மயிலிட்டி மக்களுக்கு கடல் அன்னை வாரி வாரி இறைத்துக் கொடுத்தாள். மயிலிட்டியில் மீன்பிடித் தொழில்துறை முதலாளிகளுக்கு உதவியாளர்களாக பணிபுரிவதற்கென்றே வேறு இடங்களிலிருந்தும் பலர் இங்கு வருவார்கள். அப்படிக் கோலோச்சிக் கொண்டிருந்த துறைமுகம் மயிலிட்டி.
1990ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்றுவந்த போர் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டிருந்தது. தற்காலிகமாகத் தானே இடம்பெயர்கிறோம் என்ற எண்ணத்தில் மூன்று நாள்களில் ஊர்திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையுடன் தமது பொருள் பண்டங்களை போட்டது போட்டபடி விட்டுவிட்டு வெளியேறியவர்கள் மயிலிட்டி மக்கள். ஆனால் அது அவர்களுக்கு கனவாகிப் போனது. 2009ஆம் ஆண்டு வரை போர் உச்சம். மயிலிட்டி விடு விக்கப்படும் என்பதும், மயிலிட்டித்துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்று மீன்பிடிக்கலாம் என்பதும் நினைத்துப் பார்க்க முடியாததாகவே இருந்தது.
போர் முடிந்த பின்னர் வலி.வடக்கில் திக்குத் திக்காக சில பகுதிகள் விடுவிக்கப்பட்டன. 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் வலி.வடக்கில் 6 ஆயிரத்து 384 ஏக்கர் நிலப் பரப்பு விடுவிக்கப்படவே மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர்தான் வலி.வடக்கு காணி விடுவிப்புக்கான போராட்டம் தீவிரமானது. வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவராக இருந்த அ.குணபாலசிங்கமும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினரும் இணைந்து பரவலாகப் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
அப்போது அரச தலைவராக இருந்தவர் மகிந்த ராஜபக்ச. அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் டக்ளஸ் தேவானந்தா. மகிந்தவின் செல்லப்பிள்ளையாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளராக இருந்தவர் அங்கஜன் இராமநாதன்.
போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல், போராட்டங்களுக்கு மக்களை ஏற்றி வந்த சிற்றூர்திகளின் கண்ணாடி உடைப்பு, கழிவு ஒயில் வீச்சு, மக்களை சிற்றூர்தி களில் ஏற்றி வரும்போது வீதியில் முள்தைத்த பலகை வைத்தல் என்று போராட்டத்தை ஒடுக்குவதற்கான பலம் பயன்படுத்தப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களுக்கு நேரடியாகச் சென்று கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட் டன
மயிலிட்டி உள்ளிட்ட காணிகள் விடுவிக்கப்படாது என்று அரசிதழ் அறிவிப்பு வெளியானபோது ஏன் என்று கேள்வி கேட்காதவர்கள், போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது கண்டிக்காது கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள், இப்போது மயிலிட்டி விடுவிப்புக்கு உரிமை கோருகின்றார்கள். வீதிகள் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டுகின்றார்கள்.
இதைதான் ஊர் வழக்கத்தில் சொல்லுவார்கள், ‘‘சூரியனும், சந்திரனும் பேசாமல் இருக்க விளக்கு விளம்பரம் தேடிச்சாம்’’ என்று!
நன்றி: உதயன் சிறப்புக் கட்டுரை
தொகுப்பு: நமதுமயிலிட்டி.கொம்