மயிலிட்டி-கட்டுவன் வீதிக்கு மேற்குப் புறமாகவுள்ள ஜே-240, ஜே-246 மற்றும் ஜே-247 ஆகிய கிராம சேவைகர் பிரிவுகளுக்குட்பட்ட தென்மயிலை, மயிலிட்டி வடக்கு மற்றும் தையிட்டி கிழக்கு ஆகிய பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 683 ஏக்கர் நிலப்பரப்பில் மீள்குடியமர யாழ்.மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் வாழ்ந்துவரும் 350 குடும்பங்கள் உட்பட சுமார் 1200 குடும்பங்கள் தயாராகி வருகின்றனர். மீள்குடியமரவுள்ள மக்கள் தங்கள் நிலங்களை பார்வையிட்டு அந்தப் பகுதிகளில் மீள்குடியமர்வை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிவருகின்றனர்.
தற்போது மீள்குடியமரும் மக்களுக்கு தேவையான முதற்கட்ட பணிகளை வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் தலைமையில் விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டு காணிகள் மற்றும் பாழடைந்த வீதிகளை துப்பரவு பணிகள் ஆரம்பி்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் 2014 ஆம் ஆண்டு தரவுகளின் படி சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கர் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் இராணுவத்தினர் வசம் இருந்தன. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபாால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது வரை சுமார் 3 ஆயிரத்து 200 ஏக்கர் காணிகள் 5 கட்டங்களாக விடுவிக்கப்பட்டுள்ளன.
செய்தி: நிருஜன் செல்வநாயகம்