வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் அல்லது முகாம் பகுதி என்ற ரீதியில் இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காணிகளைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ளது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் தாம் தொடர்ந்து அல்லல்பட்டும் துன்பப்பட்டும் வருவதாக வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர். வலி. வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் ஒரு பகுதியினர் இன்னமும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பவில்லை. அவர்களின் கிராமங்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் போர் முடிவடைந்த பின்னர் கூட அந்தப் பகுதிக்குத் தமிழ் மக்களால் திரும்பிச் செல்ல முடியவில்லை. அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும், நலன்புரி நிலையங்களிலும் வசித்து வருகின்றனர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி திடீரென ஒரு அறிவித்தல் வலி.வடக்கு பாதுகாப்பு முன்னரங்க வேலியை ஒட்டிய இடத்தில் ஒட்டப்பட்டது. பாதுகாப்பு அணை உருவாக்கப்பட்டுள்ள இடத்திற்கு உட்புறமாக இருக்கும் காணிகள் அனைத்தும் சுவீகரிக்கப்பட உள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 24 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 6 ஆயிரத்து 381 ஏக்கர் நிலப்பரப்பையும் இராணுவத்தின் தேவைக்காகச் சுவீகரிப்பதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது.இதனை எதிர்த்தும் தமக்குத் தமது சொந்தக் காணிகள் வேண்டும் என்று கேட்டும் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். சுவீகரிப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும் அது தொடர்பில் தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படாதது விசனமளிப்பதாக மக்கள் கூறுகின்றனர். ""காணி சுவீகரிப்புக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டு அதற்கு எதிராக நாம் வழக்குத் தாக்கல் செய்து பல மாதங்கள் உருண்டோடி விட்டன. வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் கூட எமது காணிகளைத் தாம் சுவீகரித்துவிட்டதான தோரணையில் இராணுவத்தினர் பேசி வருகின்றனர். நாம் தொடர்ந்தும் அல்லல்பட்டுத் துன்பப்பட்டுக் கிடக்கிறோம். எமக்கு எமது சொந்தக் காணிகள் திரும்ப வேண்டும். காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் திரும்பப் பெறப்பட்டு அந்தக் காணிகள் திருப்பி வழங்கப்பட வேண்டும்'' என்றார் வலி. வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம்.
0 Comments
Leave a Reply. |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|