உச்சி வானில் நின்று நச்சு குண்டு போட்டான்,
வஞ்சித்து விட்டாய் என்று நீதி கேட்டோம் ஐநாவில்.
கடல் நடுவில் வைத்து கழுத்தறுத்தான் குமுதினியில்,
வெகுண்டெழுந்து நின்றோம் வீரர்களாய்.
தாயே !
சிங்களவன் கொண்டிருந்தால் சீற்றம் கொண்டு அடித்திருப்போம், பெற்றவள் செய்த குற்றத்தை போயெங்கு முறையிடுவோம்? வளர்த்தவள் வஞ்சித்தால் வழக்காட மன்று உண்டா? அள்ளி அள்ளி தந்தவளே! அள்ளிக்கொண்டு ஏன் சென்றாய்? அலையோசை கேட்க, அதிகாலை வந்தவர்கள் செய்த பாவமென்ன? மதிய வெயிலுக்கு முன் உன் மடி தவழ வந்தவர்கள் சிதறுண்ட மாயமென்ன? கட்டுமரமேறியவன் கரை திரும்பவில்லை, கரை வலை வீசியவன் உயிருடன் இல்லை, திருப்பலி கொடுக்க திருச்சபை வந்தவன், கடல்ப் பலியானான் கரிய நீரிலே. பாலனின் பிறப்பை கொண்டாடும் வேளையில், பாடையில் ஏற்றிய பாவியே! வாழ்வளித்த நீயே! எம் வாழ்வழித்தாயே! உயிரைக் கொன்று பிழைக்கிறோம் என்றா, எங்கள் உயிர்களை தின்றாய்? வெள்ளை மணலையும், நீலக் கடலையும், பாவாக்கிய பாவலன், பனை வடலிக்குள் பிணமாக. ஏலேலோ....ஏலேலோ....என்று உன்னை பாடியவள் இலையானுக்கு இரையானாள். பெத்தவள் போச்சியில் கொடுத்த பாலையே! குடிக்க மறுத்த பாலகனுக்கு, உப்பு நீரை ஊட்டி ஊதி வெடிக்க வைத்தாயே! பட்டம் விட்ட பள்ளிச் சிறுவன் செத்துக் கிடந்தான் முள்வேலியில். எல்லாம் முடிஞ்சு ஆண்டெட்டும் ஆகி விட்டது. நினைவுகள் மட்டும் கண்ணீர் துளிகளாக, உறவுகளே! உங்கள் சாவும் சரித்திரமாகிவிட்டது. கடலம்மா! மீண்டும் உன்னடியே சரணமம்மா, இனி சஞ்சலங்கள் வேண்டாமடி, தண்டனைகள் போதும்.... எங்கள் சந்ததிகள் வாழ அள்ளித் தந்திடுவாய் செல்வம். -மயிலைக்கவி பதிவு: 22/12/2012 | |