வலி. வடக்கு பிரதேச சபையினால் உரிய கட்டிட நிர்மான அனுமதி பெறப்படவில்லை என சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து எமது கோரிக்கை மற்றும் நிலைப்பாட்டினை உள்ளடக்கிய கோரிக்கை மனுவை எழுதி வடக்கு மாகாண ஆளுநர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவி பணிப்பாளர், வலி வடக்கு பிரதேச செயலர் ஆகியோரிடம் வழங்கப்பட்டுள்ளது. வலிவடக்கு பிரதேச சபை தவிசாளர், காங்கேசன் துறை கிழக்கு கடற்றொழில் பரிசோதகர், யாழ்/251 கிராம சேவகர் ஆகியோருக்கான பிரதிகள் 12/06/2019 புதன்கிழமை அன்று சேர்ப்பிக்கப்பட உள்ளது.
மயிலிட்டி துறைமுகத்தை நிர்வகிக்கும் உரிமை அபிவிருத்தியின் பெயரால் தந்திரமாக சிறிலங்கா துறைமுக அதிகார சபையிடம் தாரைவார்க்கப்பட்டுள்ளது. இது குறித்து தெளிவுபடுத்தும் முகமாக 12/06/2019 புதன்கிழமை அன்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களை மயிலிட்டி மக்கள் பிரதிநிதிகள் சந்திக்க உள்ளோம்.
இன்றைய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மயிலிட்டி மண்ணின் பற்றுடன் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். குறிப்பாக அமரர் ஜெயமன்யூ அவர்களது காடாத்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த உறவுகள் அக்கடமையை நிறைவு செய்து இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிந்திய செய்தி 12/06/2019 புதன்கிழமை
துறைமுக விடயத்தில் மயிலிட்டி மக்களின் திடமான நிலைப்பாட்டை யாழ்மாவட்ட அரசாங்க அதிபரிடம் தெரிவித்துள்ளோம்!
மயிலிட்டி துறைமுகத்திற்குள் வருமானம் தரும் செயற்திட்டங்களை வெளியாட்களுக்கு கொடுப்பது, துறைமுக ஆளுகையில் மயிலிட்டி மக்களின் நிலை குறித்த விடயங்களில் மயிலிட்டி மக்களின் நிலைப்பாட்டை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு வேதநாயகம் அவர்களிடம் நேரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் மயிலிட்டி மக்களின் நலன்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் மயிலிட்டி துறைமுகத்தின் ஆளுகை அமையுமாக இருந்தால், இத்துடன் அபிவிருத்தி வேலைகளை நிறுத்தி அப்படியே மயிலிட்டி மக்களிடம் ஒப்படைக்க முயற்சி எடுக்குமாறு வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
வரும் 22 ஆம் திகதி அபிவிருத்தி திட்டம் குறித்தும் குளிரூட்டப்பட்ட அறை விடயம் குறித்தும் திட்ட முகாமையாளர் அரசாங்க அதிபர் முன்னிலையில் தெளிவுபடுத்துவதற்கு அரச அதிபர் ஏற்பாடு செய்துள்ளார். இதனையும் மீறி எமது மக்களின் உரித்துகள் பறிபோகும் வகையில் துறைமுகம் அமையுமாக இருந்தால் ஒன்றுபட்ட மக்கள் ஆதரவுடன் சனநாயக வழியில் போராடுவதென ஒருமித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இச்சந்திப்பில் திரு.குணபாலசிங்கம், திரு.ஜெயம், திரு.றசியசிங்கம், திரு.இராஜேந்திரபிரசாத், திரு.வரதராஜ், திரு.மரியரட்ணம், திரு.ரஞ்சனதேவர், திரு.இராசகுமார், திரு.மயூதரன் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள்: இரா.மயூதரன்