இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்பாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஏ.டபில்யூ. ஜே.சி.டி சில்வா இணக்கம் தெரிவித்தார்.
இதில் பிரதமர் ரணில் விக்கிர மசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மீள்குடிய மைச்சர் டி.என்.சுவாமிநாதன், அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இராணுவத்தளபதி தயாரட்ணாயக்கா மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோர் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
காணிகள் விரைவில் மக்களிடம் மீளக்கையளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர். பதிலளித்த இராணுவத் தளபதி, வலி.வடக்கில் இராணுவத்தினர் முதற்கட்டமாக விடுவிப்பதற்கு இணங்கிய ஆயிரம் ஏக்கர்களில் எஞ்சிய 590 ஏக்கர் நிலப்பரப்பு உடனடியாக மக்களிடம் ஒப்படைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
அத்தோடு முகாம்கள் மற்றும் அவசியமான படைநிலைகள் அமைந்துள்ள பகுதிகளைத் தவிர ஏனைய பெரும்பாலான பகுதிகளை மக்களிடம் மீள ஒப்படைப்பதற்கும் இணக்கம் தெரிவித்தார்.
மயிலிட்டி துறைமுகம் போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் மிக்க பகுதிகளை ஒப்படைப்பது குறித்து தாம் தொடர்ந்தும் கவனம் செலுத்துவார் என்றும் உறுதியளித்தார்.
சம்பூர் மீளளிப்பு
சம்பூரில் அனல் மின் நிலையம் அமையவுள்ள பகுதி தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளை விடுவிப்பதற்கும் இணக்கம் எட்டப்பட்டது. ஏற்கனவே விடுவிக்கப்படுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட 898 ஏக்கர் நிலப்பரப்புக்கு மேலதிகமாக கடற்படை முகாம் அமைந்துள்ள 217 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்படும் என்று கடற்படைத் தளபதி உறுதியளித்தார்.
முகாமை மாற்றியமைப்பதற்கான நிதி அரசிடம் இருந்து கிடைக்கப்பெற்றதும் அந்த இடத்தில் இருந்து முகாமை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து உடனடியாக அந்த நிதியை வழங்குவதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடற்படைத் தளபதிக்கு உறுதியளித்தார். இதேவேளை, மன்னாரில் பரவிப்பாஞ்சான், சிலாவத்தை, கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான், முல்லைத்தீவில் கேப்பாபிலவு ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் காணிகளும் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
வலி.வடக்கு மற்றும் சம்பூர் மீள்குடியமர்வுகள் முடிவடைந்ததும் படிப்படிப்படியாக ஏனைவற்றையும் மீளளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி உறுதியளித்தார்.
நன்றி: உதயன்.கொம் செய்திகள்