- ஜனாதிபதிக்கு மயிலிட்டி மீள்குடியேற்றக்குழு மகஜர் -
யாழ்ப்பாணத்துக்கு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்கள் மீளக்குடியமர மயிலிட்டியை விடுவிக்க வேண்டும். இம்முறையும் ஏமாற்றினால் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபடுவர் என மயிலிட்டி மீள்குடியேற்றக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் அப்படியே வருமாறு.
1990. 06. 15 இல் எமது இடத்தை விட்டு இடம் பெயர்ந்தோம். ஒரு சில கிழமைகளில் நாம் திரும்பவும் வந்து வாழ்வோம் என்ற நினைவுடனேயே இடம் பெயர்ந்தோம். ஆனால் 27 வருடங்களாக ஏதிலிகளாக, அகதிகள் என்ற பட்டப் பெயர் தாங்கி, வறுமை நிலையில் அடிமைகளாக வாழ்வோம் என்று கனவிலும் நினைக்கவில்லை. அப்படித் தெரிந்திருந்தால் எமது உயிர் போனாலும் இடத்தை விட்டு நகர்ந்திருக்க மாட்டோம்.
ஜனாதிபதி அவர்களே, நீங்கள் கருணை உள்ளவர், இரக்கம் கொண்டவர், மனிதம் நிறைந்த தலைவர், சொந்த இடம் விட்டு விலகுவதும் வாழ்வதும் எவ்வளவு துன்பம் தரும் என்பதை உணரக்கூடிய புரிந்துணர்வாளர், நாம் எமது மூதாதையர் தந்த அரைப்பவுண் நகை என்றாலும் அதனை பரம்பரை பரம்பரையாக பேணிப் பாதுகாக்கும் மரபுடையவர்கள். எமது பாட்டன், பூட்டன் வாழ்ந்து எமக்குத் தந்த உரிமை நிலங்களை எப்படிப் பேணி வாழ ஆசைப்படுவோம். அந்தக் காணிகளில் நாம் வாழ முடியாமல் இருந்தால் எவ்வளவு வேதனையும் தாக்கமும் அடைவோம் என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.
1990 வரையில் பலாலி விமானத் தளத்தில் விமானங்கள் நாம் குடியிருந்த பொழுதுதான் ஏறி இறங்கி பயணம் செய்தது. அதனை நாங்கள் சௌகரியக் குறைவென்று சுட்டிக் காட்டியதுமில்லை. நீங்களும் பாதுகாப்பு இல்லையென்று நிறுத்தவுமில்லை. சுமுகமாக பயணங்கள் நடைபெற்றுத்தான் வந்தன.
எனவே, எமது மண்ணின் வளங்கள் தெரியும், எமது உழைப்பும் தெரியும். எம்மை எமது சொந்த இடங்களில் உரிமையுடன் வாழவைத்து பருத்தித்துறையிலிருந்து இ.போ.ச பேரூந்தை (763) காங்கேசன்துறை வரை பாதை திறந்து பயணம் செய்யும் வசதியையும் செய்து தரும்படி தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றோம்.
மீன்பிடியிலும், விவசாயத்திலும் ஈடுபட்டு சிறப்புடன் உழைத்து எமது நாட்டுக்கும், எமது ஊருக்கும் வருமானத்தை ஈட்டித்தர முயல்வோம் என்றும் வாக்குறுதி செய்கின்றோம். நல்லாட்சிக்குத் தலைவராக செயற்படும் நீங்கள் எங்கள் முகாமிற்குத் தேடிவந்து, ஆறுதல் கூறி உங்கள் ஒவ்வொருவரின் உரித்தான காணிகளில் சுதந்திரமாக வாழவைப்பேன் என்று வாக்கு பண்ணிச் சென்றீர்கள். அதனை வேதவாக்காய் ஏற்று காத்திருக்கின்றோம். நீங்கள் வாக்குறுதி தந்த காலமும் நெருங்கி வருகின்றது. எங்கள் மனதில் நம்பிக்கையும் பிறக்கின்றது. அதேவேளை சில அதிகாரிகளின் பேச்சினால் ஏக்கமும் தோன்றுகின்றது.
ஆனாலும் துர்க்கை அம்மன் ஆலயம் முன்பாக எம்மோடு கூட இருந்து உண்ணா நோன்பில் கலந்து, நாம் ஆட்சிக்கு வந்தால் மயிலிட்டி மக்களை அவர்கள் இடத்தில் குடியேற்றுவேன் என்று உறுதியளித்த எமது பிரதமரும், ஆறு மாதத்தில் உங்கள் இடத்தில் குடியேற்றுவேன் என்று நம்பிக்கை தந்த எங்கள் ஜனாதிபதியாகிய நீங்களும் ஒன்றாக ஆட்சியில் இருப்பதால் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம். நீங்கள் விரைவில் யாழ்ப்பாணம் வருகை தரும் போது எங்கள் இடம் முழுமையாக விடுபட்டுவிட்ட செய்தி எமக்குக் கிடைக்கும். உங்களை நாம் அனைவரும் சேர்ந்து நன்றி உணர்வுடன் வரவேற்கக் காத்திருப்போம்.
இம்முறையும் எமக்கு ஏமாற்றம் அழிக்கப்பட்டால் நாம் வீதியில் இறங்கி தொடர் போராட்டம் செய்வோம் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். என்றுள்ளது.