தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.ரில்கோ விருந்தனர் விடுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது சொந்த நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்கள் ஆகிவிட்டன இதுவரைக்கும் எனது குடும்பம் மாத்திரம் 16 வீடுகள் மாறி இருக்கின்றோம்.
கடந்த 90ம் ஆண்டு முதல் எமது நிலங்களில் எம்மை குடியமர்த்த கோரி சத்தியாகிரக போராட்டம் முதல் பல போராட்டங்களை நடாத்தி இருக்கின்றோம்.
தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கூட தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலில் முன்றலில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்தார்.அப்போது அவர் கூறினார் போர் நடவடிக்கைக்காக தான் காணிகளை இராணுவ தேவைக்காக கையகப்படுத்தி வைத்துள்ளனர். போர் முடிந்து விட்டது தானே இனி அந்த காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி இருந்தார்.
தற்போது அவர் பிரதமராக இருக்கின்றார் எமது காணிகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவர் போராட்டத்தில் கலந்து கொண்டு சென்ற சில நிமிடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம் மீது சிலர் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். அவர்களில் ஒருவரை நாம் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்து இருந்தோம் ஆனால் இதுவரை நாம் பிடித்து கொடுத்த அந்த நபருக்கு என்ன நடந்தது என எதுவும் தெரியவில்லை.
வடக்கு, கிழக்கு மலையக மக்கள் நாம் அனைவரும் இன்றும் ஒற்றுமையுடனேயே வாழ்கின்றோம் இன்றும் நாம் தான் இந்த நாட்டிலே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தமிழ் மக்கள் வாக்களித்ததால் தான் ஜனாதிபதியானேன் எனவே அவர்களை நான் மறக்க மாட்டேன் என கூறி வருகின்றார். தனியே மறக்க மாட்டேன் மறக்க மாட்டேன் என கூறுவதால் பயனில்லை எமது காணிகளை விடுவித்து ஜனாதிபதியை தமிழ் மக்கள் வாழ் நாள் முழுவது மறக்காது இருக்க செய்ய வேண்டும்.
பிரிட்டன் பிரதமர் எமது முகாமுக்கு வந்து விரைவில் நீங்கள் உங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவீர்கள் என கூறி சென்றார். இன்று அவர் கூறி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன.மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் 'இராணுவம் தான் மீள் குடியேற்றத்திற்கு தடையாக இருக்கின்றது என ஊடகங்களுக்கு கூறி தனது முகத்திலும் நல்லாட்சி என சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்தின் முகத்திலும் கரியை பூசியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் உள்ளார் அவர் இந்த அரசாங்கத்துடன் பேசி எங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பாரா அல்லது அவரும் இராணுவத்தை சாட்டிக்கொண்டு இருக்க போகின்றாரா ?
எமது குடும்ப அட்டைகளை மீள் ஆய்வு செய்ய போகின்றோம் என கூறி கிராம சேவையாளர்கள் ஊடக பிரதேச செயலகங்கள் பெற்று 'இ' அட்டைகளை அனைத்தும் 'அ ' அட்டைகளாக மாற்றி தந்து எமக்கான இடம்பெயர்ந்தோர் நிவாரணத்தை வெட்டி விட்டார்கள்.
எதற்காக எமது நிவாரணத்தை வெட்டினீர்கள் என கேட்டால் நீங்கள் அனைவரும் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு விட்டீர்கள் என கூறினார்கள். அப்ப இந்த முகாம்களில் வசிக்கும் மக்கள் நாங்கள் யார் ? என நாங்கள் திருப்பி கேட்டால் அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள்
எம்மை விரைவில் எமது சொந்த இடங்களில் மீள் குடியேற்ற வேண்டும் இல்லை ஏனெனில் "எமது நிலம் எமக்கு வேண்டும்" என்ற கோரிக்கையுடன் ஒரு கையில் காணி உறுதி மறுகையில் வெள்ளை கொடியுடன் உயர் பாதுகாப்பு வலயம் என அடைக்கப்பட்டு உள்ள முள் வேலிகளை தாண்டி நாங்கள் சென்று எமது காணிகளில் குடியேறுவோம்.என தெரிவித்தார்.
நன்றி: உதயன்.கொம்