தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் " மக்களின் காணி மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்வோம்" எனும் தொனிப் பொருளில்,
யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு இன்று முற்பகல் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் வ. இன்பம் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருத்தினராகக் கலந்து கொண்ட யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா. செந்தில் நந்தனனிடம் ஆய்வு அறிக்கை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் வ. இன்பத்தினால் உத்தியோகப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
ஐனாதிபதி, பிரதமர் ஆகியோர்களிடம் கையளிக்கும் நோக்கிலேயே இந்த ஆய்வு அறிக்கைகள் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இடம்பெயர்ந்த மக்களின் தற்போதைய நிலைமைகள், இடம்பெயர்ந்த மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள், இடம்பெயர்ந்த மக்கள் மீன்பிடித் தொழிலில் எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்காலச் செயற்பாடுகள் போன்ற பலவிடயங்கள் இந்த ஆய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக் கழகப் போராசிரியர் சிவநாதன், வலி. வடக்கு மீள்குடியேற்றப் புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம்,
வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாளர் வீ.சுப்பிரமணியம், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் ஹர்மன் குமார, மற்றும் மதத்தலைவர்கள், நலன்புரி நிலைய முகாம்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
- தமிழ்வின் |