★★★★★★★★★★★★★★★
வனவாசம் முடித்து புது வாழ்வு வாழ புறப்பட்டு விட்டோம் .
இனி எவன் வந்து எமைத்தடுத்தாலும் ,
அவனுக்கு அடங்கோம்.
ஆறுமுக சாமி வீதியில் ஆரம்பம் ,
முனையன் வளவான் வீதி வரை தொடர்வோம் .
சிதம்பரம் ஆச்சி மகன்
சிவராசா அண்ணனை பார்த்தேன்
பிராயடி பகுதியின் பெருங் குடி மகனவன்.
நெக்குருகி நின்றான் .
புனர்வாழ்வு தர வேண்டாம் ,
புனரமைப்பும் செய்ய வேண்டாம்
மகிழ்வோடு நாம் வாழ
மயிலிட்டியை மட்டும் தா .
மறு மாதமே மகுடம் சூடுவோம்
மாங்கனி தீவினில் ஓர் பூங்கனிச்சோலை செய்வோம்.
நீரில் மூழ்கி எழ எங்கள் பாவம் பறந்தோடும்
பஞ்சம் பயந்தோடும் .
மாத்தறை சம்மாட்டி மகன்
மங்களவின் ஐஸ் வான்கள்
அணிவகுத்து நிற்கும்.
வீர மாணிக்க தேவன் துறையில்..
நாங்கள் ஐம்பதுக்கு ஐம்பது கேட்கவில்லை
கேட்ட ஜி ஜி பொன்னம்பலமும் இல்லை.
மூன்றில் ஒன்று தந்த முதுசங்கள் நாம்
விட்டு விடு எம்மை வீண் வம்பு வேண்டாம்
அசுரர் குடி அழித்த அழகா !
உனது வீதியில் நடக்கிறது யாகம்.
அகிலமெல்லாம் பரந்திருந்து
சமித்திடுறோம் நாங்கள்
கொழுந்து விட்டெரியும் தீ
நன்மையாய் அமையட்டும்
நாடாளும் மன்றங்களே!
நீங்களும் நெய் விடுங்கள்
அண்ட சராசரமும் அதிரட்டும்
விண்ணதிரும் வேள்வியால் எமக்கு
விடிவு பிறக்கட்டும் .
மயிலைக்கவி
சண் கஜா