வலி. வடக்கு மயிலிட்டித் துறைமுகம் கடற்படையினரின் கட்டுப் பாட்டில் இருப்பதால் இதனை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சே நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் இந்தத் துறைமுகத்தை விடுவித்து மக்களிடம் கையளிக்க என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள மயிலிட்டி துறைமுகத்தை அந்தப் பகுதி மக்களுடன் சென்று அமைச்சர் பார்வையிட்டார்.
அமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.
துறைமுகப் பகுதியைப் பார்வையிட்டு அப்பகுதி மக்களுடன் பேசிய பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர், மயிலிட்டித் துறைமுகத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மக்கள் தமது சொந்த இடத்தில் முன்னர் வாழ்ந்த வாழ்வையும் இப்போது அவர்களின் நிலைமையும் அறிந்துகொண்டுள்ளேன். துறைமுகத்தை விடுவித்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுக்கவுள்ளேன் எனவும் தெரிவித்தார்.
இலங்கையின் மொத்த கடலுணவு உற்பத்தியில் அதிகளவு பங்களிப்பை மயிலிட்டி கடற்றொழிலாளர்கள் செய்து வந்தனர்.1990ம் ஆண்டுவரை சுமார் 450 வரையான படகுகள் அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டன. ஆனால் இந்த மக்கள் இடம் பெயர்ந்து தற்போது துன்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதை தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் சுட்டிக்காட்டினர்.
போருக்குப் பின்னரும் துறைமுகத்தை மக்களிடம் வழங்காமலிருப்பது முறையற்றது. துறைமுகத்தை வியாபார தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மக்களுடைய மீன்பிடி தொழிலுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகின்றது. எனவே, மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேறவும், அவர்கள் தங்கள் பாரம்பரிய கடற்றொழிலை சுதந்திரமாகச் செய்யவும் ஆவன செய்யவேண்டும் எனவும் கூட்டமைப்பு எம்.பிக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந் நிலையில் துறைமுகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.