இது தொடர்பில், வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நத்தார் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 25 வருடங்களாக முகாம்களில் வாழும் மக்களை நேரில் சந்தித்தார். இதன் போது அவர் இனவாத அரசியல்வாதிகளுக்கு மக்களின் துயர் பற்றி அறைகூவல் விடுத்து இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினையை ஆறுமாத காலத்துக்கு முன்பாக முற்றாகத் தீர்த்து வைத்து மீளகுடியேற்றுவதாகத் தெரிவித்துள்ளார். இதனை நாங்கள் தேவ வாக்காக நம்புகின்றோம்.
இதுவரை காலமும் இருந்த அரசியல் தலைவர்கள் வலி.வடக்கு மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அணுகியதில்லை. நாங்கள் கடந்த காலங்களில் பலமுறை மனுக்கள் கையளித்திருந்தோம். ஆனால், அவர்கள் எமக்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்களே தவிர எந்தவித தீர்வும் தரவில்லை. நல்லாட்சி அரசு தமிழ் மக்களின் ஆதரவுடன் பதவியேற்று ஒருவருடம் நிறைவடையவுள்ளது.
எமது மக்கள், இந்த அரசும் காணி விடுவிப்பு விடயத்தில் இழுத்தடிப்புச் செய்கின்றது என்று தெரிவித்து, கோரிக்கைகளை முன்வைத்து அறவழிப்போராட்டம் செய்ய முற்பட்டனர். இதன் போது எமது அமைப்பு, நல்லாட்சி அரசு விடுவிப்புக்கு நடவடிக்கை எடுக்கும் என்று மக்களைச் சாந்திப்படுத்தினோம்.
மக்களின் அவலங்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஜனாதிபதி உரையாற்றியபோது அவர் முகத்தில் கவலை - கோபம் தாண்டவம் ஆடியதை உணர்ந்தோம். இந்த நிலையில் கடந்த தலைவர்களைப் போல் ஏமாற்றாமல் உரிய காலத்துக்குள் மீள்குடியேற்றப் பணிகளை முடித்துத் தருவார் நல்லாட்சி ஜனாதிபதி என்று நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி: தமிழ்வின்.கொம்