வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வரும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களுக்கான உலர் உணவு வழங்கும் நடவடிக்கையை கடந்த 3 வருடங்களாக அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ள நிலையில் நேற்றையதினம் 84 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
பட்டினிச்சாவினை எதிர்கொண்டுள்ள வலி.வடக்கிலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நலன் புரிநிலையங்களில் தங்கிவாழ்ந்து வரும் மக்களுக்கு நிவாரணத்தையாவது வழங்குமாறு அந்த மக்கள் சார்பாக அரசிடம் பலமுறை கோரி க்கை விடுக்கப்பட்டபோதும் அரசாங்கம் அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரனின் கவனத்திற்கு மேற்படி விவகாரம் கொண்டுவரப்பட்ட நிலையில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஊடாக நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள் ளது என்றும் நேற்றைய தினம் முதற்கட்டமாக 84 குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டதாகவும் மிகுதி 20 குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவுள்ளதா கவும், இதேவேளை நலன்புரி நிலையத்திலுள்ள ஏனைய மக்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக்குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்தார். மேலும் தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் உடுவில் கிளையில் வைத்து நேற்றைய தினம் நிவாரணம் வழங்கப்பட்ட போது வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள், வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர், வடக்கு மாகாண முதலமைச்சரின் கணக்காளர் உள்ளிட்ட பலர் பங்குகொண்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கடந்த 24 வருடங்களுக்கு முன்னர் தமது சொந்த இடங்களைவிட்டு இந்த மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. |