பழம் பெருமை வாய்ந்த மயிலிட்டித்துறை மீன்பிடித் துறைமுகம் கடந்த இடப்பெயர்வு காலத்தில் பலத்த சேதத்திற்கு உள்ளாகியருந்த நிலையில் முதல்கட்ட புனரமைப்பு வேலைகள் முடிக்கப்பட்டு 15.09.2019 அன்று செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
அன்று முதல் மயிலிட்டித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் முகாமையாளராக செயற்பட்டு வந்த திரு. திசவீரசிங்கம் சிவரூபன் திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திற்கும், திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்தில் முகாமையாளராக கடமையாற்றி வந்த திரு. முருகமூர்த்தி திருக்குமரன் மயிலிட்டித்துறை மீன்பிடித் துறைமுகத்திற்கும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து இதுவரை மயிலிட்டித்துறை மீன்பிடித் துறைமுக முகாமையாளரை கௌரவித்து வழியனுப்புவதுடன் புதிய முகாமையாளரை வரவேற்கும் வகையிலும் மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டறவுச் சங்கத்தினரால் குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு விருந்தினர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து நேற்றைய தினம் செவ்வாய்க் கிழமை காலை 10.30 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் குறித்த நிகழ்வு ஆரம்பித்திருந்தது.
மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினால் அமைக்கப்பட்டிருந்த மீன் விற்பனை நிலையத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து துறைமுக மண்டபத்தில் மயிலிட்டித்துறை க.தொ.கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு. சு.றசியசிங்கம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு பொருளாளர் திரு. இரா.மயூதரனால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பணியிடமாறுதல் பெற்றுச் செல்லும் மீன்பிடித்துறைமுக முகாமையாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதை தொடர்ந்து மயிலிட்டித்துறை க.தொ.கூ.சங்கத்தின் சார்பில் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
பணியிட மாறுதல் பெற்றுச் செல்லும் திரு. தி.சிவரூபன், புதிய முகாமையாளர் திரு. மு.திருக்குமரன், காங்கேசன்துறை கிழக்கு கடற்றொழில் பரிசோதகர் பிரிவு கடற்றொழில் பரிசோதகர் திரு. மு.சயந்தன், மயிலிட்டித்துறை வடக்கு ஜே-251 கிராம சேவகர் திரு. கா.துவாரகேஸ்வரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. க.வீரசிவாகரன் மற்றும் மயிலிட்டித்துறை க.தொ.கூ.சங்க நிர்வாகத்தினர், மயிலிட்டிவாழ் மக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி மற்றும் ஒளிப்படங்கள் : இரா.மயூதரன்.