விடுவிக்கப்பட்டுள்ள பகுதி காணி உரிமையாளர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு குறித்த பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
இந்நிலையிலேயே விடுவிக்கப்படவுள்ள காணிகளை பார்வையிடுவதற்கும் அவற்றை நேரில் சென்று அடையாளப்படுத்துவதற்கும் காணி உரிமையாளர்களை அழைத்துச் செல்ல படைத்தரப்பு மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.
விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 5 கிராமசேவகர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் முன்பாக ஒன்றுகூடி தங்கள் பகுதி பொறுப்பு கிராம சேவகர்கள் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
5 கிராமசேவகர் பிரிவுகளிலும் விடுவிக்கப்படவுள்ள காணி உரிமையாளர்கள் மட்டுமே இதன்போது அழைத்துச் செல்லப்படுவார்கள். ஏனையவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்குப் பதிலாக
வேறு இடங்களில் குடியேற்றி மீள்குடியேற்றம் முடிந்துவிட்டதாக காட்ட சதி நடப்பதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
குறிப்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இம்மாத இறுதியில் யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையில் வேறு மீள்குடியேற்றப் பிரச்சினைகளுக்கு தாம் தீர்வு கண்டுவிட்டதாக காட்டவே அரசாங்கம் இவ்வாறான துரித சதித்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்க தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவிக்கிறார்.
குறிப்பாக அகதி யாழ்ப்பாணத்தில் உள்ள 30 முகாம்களில் உள்ள காணியற்ற மக்களுக்கு வேறு இடங்களில் காணி வழங்கி வீடுகளை அமைத்துக் கொடுத்து முகாம்களை மூடிவே திட்டமிடப்படுகிறது.
இதனை விடுத்து வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாற்றுக் காணிகள் எங்களுக்கு வேண்டாம். எமது சொந்த நிலங்களே எமக்கு வேண்டும் என பெரும்பாலான வலி.வடக்கு மக்கள் உறுதியாக உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடற்றொழிலாளர்களை அவர்கள் வாழந்த கடலோரங்களை அண்டிய பகுதிகளிலும் விவசாயிகளை அவர்களது விவசாய நிலங்களிலும் தாக் குடியேற்ற வேண்டும்.
அதனை விடுத்து அரசின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நினைத்த இடங்களில் குடியமர்த்தினால் அவர்கள் தொழிலுக்கு எங்கு செல்வது? எனவும் குணபாலசிங்கம் கேள்வி எழுப்புகிறார்.
எனவே, அவசரப்பட்டு அரசாங்கம் பணத்தை வீணடிக்காமல் வலி.வடக்கு மக்கள் அனைவரையும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நன்றி:தமிழ்வின்.கொம்.