காங்கேசன்துறை ஜே/233, ஜே/234, ஜே/235 ஆகிய கிராம சேகவர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை விடுவிக்கப்படாத பகுதி மக்கள் ஒன்றிணைந்து தமது மீள் குடியேற்றம் தொடர்பாக, கோண்டாவிலில் அமைந்துள்ள வேத பாராயண சன சமூக மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
நாம் கடந்த 1990 ஆம் ஆண்டு காங்கேசன்துறை பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வேறு இடங்களில் வசித்து வருகிறோம். தற்போது அப்பகுதி மக்கள் படிப் படியாக மீள் குடியேறி வருகின்றனர். மேலும் பல பகுதி விடுவிக்கப்படாமல் உள்ளது. எமது பகுதிகளில் முன்னர் சுமார் 633 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. இடம் பெயர்ந்த பின்னர் சுமார் 1000 குடும்பங்களாக அதிகரித்துள்ளன.
அவற்றில் 100 க்கும் குறைந்த குடும்பங்களே தற்போது மீள் குடியேற்றப் பட்டுள்ளன. ஏனையவர்களும் மிக விரைவில் குடியேற்றப்பட வேண்டும்.
குறிப்பாக மீள் குடியேற்றிய பின்னர் அனைவருக்கும் வீடுகள் அமைத்துத் தரப்பட வேண்டும் என்பது எமது முக்கிய கோரிக்கையாக உள்ளது. ஏனெனில் எமது வீடுகள் போரினால் அழிவடையவில்லை. 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் எமது வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே தற்போது வீட்டுக்காக வழங்கப்படும் 8 இலட்சம் ரூபாய் பெறுமதி எமக்குப் போதுமானதாக இல்லை. எமது வீடுகளைப் போன்று அமைத்துத் தரவேண்டும். அத்துடன் அடிப்படைத் தேவைகளான வைத்தியசாலை, பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், கடைத் தொகுதி, குடிநீர், வீதிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் எனத் தெரிவித்தனர்.
மேலும் இந்தக் கலந்துரையாடலில் காங்கேசன்துறை மீன்பிடி கூட்டுறவு சங்கத்தின் தலைவர், செயலாளர் ஆகியோர் இணைந்து காங்கேசன்துறையில் விடுவிக்கப் படாமல் உள்ள மீன்பிடித் துறையை விடுவித்து தமது வாழ்வாதாரத்தைப் பெருக்க அனுமதியைப் பெற்றுத்தரக்கோரி மீள் குடியேற்ற அமைச்சரிடம் கையளிக்குமாறு வலி.வடக்கு மீள் குடியேற்ற தலைவர் அ.குணபாலசிங்கத்திடம் மகஜர் ஒன்றும் கையளித்திருந்தனர்.