
தொடர் – 21
சண்முகநாதன் கஜேந்திரன்
காத்தவராயன் வசனம்:
|
நல்லது. தாயார் சொற்படி மாமனார் பாடசாலை சென்று படித்து வந்துவிட்டேன். இனி எனக்கொரு தோழமையைத் தேடவேண்டும். நாலா திசைகளையும் பார்க்கும்போது கிழக்குத் திசையிலே தொட்டியத்தை ஆழுகின்றான் தொட்டியச்சின்னான். அவனோ சூதில் மகாவல்லவன். அவனிடம் சென்று சூது சொக்கட்டான் ஆடி அவனை வென்று எனது தோழமையாக்க வேண்டும். இதோ அவனிடம் செல்கின்றேன்.
|
காத்தவராயன் பாடல்:
|
சோமன் உடுத்தல்லவோ காத்தலிங்கன் நானும் - ஒரு
சொருகு தொங்கல் ஆர்க்கை விட்டேன் மாரி பிள்ளை நானும் தொட்டியத்தை வெல்லவென்றோ காத்தலிங்கன் நானும் - இப்போ தோளில் வைத்தேன் வல்லாயுதம் மாரி பிள்ளை நானும் பாளையத்தை வெல்லவென்றோ காத்தலிங்கன் நானும் - ஒரு பெரிய கத்தி தோளில் வைத்தேன் மாரி பிள்ளை நானும் தூரத்திலே வாறவர்க்கோ காத்தலிங்கன் நானும் - ஒரு சுண்டு வில்லுக் கைப் பிடித்தேன் மாரி பிள்ளை நானும் பக்கத்திலே வாறவர்க்கோ காத்தலிங்கன் நானும் - நல்ல பார வில்லுக் கைப் பிடித்தேன் மாரி பிள்ளை நானும் எட்டத்திலே வாறவர்க்கோ காத்தலிங்கன் நானும் - கூர்மை ஈட்டி ஒன்று கைப் பிடித்தேன் மாரி பிள்ளை நானும் சின்னானைத் தேடியெல்லோ காத்தலிங்கன் நானும் - வெகு சீக்கிரமாய் போகலுற்றேன் மாரி பிள்ளை நானும் |
|
தொட்டியத்துச் சின்னான் வரவு
|
சின்னான் பாடல்:
|
கறுப்புடுத்துக் கச்சை கட்டி தொட்டியத்து ராஜன் - இப்போ
கள்ளவாள் உறையிலிட்டேன் பாளையத்து ராஜன் வெள்ளை வெளுத்துக் கட்டி தொட்டியத்து ராஜன் - சிவ வெண்ணீறும் பூசிக் கொண்டேன் பாளையத்து ராஜன் எடுத்து வைக்கும் கால்களிற்கோ தொட்டியத்து ராஜன் - ஒரு எருக்கலம் பூச்சல்லடமாம் பாளையத்து ராஜன் தூக்கி வைக்கும் கால்களிற்கோ தொட்டியத்து ராஜன் - ஒரு துந்திப் பூச்சல்லடமாம் பாளையத்து ராஜன் மாறி வைக்கும் கால்களிற்கோ தொட்டியத்து ராஜன் - ஒரு மாதுளம் பூச்சல்லடமாம் பாளையத்து ராஜன் தூரத்திலே வாறவர்க்கோ தொட்டியத்து ராஜன் - இப்போ தோளில் வைத்தேன் வல்லாயுதம் பாளையத்து ராஜன் தன்னுடைய மாளிகையில் தொட்டியத்து ராஜன் - இப்போ தானோடி வீற்றிருந்தேன் பாளையத்து ராஜன் |
காத்தவராயன் பாடல்:
|
சின்னான் அரண்மனையில் காத்தலிங்கன் நானும் - வெகு
சீக்கிரமே வந்து நின்றேன் மாரி மகன் தானும் |
காத்தவராயன் வசனம்:
|
சின்னான்.... ஆங்கார மாரியின் அருந்தவப் புதல்வன் காத்தவராயன் நானேதான். நாடு, நகரம் பார்க்கலாம் என்று வந்தேன்.
|
சின்னான் வசனம்:
|
நாடு, நகரம் எப்படி இருக்கிறது அண்ணா?
|
காத்தவராயன் வசனம்:
|
நன்றாக இருக்கிறது தம்பி.
|
சின்னான் வசனம்:
|
தாங்கள் நீண்ட தூரம் நடந்ததினால் களைத்து விட்டீர்கள் போல் தெரிகிறது. தாகம் தீர நீரருந்தி தாம்பூலம் தரிப்போம் அண்ணா.
|
காத்தவராயன் வசனம்:
|
நல்லது அப்படியே ஆகட்டும் தம்பி.
|
சின்னான் வசனம்:
|
அண்ணா தண்ணீர் அருந்துங்கள்.
|
சின்னான் பாடல்:
|
பாக்கையெல்லோ சின்னான் தானெடுத்து - வெகு
பக்குவமாய்க் காத்தான் கைக்கொடுத்தேன் |
காத்தவராயன் பாடல்:
|
பாக்கையெல்லோ காத்தான் தான் வாங்கி - வெகு
பக்குவமாய் வாயில் போட்டுக் கொண்டேன் |
சின்னான் பாடல்:
|
வெற்றிலையைச் சின்னான் தானெடுத்து - வெகு
விருப்புடனே காத்தான் கைக் கொடுத்தேன் |
காத்தவராயன் பாடல்:
|
வெற்றிலையைக் காத்தான்தான் வாங்கி - வெகு
விருப்புடனே வாயில் போட்டுக் கொண்டேன் |
சின்னான் பாடல்:
|
சுண்ணாம்பைச் சின்னான் தானெடுத்து - அதி
சுறுக்குடனே காத்தான் கைக் கொடுத்தேன் |
காத்தவராயன் பாடல்:
|
சுண்ணாம்பைக் காத்தான் தான் வாங்கி - அதி
சுறுக்குடனே நாவில் பூசிக் கொண்டேன் |
சின்னான் பாடல்:
|
புகையிலையைச் சின்னான் தானெடுத்து - இப்போ
போதரவாய்க் காத்தான் கைக் கொடுத்தேன் |
காத்தவராயன் பாடல்:
|
புகையிலையைக் காத்தான் தான் வாங்கி - வெகு
போதரவாய் வாயில் போட்டுக் கொண்டேன் |
சின்னான் பாடல்:
|
அடைக்காயும் சின்னான் வெள்ளிலையும் - இப்போ
அள்ளியெல்லோ காத்தான் கைக் கொடுத்தேன் |
காத்தவராயன் பாடல்:
|
அடைக்காயும் காத்தான்வெள்ளிலையும் - இப்போ
அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டேன் |
சின்னான் பாடல்:
|
தாம்பூலம் சின்னான் தான் தரித்து - தன்னுடை
சப்ர மஞ்சக் கூடம் வீற்றிருந்தேன் |
காத்தவராயன் பாடல்:
|
தாம்பூலம் காத்தான் தான் தரித்து - இந்த
சப்ர மஞ்சக் கூடம் தானமர்ந்தேன். |
|
தொடரும்.....
|