9 ஆம் திகதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு
வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் கடந்த 27 வருடங்களுக்கு மேலாக படையினர் ஆக்கிரமித்துள்ள மயிலிட்டித் துறைமுகம் உட்பட சில பகுதிகளை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக குறித்த பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவம் மற்றும் கடற்படையினர் தமது பாரிய படைமுகாம்களை அங்கிருந்து அகற்றி வருகின்றனர்.
புதிதாக பதவியேற்றுள்ள யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியை மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், பிரதேச செயலர்கள் உள்ளிட்டோர் எதிர்வரும் 9 ஆம் திகதி சந்திதுப் பேசவுள்ளனர். வலி.வடக்கில் மயிலிட்டி உள்ளிட்ட யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்தல் தொடர்பில் அவர்கள் இதன்போது பேசவுள்ளனர்.
இந்நிலையில் இச்சந்திப்பின் பின் மயிலிட்டித் துறைமுகம் உட்பட மேலும் சில பகுதிகளை விடுவிப்பது குறித்த அறிவித்தல் விடுவிக்கப்படும் என மற்றைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக வலி.வடக்கில் இருந்து அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் சொந்தக் காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் வாழ்வாதார ரீதியில் ஒடுக்கப்பட்டு, தற்போதுவரை நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 27 வருடங்கள் கடந்த நிலையிலும் இப்பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. குறிப்பிட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்ட போதிலும், பெருமளவான மக்களின் சொத்துக்கள் இன்னமும் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு அங்கு நிலைகொண்டுள்ள படையினர் தமது தேவைக்காக அக்காணிகளை சட்ட ரீதியாக சுவீகரிக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், மக்களுடைய எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அது நிறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பகுதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு அதில் மக்கள் மீழ்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கையகப் படுத்தி வைக்கப்பட்டுள்ள மயிலிட்டி மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்கள், மயிலிட்டி, பலாலி போன்ற மக்கள் குடியிருப்புக் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி வலி.வடக்கின் அடுத்தகட்ட காணி விடுவிப்பின் போது மயிலிட்டித் துறைமுகம் உட்பட படையினர் வசமுள்ள முக்கிய பகுதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- தினக்குரல்