
இக்காணி விடுவிப்பின் முதற்கண்ட நடவடிக்கையாக குறித்த பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவம் மற்றும் கடற்படையினர் தமது பாரிய படைமுகாம்களை அங்கிருந்து அகற்றி வருகின்றனர்.
குறித்த பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்தல் மற்றும் ஏனைய பகுதிகளிலான மீள்குடியேற்றம் தொடர்பில் புதிதாக பதவியேற்றுள்ள யாழ்.கட்டளை தளபதியுடன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் மற்றும் பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடனாக சந்திப்பு எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இச் சந்திப்பின் பின் மயிலிட்டி துறைமுகம் உட்பட மேலும் சில பகுதிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கு விடுவிக்கப்படுவதற்கான இறுதியறிவிப்பு விடுக்கப்படும்.
கடந்த 1090 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக வலி.வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இதுவரையில் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் சொந்தக் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் வாழ்வாதார ரீதியில் ஓடுக்கப்பட்டு, தற்போதுவரை நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டு அங்கு நிலை கொண்டுள்ள படையினர் தமது தேவைக்காக அக் காணிகளை சட்ட ரீதியாக சுவீகரிக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் மக்களுடைய எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அவை நிறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பகுதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு அதில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கம் பதியேற்ற பின்னரும் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து ஒரு தொகுதி நிலங்கள் மக்களுடைய பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மயிலிட்டி மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்கள் மயிலிட்டி, பலாலி போன்ற மக்கள் குடியிருப்புக் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியான கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி வலி.வடக்கின் அடுத்த கட்ட காணி விடுவிப்பின் போது மயிலிட்டி துறைமுகம் உட்பட, படையினர் வசம் உள்ள முக்கிய பகுதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மயிலிட்டி துறைமுகத்தினையும், அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்களுடைய குடியிருப்புக் காணிகளுக்குள்ளும் படைமுகாம்களை அமைத்து நிலை கொண்டுள்ள படையினர் அப்படை முகாம்களை அகற்றும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்றார்கள்.
குறிப்பாக அங்கிருந்து அகற்றப்படும் படைமுகாம்களை வேறு மாவட்டங்களுக்கு மாற்றுவதற்கான அங்கிருந்து பொருட்களை ஏற்றிச் செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது.
மயிலிட்டியில் இருந்து அகற்றப்படும் படைமுகாம்களில் உள்ள பொருட்கள் பளை பிரதேசம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு நகர்த்திச் செல்லப்படுகின்றது. இதன் ஊடாக மயிலிட்டி துறைமுகம் உட்டபட மக்களின் குடியிருப்பு காணிகள் பெரும்பகுதி மிக விரைவில் விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றதை அறிய முடிகின்றது.
யாழருவி நிருபர் வேலவன்