மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை புதிய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் கூட காணிகள் விடுவிப்பில் விரைவுத்தன்மையை காண முடியவில்லை.
இந்நிலையில் தமது காணிகளையும் வீடுகளையும் மீளப்பெற்றுக் கொள்வதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் காணிகளை விடுவித்துக் கொள்வது என்பது ஒரு கடினமான விடயமாகவே காணப்பட்டு வருகின்றது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படுமென பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதும் கடந்த அரசாங்கத்தினால் அதற்கான முயற்சிகள் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.
பொதுமக்கள் தமது சொந்த காணிகள் அபகரிக்கப்பட்ட நிலையில் அவற்றையே மீள வழங்குமாறு கோரிவருகின்றனர். எனவே, அரசாங்கம் பாதுகாப்புத் தரப்பினரிடம் காணப்படுகின்ற பொதுமக்களின் காணிகளை மீள்வழங்குவதில் தாமதிக்கக்கூடாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் படிப்படியாக வடக்கின் சில இடங்களில் குறிப்பிடத்தக்க காணிகள் விடுவிக்கப்பட்டன.
தொடர்ந்து பொதுமக்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படுமென அரசாங்கத்தினால் உத்தரவாதம் அளித்துள்ள போதிலும் அதற்கான நடவடிக்கைகள் விரைவாக இடம்பெறுவதாக தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளில் மேலும் சில காணிகள் அடுத்த வருடம் அளவில் விடுவிக்கப்படுமென நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் வலி. வடக்கு காணிவிடுவிப்பு மற்றும் வடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவித்து அப்பகுதிகளில் மீள் குடியேற்றம் செய்வது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தலைவர்களுடன் காணி விடுவிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது எனவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவக் கட்டளைத்தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இராணுவத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் நாங்கள் வெளியில் கருத்துக்களை தெரிவிப்பதில்லை. அவ்வாறு கருத்துக்களை வெளியிட்டால் தேவையற்ற விமர்சனங்கள் எழும். இலங்கை அரசாங்கத்துடனும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளிலும் காணி விடுவிப்பு தொடர்பில் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இந்நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் தொடர்ச்சியாக இவ்வாறு காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் காணி விடுவிப்பு என்பது தொடர்ந்து தாமதமாகவே இருந்து வருகின்றது.
ஜனாதிபதி அடிக்கடி வடக்கு மாகாணத்திற்கு செல்லும்போது பொதுமக்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் கருத்து வெளியிட்டு வருகின்றார்.
குறிப்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காணிகளை இழந்த நிலையில் பாரிய துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் எனவே காணிகளை இழந்துள்ள மக்களின் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு வழங்க வேண்டியது அவசியம் என்றும் ஜனாதிபதி அடிக்கடி சுட்டிக்காட்டிவருகின்றார்.
அதுமட்டுமன்றி ஒருமுறை யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கின்ற தற்காலிக முகாம் ஒன்றுக்கு சென்று அந்த மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை நேரில் பார்த்திருந்தார்.
அதுமட்டுமன்றி அந்த மக்களின் அவலங்களை நேரில் கண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவாக அவர்களின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட செயலணியையும் நியமித்திருந்தார்.
ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த செயலணி வடக்கு மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறப்பட்டிருந்த போதிலும் துரதிர்ஷ்டவசமாக இதுவரை பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படாத நிலைமையே காணப்படுகின்றது.
விசேடமாக வடக்குக்கு சென்று வந்ததன் பின்னர் தென்னிலங்கையில் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மக்கள் தம்மிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளையே மீண்டும் கேட்கின்றனர் என்றும் அவ்வாறு மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் மீள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன் உங்களது காணிகளை இழந்துவிட்டு முப்பது வருடங்களாக உங்களால் காத்துக்கொண்டிருக்க முடியுமா? எனவும் தென்னிலங்கை மக்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியிருந்தார்.
அந்தவகையில் வடக்கு மக்களின் அபகரிக்கப்பட்ட காணிகள் மீண்டும் அவர்களிடம் வழங்கப்படவேண்டும் என்பதில் ஜனாதிபதி மிகவும் அக்கறையாக இருக்கின்றார் என்பது தெளிவாகின்றது.
ஆனால், அதற்கான பொறிமுறை உரிய வேகத்தில் நடைபெறுவதாக தெரியவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் மக்களின் காணி விடுவிப்பு விடயத்தில் ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை யாரும் மறுக்க முடியாது.
படிப்படியாக வடக்கின் சில பகுதிகளில் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. சில பிரதேசங்களில் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் அப்பகுதிக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இன்னும் பாரிய அளவிலான காணிகள் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் விடுவிக்கப்படாமல் உள்ளன.
யுத்தத்தினால் கடந்த முப்பது வருடகாலமாக பாதிக்கப்பட்ட மக்கள் பாரிய இழப்புக்களை சந்தித்திருக்கின்றனர். இந்த நிலையில் அந்த மக்களின் காணிகளும் பாதுகாப்புத் தரப்பினரால் யுத்தகாலத்தில் அபகரிக்கப்பட்டன.
எனவே யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அந்தக் காணிகள் மக்களிடம் விரைவாக மீளளிக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான ஆரோக்கியமான நடவடிக்கைகள் எதுவும் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்படவில்லை.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் இந்த விடயத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென மக்கள் பாரிய அளவில் நம்பிக்கை வைத்திருந்தனர்.
புதிய அரசாங்கம் இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க அளவு சாதகமாக செயற்பட்டாலும் மக்களின் காணிகள் விடுவிப்பில் விரைவான முன்னேற்றம் தென்படவில்லை.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வடக்கில் மக்களின் அபகரிக்கப்பட்ட காணிகளை விரைவாக மீளப்பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மக்களின் அபகரிக்கப்பட்ட காணிகளை மீள் வழங்கும் செயற்பாடானது எக்காரணத்தைக் கொண்டும் தாமதிக்கப்படக்கூடியதல்ல.
அனைத்தையும் இழந்து பாரிய வேதனையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் அவர்களின் சொந்தக்காணிகளையாவது விரைவாக மீளப்பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
அந்த மக்கள் அரசாங்கத்திடம் இலவசமாக எதனையும் கேட்கவில்லை. மாறாக தம்மிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளையே விரை வாக பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
அவர்களின் அந்தக் கோரிக்கை நியாயமானதாகும். இந்த விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக தமது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் முன்வைக்கப்படவேண்டும் என்ற நம்பிக்கையிலேயே வடக்கு மக்கள் புதிய அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தனர் அந்த அடிப்படைப் பிரச்சினைகளில் காணிப் பிரச்சினை என்பது பிரதானமானதாகும்.
எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் விரைவாகவும் ஆக்கபூர்வமாகவும் செயற்பட முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
- தமிழ்வின்