மயிலிட்டித்துறைமுகம் புனரமைப்பு செய்யப்பட்டது... மயிலிட்டி மக்களிடமே கையளிப்பதாக நாட்டின் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் ஊடகங்கள் சாட்சியாக கூப்பாடுபோட்டுவிட்டு போனார்கள்....
மயிலிட்டியைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இரண்டு 28 அடி நீள 2 சிலிண்டர் ஜம்மார் எஞ்சின் பொருத்தப்பட்ட றோலர் படகுகளும் சாதாரண மீன்பிடிப் படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தன.
யாருக்காக மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டதோ (தென்னிலங்கை-வெளிமாவட்ட மீன்பிடிக்கலங்களுக்காக) அவர்களது வருகையுடன் மண்ணின் மைந்தர்கள் விரட்டி அடிக்கப்பட்டதே உண்மை.
துறைமுக அபிவிருத்தியின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட, படகுகள் தரிக்கும் மேடையில் கட்டப்பட்டிருந்த மயிலிட்டியைச் சேர்ந்த உள்ளூர் மீனவர்களுக்கு சொந்தமான மேற்குறித்த இரண்டு றோலர்களும் கடலோரக் காவல் படையினரால் துப்பாக்கி முனையில் விரட்டப்பட்டு அங்கிருந்து வலுகட்டயமாக அகற்றப்பட்டமை றோலர் உரிமையாளர்கள் உள்ளிட்ட மயிலிட்டி வாசிகளுக்கு தெரிந்த பேருண்மையாகும்.
விருந்தாளிகளாக வந்த வெளிமாவட்டத்தை சேர்ந்த பலநாட்கள் தங்கி ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் பலநாட் கலங்கள் வசதியாக படகுகள் கட்டும் மேடையில் கட்டிநிற்க நாதியற்ற மண்ணின் மைந்தர்களது றோலர் துறைமுக மேற்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணையின் உட்பக்கமாக கட்டப்பட்டிருந்தது.
இந்நிலையே நேற்றைய (14/11/2020) நள்ளிரவு வேளையில் வீசிய சூறைக்காற்றினால் பலத்த சேதத்திற்கு உள்ளாகி மூழ்கும் நிலைக்கு பிரதான காரணம்.
அது தவிர துறைமுக முகவாய் பகுதியாக அமைக்கப்பட்ட கல்லணையில் (சுனாமியின் போது) ஏற்பட்ட சிதைவுகள் சீர் செய்யப்படாமையால் கடல் நீர் துறைமுகத்திற்குள் கட்டுப்பாடு இன்றி வரும் நிலை ஏற்பட்டிருந்தது.
அதுவே தற்போதைய மாரி காலத்து கடலடியில் பெருமளவில் கடல் நீர் துறைமுகத்தினுள் உட்புகுவதற்கு வடிகாலாக உள்ளது. 1990 இற்கு முன்னர் இந்த நிலை இருந்ததில்லை.
துறைமுக அபிவிருத்தியின் போதான சில-பல கலந்துரையாடலில் குறித்த துறைமுக முகவாய்ப் பகுதி கல்லணை சிதைவுகள் முதலில் சீர் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை பலர் வலியுறுத்தியிருந்தோம்.
ஓமோம் என போக்கு காட்டியவர்கள் தமது காரியத்தில் (வெளிமாவட்ட படகுகள் தரித்துச் செல்வதற்கான வசதிகளைக் கொண்டதாக அமைப்பது) கண்ணும் கருத்துமாக இருந்தனர்.
அதையும் செய்தும் விட்டனர்.... கடந்த ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய சமயம் அரைகுறையாக (வெளிமாவட்ட படகுகள் தரித்துச் செல்வதற்கான வசதிகள் பூர்த்திசெய்யப்பட்டு) அபிவிருத்தி(?) செய்யப்பட்ட துறைமுகத்தை திறந்து வைத்து வடக்கில் மிகப்பெரும் அபிவிருத்திப் பணியை செய்தோம் என்பதை காட்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் கடந்த நல்லாட்சியின்(?) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் திறந்து வைக்கப்பட்டது, நல்லாட்சிக்கு(?) முட்டுக்கொடுத்த கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் சாட்சியாக.
துறைமுகத்தில் உள்ளூர் மீனவர்களுக்கான வசிதிகள் உள்ளிட்ட துறைமுகம் முழுமையான சீரமைப்பு முடியாமல் திறப்புவிழா நடத்த விடக்கூடாது... போகிற போக்கில உவையள் திரும்பவும் ஆட்சிக்கு வாறது நடக்காது..., இதோட கைகழுவி விட்டிடுவாங்கள் என்று அப்பவும் படிச்சு படிச்சு சொன்னான்... துறைமுகத்தை திறக்க விடாது போராட்டம் நடத்துவம் எண்டு...
இணக்க அரசியல் செஞ்சு முண்டுகொடுப்பில உலகமகா விருது வாங்கினவயளுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு அவையளால அதிசயம் நடக்குமெண்டு நம்பிக்கெட்ட மூத்தவையள் கொஞ்சப்பேருக்கு அப்பேக்க அது உவப்பானதா தெரியேல்ல... இப்பவும் அவைக்கு இந்த வலிகளும்.., வேதனைகளும்.., ஏமாற்றப்பட்டதன் கொதிப்பும் விளங்காது, விளங்கப்போறதும் இல்லை.
இப்ப விடயத்துக்கு வருவம்...
கடும் காற்று மற்றும் கடற்கொந்தளிப்பில் துறைமுகத்திற்குள் கட்டப்பட்ட படகுக்கே இந்த நிலையென்றால் துறைமுகத்தின் மோசமான நிலையை விளக்க வேண்டியதில்லை.
படகு கட்டுறதுக்கு மட்டுமல்ல... துறைமுகத்தில் மண்ணின் மைந்தர்களான மயிலிட்டி மீனவர்கள் மாற்றாந்தாய் பிள்ளைகளை காட்டிலும் மிகவும் கேவலாமாக நடத்தப்பட்டே வருகின்றனர்
துறைமுகத்தை திறந்து வைத்து மயிலிட்டி மக்களிடம் ஒப்படைத்ததாக கூப்பாடு போட்டவையள் இப்ப எங்க எண்டே தெரியல்ல... அவையளை நம்பி முண்டுகொடுத்தவையளும் தோத்தவையள் பாதி பின்கதவால வெண்டவையள் பாதியெண்டு இரண்டுபட்டுப்போய்க் கிடக்கினம்.
உந்த கோதாரியள் ஒண்டும் விளங்காமல் வால் பிடிச்சுக்கொண்டு ஊரையும் ஊர் மக்களின் இருப்பையும் அடமான வச்சவையும் தம்பாட்டில...
இந்த ஒரு றோலருக்கு ஏற்பட்ட சேதமும்.... அதன் உரிமையாள் சந்திதுள்ள இழப்பும்... முடிவல்ல தொடக்கப்புள்ளி என்பதை நாம் உணர்ந்து இப்போதாவது விழித்துக் கொள்ளாதுவிடில் அடுத்த தலைமுறைக்கு மயிலிட்டித்துறைமுகத்தை தொலைதூரத்தில் நின்று காட்சிப்பொருளாக காட்டும் நிலையேற்படுவது திண்ணம்.
அடுத்த கட்ட அபிவிருத்தி நடக்கும் முன்னராவது மயிலிட்டி மக்களின் இருப்பையும், உரித்தையும் நிலைநாட்டும் வகையில் உத்தரவாதப்படுத்தப்பட்ட உறுதிமொழிகளை செயல்வடிவில் பெற்றுக்கொண்டு அனுமதிப்போம்; இல்லையேல் செஞ்சு கிழிச்சதெல்லாம் காணும் எண்டு இதோட அனுப்புற வழியைப்பாப்பம்....
வெறுமனே அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், அரசையும் குறைகூறுவதற்கு முன், ஊரின் நல்லது கெட்டதுகளை ஊரின் நோக்கு நிலையில் நின்று சிந்தித்து செயலாற்றத்தக்கவர்களாக நாம் மாற வேண்டும். இல்லையே ஒதுங்க வேண்டும்.
மயிலிட்டித் துறைமுகத்தை மீட்டெடுத்து மயிலிட்டி மக்களின் இருப்பையும், உரித்தையும் நிலைநாட்ட மயிலிட்டி மக்களாய் ஒன்றிணைவோம் வாரீர்!
மயிலிட்டியின் சமூக மட்ட அமைப்புகள் அனைத்தும் உடனடியாக ஒன்றுகூடி ஒருமித்து முடிவெடுக்காதுவிடில் மயிலிட்டித்துறைமுகம் மயிலிட்டி மக்களுக்கு காட்சிப்பொருளாக மாறும் காலம் விரைவில் உருவாகும்.
"விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்...." எனும் பட்டுக்கோட்டையாரின் வரிகளை மனம்கொள்வோம்.
இரா.மயூதரன்
15/11/2020