம்மன் வசனம்:
|
மகனே காத்தவராயா உனக்கோ பாடசாலை செல்லும் பருவம் வந்துவிட்டது. ஆகையால் நீ மாமனார் பாடசாலை சென்று படித்து வரவேண்டும்.
|
காத்தவராயன் வசனம்:
|
அம்மா! பாடசாலைக்கா?
|
காத்தவராயன் பாடல்:
|
பள்ளிக்கென்னைப் போகச் சொன்னால் பெற்றவளே தாயே
பால் பழமோ உண்ணவில்லை உத்தமியே தாயே எழுதத் தெரியா விட்டால் பெற்றவளே தாயே - எனக்கு எழுதிக் காட்டித் தருவாரில்லை உத்தமியே தாயே |
முத்துமாரியம்மன் பாடல்:
|
எழுதத் தெரியாவிட்டால் என் மகனே பாலா - மாமன்
எழுதிக் காட்டித் தருவாரடா கண்மணியே சீலா |
காத்தவராயன் பாடல்:
|
படிக்கத் தெரியாவிட்டால் பெற்றவளே தாயே
படித்துக் காட்டி யார் தருவார் உத்தமியே தாயே |
முத்துமாரியம்மன் பாடல்:
|
படிக்கத் தெரியாவிட்டால் என் மகனே பாலா
படித்துக் காட்டித் தருவாரடா உந்தனது மாமன் |
காத்தவராயன் பாடல்:
|
சொல்லத் தெரியாவிட்டால் பெற்றவளே தாயே
சொல்லிக் காட்டித் தருவாரில்லை உத்தமியே தாயே |
முத்துமாரியம்மன் பாடல்:
|
சொல்லத் தெரியாவிட்டால் என் மகனே பாலா - மாமன்
சொல்லிக் காட்டித் தருவாரடா கண்மணியே சீலா |
காத்தவராயன் வசனம்:
|
அம்மா உனக்கு அண்ணர் எனக்கு மாமன் அவர் என்ன செய்வார் தெரியுமா தாயே!
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
என்னடா செய்வார் மகனே?
|
காத்தவராயன் பாடல்:
|
படிக்கத் தெரியாவிட்டால் பெற்றவளே தாயே - கொண்ணர்
பழுப்பழுவாய் தானடிப்பார் உத்தமியே தாயே |
முத்துமாரியம்மன் வசனம்:
|
ஒரு போதும் இல்லையடா மகனே
|
முத்துமாரியம்மன் பாடல்:
|
படிக்கத் தெரியாவிட்டால் என் மகனே பாலா - அண்ணர்
பக்குவமாய் புகட்டிடுவார் கண்மணியே சீலா |
காத்தவராயன் பாடல்:
|
சொல்லத் தெரியாவிட்டால் பெற்றவளே தாயே - கொண்ணர்
தோப்புக் கரணம் போடச் சொல்வார் உத்தமியே தாயே |
முத்துமாரியம்மன் பாடல்:
|
சொல்லத் தெரியாவிட்டால் என் மகனே பாலா - அண்ணர்
சொல்லிக் காட்டித் தருவாரடா உந்தனது மாமன் |
காத்தவராயன் பாடல்:
|
எழுதத் தெரியாவிட்டால் பெற்றவளே தாயே - கொண்ணர்
எடுத்த கம்பால் தானடிப்பார் உத்தமியே தாயே |
|
தொடரும்.....
|