வலி வடக்கு மக்களை மீள்குடியேற்றுவதில் அரசும் இராணுவமும் மாறி மாறி ஏமாற்று வித்தையையே காண்பித்துக் கொண்டு இருக்கின்றது. விடப்போகின்றோம் வாருங்கள் என அனைத்து மக்களுக்கும் விடுவிக்கப்படும் பகுதியின் படம் போட்டுக் காட்டினார்கள்.
மக்களை வாகனத்தில் ஏற்றி வாகனத்தை நிறுத்தாது படத்தில் காட்டியதில் ஒரு பகுதியை ஊர்வலமாக கொண்டு சென்று காட்டினார்கள்.
26 வருடங்களின் பின் பார்க்கும் மக்களுக்கு எதுவும் விளங்கவில்லை. அதற்கு முன்னரும் காங்கேசன்துறைப் பகுதியில் மக்கள் மீள் குடியேறுவதற்கு ஏற்ற ஒழுங்குகளெதுவும் முழுமையாய் நடைபெறவில்லை.
பான் கீ மூன் வருவதற்கு அவருக்குக் காட்டுவதற்காகவே இந்த ஏற்பாடு, எங்களை மீள்குடியேற்ற அல்ல என்று மக்கள் அப்போது கூறிய கருத்து முற்றிலும் உண்மையாகின்றது. மயிலிட்டி மக்களுடனும் என்னுடனும் இராணுவத்தளபதி இருமுறை உரையாடினார். உங்கள் நிலங்கள் விடுவிக்கப்படும், நிலம் விடுவித்தவுடன் அடுத்தகட்டமாக மயிலிட்டி கடற்கரையோரமும், மீன்பிடித் துறைமுகமும் உங்களுக்கு விடப்படும் மிகவிரைவாக, அத்துடன் உங்கள் இடங்களில் இடையிடையே இராணுவ முகாம்கள் இருக்கும் என்று கூறினார். நாங்கள் இடையிடையே இராணுவ முகாம் இருப்பதால் பிரச்சனை இல்லை. எமது நிலத்தில் எம்மை குடியமர்த்துங்கள் என்று கூறி சம்மதிதோம். ஒரு வாரத்தின் பின்பு எமக்கு விடப்படும் இடம் காட்ட வாகனத்தில் கூட்டிச் சென்று பொன்னாலை பருத்தித்துறை வீதிக்கு வடக்கால் மயிலிட்டி தொடங்கி ஊறணி வரைக்கும் காட்டினார்கள். வீதிக்குத் தெற்கால் உடனடியாக விடும் சாத்தியம் இல்லை பிந்தி விடப்படும் என்று கூறினார்கள்.
ஆனால் அண்மையில் தென்னிலங்கை ஊடகவியலாளர்களுக்கு இராணுவத் தளபதி மகேஸ் சேனனாயக்கா கூறிய செய்தி எம்மை கவலைக்கும் விசனத்துக்கும் உள்ளாக்குகின்றது. அவர் கூறியது இப்பொழுது உள்ள மயிலிட்டி மக்களுக்கு பழைய மீன்பிடிமுறை தெரியாது. ஆகவே தங்கள் நிலத்தை விடுவிப்பதற்காகவே துறைமுகத்தைக் கேட்கின்றார்கள் என்று. நாங்கள் எங்கள் நிலத்தைத்தான் கேட்கின்றோம் வேறு யாருடைய நிலத்தையும் கேட்கவில்லை.
துறைமுகம் படகுகளை பாதுகாப்பாகக் கட்டுவதற்கும், மீன்களை இறக்குவதற்கும், தொழில் உபகரணங்களை ஏற்றுவதற்குமாகும். மீன் பிடிப்பது ஆழ்கடலில் என்பது தளபதிக்குப் புரியவில்லையா? இந்திய இழுவைப் படகுகளின் 30 வருட வருகையால் தொழில் உபகரணங்கள், வலைகள் என்பன சேதம் பல இலட்சம் ரூபாய்களே. வட பகுதி மீனவர்கள் இவ்வாறான இழப்புக்களை தாங்கமுடியாது ஆழ்கடல் மீன்பிடியையும், பழைய மீன்பிடியையும் நிறுத்தியிருக்கின்றோம். எமது சொத்து அழிவுகளும், நிரந்தர சொந்த வீடுகளும் இழந்து யுத்த வடுக்களின் தாக்கங்களும் எமது மீனவ மக்களை தலைநிமிர முடியாது துன்புறுத்துகின்றன.
அரசாங்கமும் பாதுகாப்புப் படத் தரப்பினரும் இந்திய இழுவைப் படகுகளை எமது எல்லைக்குள் வராமல் நிறுத்த முடியவில்லை. மயிலிட்டி மக்களுக்கு மீன் பிடிக்கத் தெரியாது என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது.
தென்பகுதியில் இந்திய இழுவைப் படகுகள் வந்து சிங்கள மக்களுக்கு சேதங்களை உண்டாக்கியிருந்தால் உடனடியாக அரசு தீர்வு கண்டிருக்கும். ஆனால் பாதிக்கப்படுவது வடபகுதி தமிழ் மக்கள்தான் என்றே அரசு பாராமுகமாக இருப்பது எமக்கு நன்றாகப் புரிகின்றது.
இலங்கையின் மொத்த மீன்பிடியில் 1/3 பங்கு மீனை வழங்கியது மயிலிட்டி என்பது ஞாபகமிருக்கட்டும். மீன்பிடிக் கூட்டுத்தாபனத்துக்கு இரு மீன்பிடிக் கப்பல்கள் இருந்தது. அதிலொன்று மயிலிட்டி என்று பெயர் இட்டு மீன் பிடித்தார்கள். இலங்கையின் இரண்டாவது மீன்பிடித் துறைமுகம் எமது வளத்தைப் பெருக்குவதற்காக மயிலிட்டியில் கட்டித் தரப்பட்டது.
தற்காலத்தில் எதிலும் நவீனம், மீன்பிடித்தலிலும் நவீன முறைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்திய இழுவைப் படகுகளை அரசு இலங்கையின் எல்லைக்கு அப்பால் திறமை இருந்தால் நிறுத்திக்காட்டட்டும். எம்மை மயிலிட்டியில் குடியமர்த்தி எம்மக்களின் முயற்சியின் முன்னேற்றத்தை கண்டுகளிக்க ஆயத்தமாக இருங்கள்.
வலி. வடக்கு மீள்குடியேற்றம் சம்பந்தமாக இராணுவமும் அரசும் மீள்குடியேற்ற அமைச்சும் 31 முகாம் மக்களையே குடியேற்றுவதற்கு முயற்சி செய்கின்றது. அதிலும் காணி இல்லாதவர்கள் என்று பிரித்து வெவ்வேறு ஊர்களில் குடியமர்த்த கடும் முயற்சி சில தரகர்களின் உதவியுடன் செய்யப்படுகின்றது. எனினும் நீங்கள் அமைக்கும் வீடுகளும் முகாம்கள்தான் என்பதை திரும்பத் திரும்பக் கூற வேண்டியிருக்கின்றது.
வலி. வடக்கிலிருந்து இடம் பெயர்ந்தவர்களில் 7 ஆயிரம் குடும்பங்களுக்குமேல் முகாம்களுக்கு வெளியில் நண்பர்கள், உறவினர்கள், வாடகை வீடுகள், தரிசு நிலங்கள், இந்தியா, ஐரோப்பிய நாடுகள், இலங்கையின் பல மாவட்டங்களிலும் வாழ்கின்றார்கள். இவர்களைப் பற்றி எந்தச் சிந்தனையும் இல்லாமல் மீள்குடியேற்ற அமைச்சு செயல்படுகின்றது. இந்த வேதனை நீங்க எமது சொந்த காணிகளை தாமதமின்றி வழங்கிவிடுங்கள். 90 வீதமான பிரச்சினை நீங்கிவிடும். இனியும் தாமதித்து எம்மக்களை சாகடிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.
நன்றி: வலம்புரி