
வலிகாமம் வடக்கு, காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி வடக்கு, பலாலி வடமேற்கு ஆகிய பகுதிகளில் விரைந்து மீள்குடியேற்றம் செய்ய வலியுறுத்தி, வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு யாழ். மாவட்டச் செயலர் இமெல்டா சுகுமாரிடம் மனு ஒன்றைக் கையளித்துள்ளது.
யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று காலை, மீள்குடியேற்றக் குழுத் தலைவர் அ.தனபாலசிங்கம் தலைமையில் குறித்த மனு மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டது.
அம்மனுவில்,
இருபத்திரண்டு வருடகாலமாக எங்கள் ஊரையும் காணி, வீடுகளையும், உயிர் உடமைகளையும் இழந்து நிற்கதியான நிலையில் நின்று என்ன செய்வது, ஏது செய்வது, எங்கு செல்வது என்று கலங்கி நிற்கும் மக்கள் நாம் கண்ணீரும் கவலையுடனும் ஒரு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கைடயுடன் விண்ணப்பித்துக் கொள்வதாகவும்,
நாட்டில் முள்ளிவாய்க்கால் யுத்தம் நிறைவடைந்து மூன்று வருடங்கள் முடிவடையும் நிலை நெருங்கிவிட்ட நிலையிலும் யுத்த அனர்த்தத்தினால் நாம் எமது உறவுகளையும் சொத்துக்களையும் இழந்து உண்ணும் உணவிற்கே கஸ்ரப்பட்டு கலங்கி நிற்கின்றோம். இந்தநிலை மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும். எனவும்
யுத்தம் நிறைவடைந்ததும் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. எமது ஊரில் எங்கள் காணி வீடுகளில் மகிழ்வுடன் சுதந்திரமாக வாழப்போகின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2வது மீன்பிடித் துறைமுகமும் இலங்கையின் முதலாவது காசநோய் வைத்தியசாலையும் உருவாக்கப்பட்டதுமான இப்பகுதி கடல் வளத்திலும் விவசாய வளத்திலும் உழைப்பின் மூலம் நாட்டின் வருமானத்தை உயர்த்தி நின்றது. நாம் எமது ஊருக்குச் செல்ல முடியுமா? என்ற ஏக்கத்துடன் வாழ்ந்து விரக்தி அடைந்த நிலையில் எமது ஊரில் எமது சொந்தக்காணிகளில் வீடுகளில் சொந்தமான தொழில் செய்து நாம் வாழ வழி செய்து தாருஙங்கள் என்று ஒருமித்த கருத்துடனும் ஒருமித்த குரலிலும் கேட்டு நிற்கின்றோம். எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் இந்தக் குழுவினால்,
மிள்குடியேற்ற அமைச்சர், பிரதியமைச்சர் (கருணா), அமைச்சர் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தெல்லிப்ழை மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலர்கள், வட மாகாண ஆளுநர், யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி, ஆயர், இந்து மதப்பேரவைத் தலைவர், ஐ.தே.க எம்.பி விஜயகலா ஆகியோருக்கும் இம்மனு கையளிக்கப்படவுள்ளன.
நன்றி உதயன்.கொம்