வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியில் பெரும்பாலானவை தோட்ட நிலங்கள். குடியிருப்பு நிலமாகிய பலாலி வடக்குப் பிரதேசமானது மக்கள் செல்ல முடியாத அளவுக்கு காடாகக் காட்சியளிக்கின்றது. இவ்வாறு வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்தார்.
அந்தப் பகுதிக்குள் செல்ல முடியாதவாறு பற்றை மண்டிப்போய்க் கிடக்கின்றது. காடுகளை வெட்டித் துப்புரவு செய்து கொடுத்தால் மாத்திரமே மக்கள் மீளக் குடியமர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டர்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, தையிட்டி தெற்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ளவை தோட்ட நிலங்கள். இவற்றில் குடியிருப்பு நிலங்கள் மிகக் குறைவானவையாகும். தனித்து தோட்டக்காணிகளை மாத்திரம் விடுவித்துப் பயனில்லை. அந்தத் தோட்டங்களைச் செய்வதற்கு மக்கள் குடியிருப்புக் காணிகளையும் விடுவிக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவேண்டும் என்றார்.
வலி. வடக்கில் கடந்த 29ம் திகதி 701.5 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது. அதில் 7 கிராம சேவையாளர் பிரிவுகள் அடங்கியுள்ளன.
நன்றி: உதயன் பத்திரிகை