யாழ். வலிகாமம் வடக்கு மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் வழங்கப்பட்டிருக்கின்றமை ஒரு வெற்றியே என்றாலும் மக்களுடைய போராட்டங்கள் மற்றும் ஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதிகள் போன்றவற்றின் ஒரு முன்னேற்றபடியாகவே பார்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
1990ஆம் ஆண்டு மக்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் மீண்டும் தங்களது சொந்த நிலத்திற்கு திரும்ப இயலாத நிலை காணப்பட்டது. இந்த நிலையில் மயிலிட்டி மண்ணில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அதனால் நாட்டுக்கு எவ்வளவு நன்மை கிடைத்தது? என்பது யாவரும் அறிந்ததே.
அதற்கு பின்னரும் 6500 ஏக்கர் நிலத்தை சுவீகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தபோது நாங்கள் அதனை எதிர்த்தோம். மக்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்தினோம். குறிப்பாக தெல்லிப்பழையில் இருந்து உள்ளே நுழைவதற்கும் முயற்சித்தோம்.
அதன் விளைவாகவும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுடைய காணிகள் மக்களிடம் வழங்கப்படும் என எமக்கு வழங்கியிருந்த வாக்குறுதியின் விளைவாகவும் மக்களுடைய காணிகள் மக்களிடம் சிறிது சிறிதாக வழங்கப்படுகின்றது.
மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற கட்டடத்தில் வைத்து மீள்குடியேற்றம் தொடர்பாக பேசியிருந்த போது மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்படாது என எங்களுக்கு கூறப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில் பிரதமரும் இருந்திருந்தார்.
ஆனால் இன்று மயிலிட்டி விடுவிக்கப்படும் அளவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதேபோல் மக்களுடைய குடியிருப்பு நிலங்களும் விடுவிக்கப்பட வேண்டும். மேலும் வீதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.
வீதிகள் விடுவிக்கப்படாமையினால் மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது. எனவே மக்களுடைய குடியிருப்பு நிலங்களையும், வீதிகளையும் விரைவுபடுத்தி விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார்.