சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த வலி.வடக்கு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள 11 நலன்புரி நிலையங்களிலுள்ள 160 குடும்பங்கள் கடுமையான பட்டினி நிலைமையை எதிர்நோக்கியுள்ளன. அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களை உடன் வழங்குவதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன் வர வேண்டும் என்று கோருகின்றார் வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம்.
அவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்வதற்கு தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்குப் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசால் வழங்கப்பட்டு வந்த உலர் உணவு நிவாரணமும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் கல்லுடைக்கும் தொழில், நெல் அருவி வெட்டுதல், களை பிடுங்குதல் மற்றும் வெங்காய அறுவடைத் தொழில் போன்றவற்றைச் செய்தே தமது குடும்பங்களைக் கொண்டு நடத்துகின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நெல் மற்றும் வெங்காயச் செய்கை பாதிப்படைந்துள்ளன. அதனால் அவர்களது தொழில் வாய்ப்புக்கள் மந்தமாகியுள்ளன. அதையடுத்து அவர்கள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பலத்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்
இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
"தற்போது 11 நலன்புரி நிலையங்களிலுள்ள 160 குடும்பங்களுக்கு அவசரமாக உதவி தேவைப்படுகின்றது. இந்தக் குடும்பங்களில் பெரும்பாலானவை கணவனை இழந்த பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டதுடன், விசேட தேவையுடையவர்களையும் கொண்ட குடும்பங்களாகும். அவர்களுக்கு அவசர தேவையாகவுள்ள உலர் உணவுப் பொருள்களை இலங்கை அரசு அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள் உடனடியாக வழங்கவேண்டும். இதே நிலைமை தொடர்ந்து நீடிக்குமானால் அவர்கள் பட்டினிச்சாவை எதிர் நோக்கக் கூடிய அபாயகரமான நிலை ஏற்படும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி: உதயன் பத்திரிகை