யாழ். கீரிமலையிலிருந்து தொண்டமானாறு வரையிலான கடற்பகுதியில் மீன் பிடிப்பதற்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.13 கிலோ மீற்றர் தூரத்தினை உள்ளடக்கிய இந்தக் கடற்பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்கு 21 வருடங்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக, யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மற்றும் அடுத்த நிலை தளபதிகளுக்கும், யாழ் மாவட்ட அரச அதிபர் மற்றும் பிரதேச செயலர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
எனவே இவ்வளவு காலமும் கடற்தொழில் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் இந்த நீரேரியில் இனிமேல் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதுடன், தங்கள் வாழ்வாதாரங்களை உயர்த்திக் கொள்ள முடியும் என யாழ் மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 90ம் ஆண்டு இந்தப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதுடன், இந்தப்பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து வந்தது. அத்துடன் இந்தக் கடற் பிரதேசங்களில் மீன் பிடிப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.நேற்று முதல் நீக்கப்பட்டுள்ள இந்தத் தடைஉத்தரவை அடுத்து கீரிமலை, காங்கேசன் துறை, ஊறணி, மயிலிட்டி, பலாலி, தொண்டைமானாறு, ஆகிய பிரதேசங்களைச் சோ்ந்த மீனவர்கள் தடையின்றி மீன் பிடித் தொழிலில் ஈடுபடமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.