வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பகுதியில் மீள்குடியேற்றம் தொடர்பில் பிரதமர் தலமையில் உயர் மட்டக் கூட்டம் நேற்று பலாலியில நடைபெற்றது.
முப்படைகளின் மாவட்ட பொறுப்பதிகாரிகள், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், மத்திய அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், மாவட்டச் செயலர், பிரதேச செயலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், முப்படையினர் இணைந்து பேசுவதன் ஊடாக எந்தெந்த பகுதிகளில் நிலங்களை விடுவிக்க முடியும் என்ற தீர்மானத்தை எடுகுமாறு இதன்பொது முப்படையினர் மற்றும் அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
பலாலி விமான நிலையம், காங்கேசன்துறைத் துறைமுகம், மயிலிட்டி துறைமுகம் ஆகியவற்றுக்கு எவ்வளவு நிலம் தேவை என்பதை அறிந்து அது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர், மாவட்டத்திலுள்ள மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் படையினர் பேசித் தீர்மானத்தை எடுக்கவேண்டும். அதனை விரவாகச் செய்யவேண்டும் எனவும் பிரதமர் முப்படை அதிகாரிகளைப் பணித்தார்.
மேலும் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட ஆலயங்களை அடையாப்படுத்தி அவற்றில் தினசரி பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறும் பிரதமர் பணித்தார்.
இதேவேளை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை தொடர்ந்தும் இயக்குவதா? இல்லையா? என்பதை யாழ்.மாவட்ட மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் பிரதமர் கூறினார்.