மயிலிட்டிச் சந்தி வரைதான் விடுவார்கள் துறைமுகம் விடமாட்டார்கள் என்றே பலர் எண்ணியிருந்தோம். மாறாக மேற்கிலிருந்து காசநோய் வைத்தியசாலை நிலம், துறைமுகம், கண்ணகை அம்மன் கோவில், முருகன் கோவில் என குறுகிய நிலப்பரப்பிலடங்கிய அனைத்தையும் விடுவித்திருக்கின்றார்கள்.
கிட்டத்தட்ட 27 வருட காலத் தவம் முடிவுக்கு வந்திருக்கிறது. இனியொருபோதும் மீட்கவே முடியாதோ என்று அச்சப்பட்ட நிலம் ஒருவாறு மீண்டும் மக்களின் கைகளுக்குத் திரும்பி வந்துள்ளது.
தமிழர்களின் அரசியலில் அண்மைக் காலத்தில் அடைந்திருக்கக்கூடிய மிகப் பெறுமதிமிக்க அடைவு இது. தற்போதைய அரசியல் சூழலில் அதன் அரசியல் பெறுமதி உணரப்பட்டிருக்கிறதா என்பது கேள்விக்குரியதுதான்.
சில நாள்களில் படையினர் தமது முகாம்களுக்குத் திரும்பி விடுவர் என்ற எதிர்பார்ப்பிலேயே போட்டது போட்டபடி விட்டுவிட்டுப் புறப்பட்டார்கள் அந்த மக்கள். ஏனெனில் அதுவரையான விடுதலைப் போராட்ட வரலாற்றில் தரைப் படையினர் தமது முகாம்களில் இருந்து முன்னேறிவந்து தாக்குவதும் திரும்பிப் போவதுமான போர் உத்தியைத்தான் பயன்படுத்தி வந்தார்கள்.
ஆனால் எதிர்பார்ப்புகளை எல்லாம் பொய்ப்பித்துத் தாம் பிடித்த நிலத்தை நிரந்தரமாகத் தக்க வைத்துக்கொண்டனர் படையினர். விடுதலைப் போராட்டத்துக்குப் பின்னரான காலத்தில் தமிழர்களின் நிலம் நிரந்தரமாக ஆக்கிரமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாக அது அமைந்தது. அந்தத் துறைக்கு மீள, மக்கள் 27 வருடங்கள் கடும் தவம் இருக்க வேண்டியிருந்தது.
மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மல்லாகத்தில் இடைத் தங்கல் முகாம்களில் அமர்த்தப்பட்டனர். கணிசமானோர் வடமராட்சிப் பகுதிக்குச் சென்றார்கள். போர்க் காலத்திலும் போரின் பின்னரான காலத்திலும் உள்ளுரில் இடம்பெயர்ந்தவர்களின் குறியீடாக நீண்ட காலமாகத் திகழ்ந்தவர்கள் இந்த மக்கள்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹுசைன், பிரிட்டனின் தலைமை அமைச்சராக இருந்தவரான டேவிட் கெமரூன் ஆகிய தலைவர்கள்கூட இந்த முகாம்களுக்கு வந்து இங்குள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களின் மீள்குடியேற்றம் குறித்து வலியுறுத்தும் அளவுக்கு இவர்களின் பிரச்சினை உலகமயப்பட்டிருந்தது.
பன்னாட்டு அழுத்தங்கள், போராட்டங்கள் என்று எல்லாவற்றுக்கும் மத்தியிலும் மயிலிட்டியைப் படையினர் விடுவிப்பார்கள் என்று சில வருடங்களுக்கு முன்னர் எவருமே நம்பியதில்லை. நம்புவதற்கான வாய்ப்புகளும் இருந்ததில்லை.
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வரை மயிலிட்டி மக்களுக்கேகூட அந்த நம்பிக்கை வலுவாக இருந்தது என்று சொல்ல முடியாது. தமது இடத்திற்கு எப்படியாவது போகவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அதற்காக அவர்கள் தம்மை ஒறுத்துத் தவம் கிடந்தார்கள். ஆனால் நம்பிக்கை மிகச் சிறிதாகவே இருந்தது.
‘‘மயிலிட்டியை அண்டிய பகுதி வரைக்கும் விடுவார்கள். ஆனால் மயிலிட்டியை விடமாட்டார்கள் போலத்தான் கிடக்கிறது’’ என்று சொன்னவர்கள் பலரை கடந்த காலங்களில் பார்க்க முடிந்திருக்கிறது. இன்று அந்த மண்ணில் கால் பதித்து மக்களால் ஆடிப் பாட முடிந்திருக் கிறது. ஆனந்தக்கூத்தாட முடிந்திருக்கிறது.