இவ்வாறானதொரு நிலையில், யாழ்.மாவட்டத்தின் புதிய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் உதயபெரேரா, வலி.வடக்கு மக்களை அவர்களது சொந்த இடங்களிலேயே குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து 7 சுற்றுப் பேச்சு நடத்தியிருந்தார். இறுதியில் புதிய இராணுவத் தளபதியும், வலி.வடக்கு மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த முடியாது என்று கைவிரித்திருந்தார்.
வலி.வடக்கு மக்களை அக்கரையில் "மாதிரிக் கிராமம்' அமைத்து குடியேற்றப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதற்குரிய ஏற்பாடுகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதுடன், யாழ்.மாவட்டச் செயலகத்தினாலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்.மாவட்டத்தில் வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள 38 நலன்புரி நிலையங்களில் 4 ஆயிரம் குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களில் 200 குடும்பங்களே அக்கரை மாதிரிக் கிராமத்தில் குடியமரச் சம்மதித்திருந்தனர்.
இதனையடுத்து, ஒவ்வொரு நலன்புரி நிலையங்களிற்கும் சென்ற இராணுவத்தினர், அக்கரையில் சகல வசதிகளுடனும் வீடுகள் அமைத்து தரப்படும். அங்கு சென்று குடியேறுவதற்கு பெயர்களைப் பதிவு செய்யுமாறு கோரியிருந்தனர். இருப்பினும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. ""எங்களை சொந்த இடங்களிலேயே குடியமர்த்துங்கள். இன்னுமொரு முறை நாங்கள் இடம்பெயரத் தயாரில்லை. எங்களுக்கு எங்கள் சொந்த நிலமே வேண்டும்'' என்று இராணுவத்தினரிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர் என்று தெரியவருகின்றது.